மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 5 ஆக 2020

சட்டவிரோத பேனர்: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன்?

சட்டவிரோத பேனர்: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன்?

சட்டவிரோத பேனர் வழக்கில் அரசியல் கட்சிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சட்ட விரோத பேனர்களுக்கு எதிரான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரணையிலிருந்து வருகிறது. இந்நிலையில் சட்ட விரோத பேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பான வழக்கு ஆகியவை இன்று (ஜனவரி 27) நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில், தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சுபஸ்ரீ வழக்கில் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள், சுபஸ்ரீ உயிரிழப்புக்கு முன்பு சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தற்போதைய நிலை என்ன என்று கேள்வி எழுப்பி இதற்கு உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும் சட்டவிரோதமான பேனர்கள் வைக்கமாட்டோம் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தப் பிறப்பித்த உத்தரவுப்படி, திமுக, அதிமுக தவிர மற்றக் கட்சிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். அரசு செலவில் லட்சக்கணக்கான ரூபாய் விளம்பரங்களுக்காகச் செலவிடுவது தொடர்பான வழக்கில், பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுப்பது தொடர்பான கொள்கை ஏதேனும் வகுக்கப்பட்டுள்ளதா எனப் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், பிப்ரவரி 27ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

திங்கள், 27 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon