மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 28 மா 2020

ஆணைய ஆணை: ரஜினி பதுங்கும் பின்னணி!

ஆணைய ஆணை: ரஜினி பதுங்கும் பின்னணி!

சினிமாவில் எதையும் நேருக்கு நேர் எதிர்கொள்வார் ரஜினி. ‘முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன்; உயிர் வாழ்ந்தால் இங்கேதான், எங்கும் ஓடிவிட மாட்டேன்’ என்றெல்லாம் பாடலும் பாடுவார். ஆனால் நிஜத்தில்?

2018 மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸாரின் கொடூரத் துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

அன்று ரஜினி என்ன சொன்னார்?

அப்போது தூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஆறுதல் கூறினார் ரஜினி.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “இனி இதுபோன்ற சம்பவம் நடக்கவே கூடாது போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள், கலெக்டர் அலுவலகத்தைத் தாக்கியவர்கள், இவர்கள் யாரும் பொதுமக்கள் அல்ல. கூட்டத்தில் ஊடுருவிய விஷக் கிருமிகள், சமூக விரோதிகளே மேற்படி வன்முறை சம்பவத்துக்குக் காரணம். பொதுமக்கள் போராடும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சமூக விரோதிகள் அதிகமாகி விட்டனர். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் அவ்வாறு ஊடுருவினர். அதேபோல இந்த புனிதமான போராட்டத்திலும் ஊடுருவி ரத்தக்கறையை ஏற்படுத்தி விட்டனர்’ என்று கூறினார்.

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் செல்ல போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்களைத் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வரவழைத்து நிதியுதவி செய்தார் ரஜினி. இந்தப் பயணம் முழுவதிலும் ரஜினியுடன் தூத்துக்குடி மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகி ஸ்டாலின் உள்ளிட்டோர் இருந்தனர். ரஜினியின் இந்தக் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் நிறையவே எழுந்தன.

ரஜினியை விசாரிக்க வேண்டும் - முதல் குரல்

இதற்குப் பிறகு தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிஷனை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது தமிழக அரசு. அந்த ஆணையத்தின் அலுவலகம் தூத்துக்குடியில் இருக்கிறது. சென்னையிலும் அந்த ஆணையத்துக்கு அலுவலகம் இருக்கிறது.

இந்த நிலையில் போராட்டக் களத்தில் இருந்த சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், பத்திரிகை புகைப்படக்காரர்கள், கருத்து வெளியிட்டவர்கள் என்று பலரையும் இதுவரை ஆணையம் விசாரணை செய்திருக்கிறது. ஆணையத்தின் 13ஆவது கட்ட விசாரணை கடந்த ஜூலை மாதம் நடந்தபோது, மக்கள் உரிமைப் பாதுகாப்புக் கழகத் தலைவரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆணையத்தின் முன்பு ஆஜரானார்.

அப்போது ஆணையத்தின் உள்ளேயும், வெளியேயும் அவர், ‘துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். அவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தார். போராட்டத்தில் சமூக விரோதிகள் இருந்தார்கள் என்று ரஜினி சொல்லியிருப்பதால் அதுபற்றிய விவரங்களை ஆணையத்தின் முன் கூற வேண்டுமென மேலும் சில வழக்கறிஞர்களும் ஆணையத்திடம் முறையிட்டிருந்தனர்.

சம்மனும் ரஜினி பதிலும்

நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 18ஆவது கட்ட விசாரணை கடந்த மாதம் 25ஆம் தேதி முடிந்தது. இதுவரை 704 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு 445 பேரை அழைத்து அவர்களிடம் விவரங்கள் கேட்டறியப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் மூலம் 630 ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்கிறார்கள் ஆணைய வட்டாரத்தில். 18ஆவது கட்ட விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடந்த தினத்தன்று அங்கிருந்த பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் விசாரிக்கப்பட்டனர். இந்த நிலையில் 19ஆவது கட்ட விசாரணை வரும் வாரம் தொடங்க இருக்கிறது. இதில் 25ஆம் தேதி ரஜினி ஆஜராகி சாட்சியம் அளிக்க ஒரு நபர் விசாரணை ஆணையம் ரஜினிக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ரஜினி தூத்துக்குடி ஆணையத்தில் ஆஜராக வரும்போது அவருக்காக வாதாட பல்வேறு வழக்கறிஞர்கள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால், ரஜினி தரப்பில் இருந்து தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாகவும், சட்டம் ஒழுங்கு காரணமாகவும் தனக்கு விசாரணையில் இருந்து ஆஜராக விலக்கு அளிக்க கோரி கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். எழுத்துபூர்வமாகத் தன்னிடம் கேள்விகள் கேட்டால் அவற்றுக்குப் பதில் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

விசாரணை ஆணையத்தில் ரஜினி ஆஜரானால்..

பல கட்ட விசாரணைகள் நடந்திருக்கும் நிலையில் கலந்துகொண்டவர்களில் சிலரிடம் விசாரணை எப்படி நடக்கிறது, ரஜினி ஏன் வரவில்லை என்று கேட்டோம்.

“ஆணையத்துக்குள் ஆஜராகப் போகும்போதே யார், என்ன என்ற விவரங்களைச் சரிபார்த்துவிட்டு, ‘தூத்துக்குடி சம்பவம் பற்றி நீங்கள் சொன்னதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா?’ என்று கேட்கிறார்கள். துப்பாக்கிச் சூடு அன்று எங்கே இருந்தீர்கள், எங்கெங்கே போனீர்கள், என்ன நடந்தது சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள்.

ஆஜரானவர், தான் பார்த்தது பற்றி சொல்லும்போதே அதை டைப் செய்துகொள்கிறார்கள். சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஆணையத்தின் வழக்கறிஞர் குறுக்குக் கேள்விகள் கேட்கிறார். ‘எந்த இடத்துல பார்த்ததா சொன்னீங்க? அப்ப என்ன டயம் இருக்கும்?’ என்று சில இடங்களில் அழுத்திக் கேட்கிறார். பதில் சொல்லும்போதே துப்பாக்கிச் சூடு நடந்த தினத்தின் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் நடக்கும் வீடியோ காட்சியை ஓட விடுகிறார்கள். சாட்சியாக வந்தவர் சொன்ன இடத்தில் சொன்ன நேரத்தில் அப்படி ஒரு காட்சி பதிவாகியிருக்கிறதா என்று சரிபார்க்கிறார்கள். அந்த நாளின் 90% நிகழ்ச்சிகளை வீடியோவாக ஆணையத்தில் வைத்திருக்கிறார்கள். சிசிடிவி காட்சிகள் மட்டுமல்லாது, அனைத்து தனியார் தொலைக்காட்சி நிர்வாகங்களிடமும், ‘விசாரணைக்குத் தேவைப்படுவதால், உங்களிடம் இருக்கும் ரா ஃபுட்டேஜ்களை கொடுங்கள்’ என்று கேட்டு வாங்கிவிட்டார்கள். இப்படியாக கிட்டத்தட்ட எல்லா வீடியோக்களும் ஆணையத்திடம் இருக்கிறது. அதனால் அங்கே பொய் சொல்லி ஏமாற்ற முடியாது.

ஒருவேளை ரஜினி ஆணையத்தில் ஆஜரானால், ‘போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததாகச் சொல்லியிருக்கிறீர்களே, என்ன ஆதாரத்தின் அடிப்படையில் அதுபோல சொன்னீர்கள்?’ என்று கேட்பார்கள். அவர், ‘என் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சொன்னதன் அடிப்படையில் சொன்னேன்’ என்று சொல்லலாம். அல்லது கேள்விப்பட்டதை வைத்துச் சொன்னேன் என்று தெரிவிக்கலாம். ரஜினி சொல்வதெல்லாம் பதிவு செய்துகொள்ளப்படும். அதில் ஆணையத் தரப்புக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் ரஜினியைக் குறுக்கு விசாரணை செய்வார்கள். உதாரணத்துக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறினார்கள் என்று சொன்னால், யார் அந்த நிர்வாகிகள் அவர்கள் பெயரைச் சொல்லுங்கள், அவர்களையும் அழைத்து விசாரிப்போம் என்பார்கள். ரஜினி தன் மன்ற நிர்வாகிகள் பெயரைச் சொல்ல நேரிடும். ரஜினி ஆணையத்தில் பதியும் கருத்துகள் ஆவணமாகும். ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெறும்.

ரஜினி கூறும் விவரங்கள் ஆணையத்தின் வசமுள்ள வீடியோ காட்சிகளுடன் பொருத்திப் பார்க்கப்படும். அதற்கு ரஜினி நேரில் ஆஜரானால்தான் முடியும், எழுத்து ரீதியாகப் பதில் கூறினால் குறுக்கு விசாரணை செய்ய முடியாது. விசாரணை முறை இப்படியிருக்க... எழுத்துபூர்வமாகக் கேட்டால் பதில் தருகிறேன் என்று ரஜினி சொல்வதை ஆணையம் ஏற்குமா என்று தெரியவில்லை” என்கிறார்கள் தூத்துக்குடி பத்திரிகையாளர்கள்.

ரஜினி மன்றத்தினரின் விருப்பம்

ரஜினி மன்றத் தரப்பினரிடம் பேசினோம். “தூத்துக்குடியில் பீச் ரோட்டில் உள்ள அரசினர் சுற்றுலா மாளிகையில்தான், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு அலுவலகம் இருக்கிறது. தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இது அமைந்திருக்கிறது.

ரஜினி விசாரணை ஆணையத்தில் ஆஜராக வரும் பட்சத்தில் தற்போதைய அவரது கருத்துகளால்... குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்கள் தனக்கு எதிராகப் போராட்டம் நடத்தவும் வாய்ப்பிருப்பதாக ரஜினி சந்தேகப்படுகிறார். எனவேதான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்கிறார்.

அதேநேரம்... அரசியலுக்கு வரப் போகிறேன் என்று அறிவித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கும் ரஜினி, இதுபோன்ற சந்தர்ப்பங்களைத் தனது அரசியல் பிரவேசத்துக்கு சாதகமான படிக்கட்டுகளாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர தயங்கக் கூடாது ஆனாலும் அவர்தானே முடிவெடுக்க வேண்டும்?” என்கிறார்கள்.

ரஜினி சார்... என்ன செய்யப் போகிறீர்கள்?

-ஆரா

திங்கள், 24 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon