மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 5 ஆக 2020

நிர்பயா குற்றவாளி மனு: அவசர வழக்காக விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்!

 நிர்பயா குற்றவாளி மனு: அவசர வழக்காக  விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்!

நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு ஜனவரி 22ஆம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டிருந்தது. இதனிடையே குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் கருணை கேட்டு ஜனவரி 17ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு மனு அளித்திருந்தார். எனவே தூக்குத் தண்டனை வரும் பிப்ரவரி 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. எனினும் தண்டனையைத் தாமதப்படுத்தக் குற்றவாளிகள் முயன்று வருகின்றனர்.

இந்த சூழலில் முகேஷ் சிங் அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்கக் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 25ஆம் தேதி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு இன்று (ஜனவரி 27) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ஒருவர் தூக்கிலிடப்பட உள்ளார் என்றால், அதை விட அவசர வழக்கு வேறு எதுவும் இல்லை. தூக்கிலிடப்படும் குற்றவாளிகளின் மனுக்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தெரிவித்து இந்தவழக்கைப் பட்டியலிடுவது தொடர்பாகப் பதிவாளரிடம் சென்று முறையிடுமாறு வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தினார்.

தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில் இந்த மனுவை அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது. இதன் மூலம் தண்டனை நிறைவேற மீண்டும் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

திங்கள், 27 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon