மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

சிஏஏ: முதல்வரின் முக்கிய ஆலோசனை! நாளை சட்டமன்றத்தில் எதிரொலிக்குமா?

சிஏஏ: முதல்வரின் முக்கிய ஆலோசனை!  நாளை சட்டமன்றத்தில் எதிரொலிக்குமா?

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில், பிப்ரவரி 14 ஆம் தேதி காவல்துறையினர் நடத்திய தடியடியைக் கண்டித்து தமிழகம் முழுதும் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

பிப்ரவரி 14 ஆம் தேதி போராட்டத்தில் பெண்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. மேலும் ஒரு முதியவர் போராட்டத்தில் இறந்துவிட்டார் என்று தகவல் பரவ, பின்னர்தான் அவர் போராட்டத்தில் இறக்கவில்லை என்று தெளிவாக்கப்பட்டது. போலீஸாரின் லத்தி சார்ஜ் மற்றும் தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுதும் திருச்சியில் ஷாஹின் பாக், முத்துப்பேட்டையில் ஷாஹின் பாக் என்று போராட்டங்கள் தொடர்ந்த வேளையில்தான் நேற்று (பிப்ரவரி 15) இரவு சென்னை மாநகர கமிஷனர் விஸ்வநாதனை இஸ்லாமிய கூட்டமைப்புத் தலைவர்கள் சந்தித்தனர். தமிழக முதல்வரை நேற்று (பிப்ரவரி 15) கமிஷனர் விஸ்வநாதன் சந்தித்துப் பேசிய பிறகு இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜமாத் உலாமாவின் தலைவரும் கூட்டமைப்புத் தலைவருமான காஜா மைதீன் பாகவி, கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கோனிகா பஷீர், மமக தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ தலைவர் முபாரக் உள்ளிட்ட 13 தலைவர்கள் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்தனர். அதேபோல் மாநகர காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் கமிஷனரோடு இருந்தனர். இரு தரப்பினரும் சுமார் அரைமணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை பேசியிருக்கிறார்கள்.

மிகவும் மென்மையான அணுகுமுறையோடு பேசிய கமிஷனர் விஸ்வநாதன், “உங்களுக்கே தெரியும். இந்தியாவுலயே தமிழகத்துலதான் அதிக போராட்டங்கள் நடக்குது. தொடர்ந்து நீங்க போராடிக்கிட்டிருக்கீங்க. உங்களுக்கு எந்த சிக்கலும் போலீஸால வந்ததில்லை. வண்ணாரப்பேட்டையில நடந்த சம்பவம் பற்றி தீர விசாரிச்சேன்” என்று கூறிவிட்டு பேரிகார்டுகளை போராட்டக் காரர்கள் தள்ளியது பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். பின், ‘இந்தப் போராட்டம் எப்போது வரை நடக்கும்” என்று கேட்டிருக்கிறார்.

அப்போது இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக பேசியவர்கள், “போராட்டம் முழுமையாக இப்போது எந்தத் தலைவரின் கட்டுப்பாட்டிலும் இப்போது இல்லை. பெண்களின் வசம்தான் இருக்கிறது. அவர்கள்தான் அங்கே லீடு செய்கிறார்கள். பிப்ரவரி 14 ஆம் தேதி இரவு பெண்கள் கடுமையாக போலீஸாரால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். கை ஒடிந்திருக்கிறது, பல இடங்களில் அடிபட்டிருக்கிறது. எல்லாரும் குடும்பத்துப் பெண்கள். புகார், காவல்நிலையம், நீதிமன்றம் என்று அவர்கள் அலைய விரும்பவில்லை. ஆனால் கட்டுப் போட்டுக் கொண்டு மறுபடியும் போராட்டம் செய்ய அதே இடத்துக்கு வந்துவிட்டார்கள். எங்கள் போராட்டம் மாநில அரசுக்கு எதிரானது அல்ல, மத்திய அரசுக்கு எதிராகவே போராடுகிறோம். சிஏஏ சட்டத்துக்கு மாநில அரசும் ஆதரவு தெரிவிப்பதால் மாநில அரசையும் எதிர்த்து அங்கே முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன” என்று கூறினார்கள்.

அப்போது கமிஷனர், “இந்தப் போராட்டத்துக்கு தீர்வு என்னவென நினைக்கிறீர்கள். நீங்கள் என்னிடம் சொன்னால் நான் இதை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறேன். உங்களுக்கும் முதல்வருக்கும் நான் பாலமாக இருக்கிறேன்” என்று கூறினார்.

அதற்கு கூட்டமைப்புத் தலைவர்கள், “இப்போது சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கிறது. நாங்கள் அமைதியாக போராடிக் கொண்டிருக்கிறோம். யாரும் எந்த வன்முறைக்கும் செல்லவில்லை” என்றபோது கமிஷனர் குறுக்கிட்டு,. “டெல்லியைப் போல தமிழ்நாடு எப்பவுமே இருந்ததில்லை.” என்று கூறியுள்ளார்.

“சட்டமன்றத்தில் சிஏஏவுக்கும் என்.ஆர்.சிக்கும் எதிராக தமிழக முதல்வர் தீர்மானம் கொண்டுவந்தால் மட்டுமே இந்தப் போராட்டம் முடிவை எட்டுவதற்கு வாய்ப்பிருக்கிறது. முதல்வர் இந்த அறிவிப்பை சட்டமன்றத்தில் அறிவித்தால் போராட்டம் முடிவடைவது மட்டுமல்ல, முஸ்லிம் சமுதாயம் முதல்வருக்கு எதிராக நிற்கிறது என்பது போய் முதல்வருக்கு ஆதரவாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது” என்றும் கூறியிருக்கிறார்கள் சில கூட்டமைப்புப் பிரமுகர்கள்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்ட கமிஷனர் விஸ்வநாதன், “நான் நிச்சயமாக இதை முதல்வரிடம் சொல்கிறேன். அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்து கூட்டமைப்பினருக்கு விடை கொடுத்தார்.

இந்தக் கூட்டம் முடிந்ததுமே மேலிடத்துக்கு இதுபற்றிய தகவல்களைக் கொடுத்துள்ளார் கமிஷனர் விஸ்வநாதன். இந்த நிலையில்தான் இன்று காலை சிஏஏ போராட்டங்களை கண்காணிப்பதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமித்தார் டிஜிபி.

தொடர்ச்சியாக இன்று (பிப்ரவரி 16) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் இல்லத்தில் டிஜிபி திரிபாதி, கமிஷனர் விஸ்வநாதன், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையை அடுத்து கமிஷனர் விஸ்வநாதன், தலைமைச் செயலாளர் சண்முகம் , உளவுத்துறை தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோரும் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். ஒட்டுமொத்த ரிப்போர்ட்டை இன்று மாலை டிஜிபி தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்திருக்கிறார் என தெரிகிறது. இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் பெண்களின் கூட்டம் அதிமகாக சேர்ந்துகொண்டே இருக்கிறது என்றும் அந்த ரிப்போர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வண்ணாரப்பேட்டை பகுதியை உள்ளடக்கிய வடசென்னையைச் சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமாரும் இன்று இப்பிரச்சினையில் தன் கவனத்தை செலுத்தியுள்ளார். பிப்ரவரி 14 ஆம் தேதி இரவு நடந்த சம்பவத்துக்குப் பிறகு உடனடியாக மாவட்ட அமைச்சர் ஜெயக்குமார் அங்கே வர வேண்டும் என்று போராட்டக் காரர்கள் கோரிக்கை எழுப்பினர். அங்கே செல்லவும் ஜெயக்குமார் தயாராகிவிட்ட நிலையில் போலீஸார்தான், ‘இப்போதைய நிலைமையில் அங்கே செல்ல வேண்டாம்’ என்று அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை முதல்வர் ஆலோசனை நடத்திய பிறகு ஜெயக்குமார் வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை ராயபுரத்தில் இன்று பிப்ரவரி 16 மாலை சந்தித்துப் பேசினார். சட்டமன்றத்தில் சிஏஏவுக்கு எதிரான தீர்மானம் இயற்றினாலே போராட்டம் மத்திய அரசுக்கு எதிராக மட்டுமே நடைபெறும், மாநில அரசுக்கு எதிராக நடக்காது என்று அவர்கள் ஜெயக்குமாரிடமும் எடுத்துக் கூறியுள்ளனர். முதல்வர் நல்ல முடிவெடுப்பார் என்று ஜெயக்குமாரும் அவர்களிடம் சொல்லி அனுப்பியுள்ளார்.

பிப்ரவரி 14 ஆம் தேதி இரவு சிஏஏ போராட்டத்தில் நடந்த சம்பவங்களை அடுத்து தமிழகம் முழுதும் போராட்டம் பரவிய நிலையில், பிப்ரவரி 15 ஆம் தேதி போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், முதல்வரையும், போராட்டக் காரர்களையும் சந்தித்தார். மறுநாளான பிப்ரவரி 16 ஆம் தேதி முதல்வர் தலைமையில் மாநிலத்தின் மிக மிக முக்கிய அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றுள்ளது. ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினத்தில் கூட முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மேற்கொண்ட முக்கிய ஆலோசனைகளின் எதிரொலியாக நாளை (பிப்ரவரி 17) சட்டமன்றத்தில் முதல்வர் சிஏஏ குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் போராட்டக் களத்தில் இருப்பவர்கள். முதல்வரின் இன்றைய ஆலோசனைகளுக்கான எதிரொலி நாளை சட்டமன்றத்தில் வெளிப்படக் கூடும்!

-ஆரா

ஞாயிறு, 16 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon