மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

சட்டமன்றத்தையும் விட்டுவைக்காத ஹெச்.ராஜா

சட்டமன்றத்தையும் விட்டுவைக்காத ஹெச்.ராஜா

சிஏஏவுக்கு எதிராகக் கடந்த 4 நாட்களாகச் சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் சிஏஏவுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே முதல் மாநிலமாகக் கேரளாவிலும், அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்றத்தில் சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி, மாநிலத் தலைவர் முபாரக் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் நேற்று இரவு அவரை சந்தித்தனர். சிஏஏ, என்பிஆர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் பற்றி முதல்வருக்கு சுமார் அரைமணி நேரத்துக்கும் அதிகமாக விளக்கி, கேரளா, புதுச்சேரி போலத் தமிழகச் சட்டமன்றத்திலும் சிஏஏ, என்பிஆருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து மின்னம்பலத்தில் முஸ்லிம் அமைப்புகளுடன் முதல்வர்: நள்ளிரவில் நடந்தது என்ன? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இவ்வாறு சிஏஏவுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அப்படி தீர்மானம் நிறைவேற்றுவது என்பது வீண் வேலை என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

சென்னை தி.நகரில் இன்று (பிப்ரவரி 17) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நியாயமற்றது மற்றும் தேவையில்லாதது. நாடாளுமன்ற உறுப்பினர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு மசோதாவை ஆதரித்து வாக்களிக்கவோ, எதிர்த்து வாக்களிக்கவோ உரிமை உண்டு. ஆனால், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் இதை எப்படி ஆதரித்தார் என்று அவர் மீது கொலை வெறி தாக்குதல் கம்பத்தில் நடந்தது. அதுவே சிஏஏவை சரி என்று கருதுபவர்கள் எல்லாம் மீதமுள்ள 38 பேருக்கும் அதே ட்ரீட்மெண்ட் கொடுத்தால் நிலை

என்னவாகும்” என்றார்.

மேலும், சட்டமன்றத்தில் சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அது லைன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் போன்று ஏதோ ஒரு ரெக்கிரியேஷன் கிளப் ஆகியவற்றில் போட்ட தீர்மானத்துக்கு ஒப்பாகும் என்று விமர்சித்துள்ளார்.

ஏற்கனவே இவர் சென்னை உயர் நீதிமன்றத்தைத் தரக்குறைவாகப் பேசியிருந்த நிலையில் தற்போது சட்டமன்றத்தையும் கிளப்புகளோடு தொடர்புப்படுத்தி அவமதித்துப் பேசியுள்ளார்.

-கவிபிரியா

திங்கள், 17 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon