மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 18 ஜன 2021

ரஜினியை விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு!

ரஜினியை விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினியை நேரில் அழைத்து விசாரணை செய்ய வாய்ப்பு இருப்பதாக விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் நேற்று (ஜனவரி 25) கூறியுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என 2018ஆம் ஆண்டு நடந்த போராட்டம் அதே ஆண்டு மே 22ஆம் தேதி உச்சக்கட்டத்தை எட்டியது. இந்தப் போராட்டத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையத்தின் 18ஆம் கட்ட விசாரணை கடந்த 22ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் தற்போது வரை 445 பேரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 704 பேருக்குச் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 445 பேரிடம் மட்டுமே விசாரணையை நிறைவு செய்துள்ளது. இதில் 650 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வர கூடிய காலகட்டத்தில், அடுத்த கட்ட விசாரணையில் உடல் கூறாய்வு செய்த மருத்துவர்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் இருக்கும் குடியிருப்பாளர்கள், துப்பாக்கிச் சூடு நடந்தபோது காயமடைந்த காவல் துறையினர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர், “மாவட்ட ஆட்சியரிடம் சிசிடிவி காட்சிகள் கேட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பலமுறை நினைவூட்டப்பட்டுள்ளது. இருப்பினும் மாவட்ட நிர்வாகம் காலம் கடத்துகிறது. சிசிடிவி காட்சிகளை வழங்கிய பிறகு அதில் உள்ள நிகழ்ச்சிகளை ஆராய்ந்து, பின் அதில் உள்ள நபரை அடையாளம் கண்டு விசாரணை ஆணையம் அடுத்த கட்ட விசாரணையை மேற்கொள்ளும். அரசுத் துறையைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் வழங்கப்படவில்லை. துப்பாக்கிச் சூடு குறித்து விமர்சனம் செய்த ரஜினியையும் விசாரிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் காரணமாக ரஜினி அளித்த பேட்டியை ஆராய்ந்து பரிசீலனை செய்து அவரை விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு உள்ளது” என்று கூறியுள்ளார்.

முன்னதாக துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களைச் சந்திக்க மருத்துவமனைக்குச் சென்ற ரஜினி நிருபர்களிடம் கூறும்போது, “போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டனர். மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் போலீசாரைக் குற்றம்சாட்டுவது தவறு. போலீசைத் தாக்கியவர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை உலகுக்கு அடையாளம் காட்ட வேண்டும். ஒருநபர் ஆணையத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 26 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon