மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 5 ஆக 2020

ஏர் இந்தியா வாங்கலையோ ஏர் இந்தியா...: மொத்தத்தையும் விற்கும் மத்திய அரசு!

 ஏர் இந்தியா  வாங்கலையோ ஏர் இந்தியா...: மொத்தத்தையும் விற்கும் மத்திய அரசு!

ஏர் இந்தியாவின் மொத்த பங்குகளையும் விற்க மத்திய அரசு இன்று (ஜனவரி 27) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2018ல் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் பலன் கிடைக்காததால் இரண்டாம் கட்ட முயற்சியை ஏர் இந்தியா எடுத்துள்ளது.

நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்கக் கடந்த இரு ஆண்டுகளாக மத்திய அரசு தீவிர முயற்சி காட்டி வருகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஏர் இந்தியா விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் ஏர் இந்தியாவை விற்பதற்கான இரண்டாம் கட்ட முயற்சியை மத்திய அரசு எடுத்துள்ளது. 2018ல் ஏர் இந்தியாவின் 76 சதவிகித பங்குகளை விற்க அறிவிப்பு வெளியிட்டு அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வந்த நிலையில் அதனை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் இரண்டாம் கட்ட முயற்சியாக 100 சதவிகித பங்கையும் விற்பதாக அறிவித்துள்ளது.

இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 100 சதவிகித இணைப்பு நிறுவனமான AISATS-ன் 50 சதவிகித பங்குகளும் விற்கப்படும் . இதனை வாங்க நினைக்கும் நிறுவனங்கள் வரும் மார்ச் 17 ஆம் தேதிக்குள் விருப்ப விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எந்தவொரு ஏலதாரரும் ஆவணத்தின் படி, சுமார் 3.26 பில்லியன் டாலர் (ரூ.23,286 கோடி) கடனை மற்ற கடன்களுடன் ஏற்றுக்கொள்ள ஒப்புக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 மார்ச் மாத இறுதியில் ரூ .55,000 கோடியாக இருந்த விமான நிறுவனத்தின் கடன் 2019 மார்ச் மாத இறுதியில் ரூ.58,351.93 கோடியாக உயர்ந்தது. தற்போது, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் மொத்த கடன் ரூ .60,074 கோடியாக உள்ளது. இதில் ரூ. 27,000 கோடி கடனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பாஜக எம்.பி. சுப்பிரமணிய சுவாமி, அரசின் இந்த நடவடிக்கை என்பது தேச விரோத செயல் ஆகும். இதை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்வேன்” என்று கூறியுள்ளார்.

திங்கள், 27 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon