மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 25 ஜன 2021

விஸ்வரூபம் எடுக்கும் குரூப்-4 முறைகேடு!

விஸ்வரூபம் எடுக்கும் குரூப்-4 முறைகேடு!வெற்றிநடை போடும் தமிழகம்

குரூப் 4 முறைகேடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில் தற்போது அதுகுறித்த பல தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

குரூப் 4 முறைகேட்டில் சிபிசிஐடி போலீசாரின் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், மத்தியப் பிரதேசத்தின் வியாபம் போல், இங்கும் பல்வேறு முறைகேடுகள் நடந்தது தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறது. குரூப் 4 முறைகேட்டில் டிஎன்பிஎஸ்சியில் பணியாற்றும் ஆவணக் கிளார்க் ஓம்காந்தன், மற்றும் அரசு ஊழியர்கள் ரமேஷ், திருக்குமரன் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இந்நிலையில் இன்று மேலும் 3 பேரைக் கைது செய்துள்ளதாகவும், இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 2017ல் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குரூப் 4 முறைகேடு வழக்கில் கைதாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள, எரிசக்தித் துறையில் பணியாற்றி வந்த திருக்குமரன், குரூப் 2 ஏ தேர்வை ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியுள்ளார். இதில் முதல் 100 இடங்களில் அவர் 37ஆவது இடத்தை பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனிடையே 2017ல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டுக்கும், தற்போது நடந்த குரூப் 4 முறைகேட்டில் கைதாகியுள்ள இடைத்தரகர்களுக்குத் தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. 2018ல் ரத்து செய்யப்பட்ட 1060 பணியிடங்களுக்கான விரிவுரையாளர் தேர்வு மீண்டும் தற்போது நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் இந்த தகவலை சிபிசிஐடி தெரிவித்துள்ளது. எனவே அப்போது முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரைத் தேர்வெழுத அனுமதிக்கக் கூடாது என்றும் இதில் முறைகேடு நடக்காதவாறு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திங்கள், 27 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon