மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 5 ஆக 2020

குரூப் 4 முறைகேடு : அரசு ஊழியர்கள் இடைநீக்கம்!

குரூப் 4 முறைகேடு : அரசு ஊழியர்கள் இடைநீக்கம்!

குரூப் 4 முறைகேடு விவகாரத்தில் அடுத்தடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இடைத்தரகர்களாகச் செயல்பட்ட இரு அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரு மையங்களில் நடந்த முறைகேடு விவகார வழக்கில் அடுத்தடுத்து பலர் கைதாகி வருகின்றனர். இவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் அனைத்து மாவட்டங்களிலும் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் சிபிசிஐடி போலீசார்.

இந்நிலையில் நேற்று இடைத்தரகராகச் செயல்பட்ட சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஓம்காந்தன் என்பவரைக் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து மின்னம்பலத்தில் [ராமநாதபுரம்-சென்னை: குரூப்-4 விடைத்தாள்கள் மாற்றப்பட்டது எப்படி?](https://minnambalam.com/public/2020/01/26/132/cpcid-investigation-ongoing-in-group-4-exam-Abuse0 என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் சிலர் கைதாக வாய்ப்பிருப்பதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இடைத்தரகர்களுக்கு லட்சக் கணக்கில் பணம் கொடுத்த தேர்வர்கள் பட்டியல் தயாராகி வருவதாகவும் இதில் 50 பேர் வரை கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றி வந்த ரமேஷ் மற்றும் எரிசக்தித் துறையில் பணியாற்றி வந்த முத்துக்குமரன் ஆகிய இரு இடைத்தரகர்களையும் பணியிடை நீக்கம் செய்து அந்தந்த துறை தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

திங்கள், 27 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon