மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

கொரோனா... தமிழகத்தில் நடப்பது என்ன?

கொரோனா... தமிழகத்தில் நடப்பது என்ன?

உலகையே உலுக்கும் கொரோனா வைரஸ் தொற்றினைக் கட்டுப்படுத்த தமிழக அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்று சட்டமன்றத்திலும், ஆய்வுக் கூட்டங்களிலும், பொது ஆய்வுகளிலும் தினந்தோறும் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் விளக்கி வருகிறார்.

அண்டை மாநிலங்களிலெல்லாம் கொரோனா விழிப்புணர்வுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் இப்போதுதான் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒருபக்கம் மாஸ்குகள் பற்றாக்குறை போன்ற முறையீடுகளுக்கு, “எல்லாரும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் இல்லை” என்கிறார் அமைச்சர்.

இப்படிப்பட்ட நிலையில்தான் பிரபல தொலைக்காட்சி ஊடக நெறியாளரான ராஜா திருவேங்கடம் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்று ஊடக வட்டாரங்களில் மட்டுமல்ல, மருத்துவ வட்டாரங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

“எனக்கு மிகவும் நெருக்கமான டாக்டர் அவர். சென்னையில் நோய் தொற்று பிரிவின் மூத்த மருத்துவர். இன்று காலையில் பேசினார். அவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீளவில்லை.

' தமிழ்நாட்டுல கொரோனா பாதிப்பு இல்லை என அமைச்சர் சொல்லிட்டு இருக்காரு. சென்னையில் கொரோனா பாதிப்பு இருக்கும் நான்கு வி.ஐ.பி.களை அவர்கள் வீட்டில் வைத்து நான் ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டு இருக்கேன். ஹாஸ்பிட்டலுக்கு வந்து கொரோனா அறிகுறிகளை உறுதிப்படுத்திய பிறகு, அவர்களை பரிசோதிக்க அனுப்பினால், அவர்களுக்கு டெஸ்ட் எடுக்க மறுக்கிறாங்க. டெஸ்ட் பண்ணினால் கொரோனா இருக்கிறது தெரிஞ்சிடும் என்பதால், அதெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு சொல்லி அனுப்பிடுறாங்க. அப்படி போனவங்க இதுவரை 20 பேர். அதுல சிலரது குடும்பத்தில் உள்ளவங்களுக்கும் பாதிப்பு வந்துடுச்சு. அவங்க மூலமாக அடுத்தடுத்து பரவ வாய்ப்புகள் அதிகம். அரசு இதுல வெளிப்படையாக நடந்துக்கலைன்னா சென்னை மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும். வெயில் அதிகமாக இருப்பதால் இது தானாக சரியாகிடும்னு அரசுத் தரப்புல நினைக்கிறாங்க. ஆனால் எல்லாமே கைமீறி போய்ட்டு இருக்கு..' என்பதுதான் அவர் சொன்னது.

அரசாங்கத்தை குறை சொல்லவோ, மக்களிடம் பீதியை உண்டாக்கவோ அல்ல இந்த பதிவு. நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதைத்தாண்டி, அரசாங்கமும் கொரோனா விஷயத்தில் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும்” என்பதுதான் ராஜா திருவேங்கடத்தின் பதிவு.

ஏற்கனவே டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுதும் பரவியபோது மாநில அரசு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பெரிய அளவில் பரவவில்லை என்று மறுத்தது. ஆனால் எதிர்க்கட்சிகளோ, ‘டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கூட தமிழக அரசு உண்மையாக பதிவு செய்யாமல் மர்மக் காய்ச்சல் என்று சொல்லி டெங்குவே இல்லை என்று காட்ட முயல்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்கள்.

கிட்டத்தட்ட அரசுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ அதேபோன்றதொரு நிலைதான் இப்போதும் இருக்கிறது என்கிறார்கள் மருத்துவ உலகில் ஒரு தரப்பினர். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்வதெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. அதேநேரம் எதார்த்தத்தில் நடப்பதை அரசு மறைக்க முயல்கிறதோ என்றும், ஏன் அப்படி அரசு முயல வேண்டும் என்றும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

மின்னம்பலம் சார்பில் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனைகள் வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்களை பொது நலன் கருதி இங்கே வெளியிடுகிறோம்.

“ கேரளாவின் திருவனந்தபுரத்திலுள்ள சித்திரைத் திருநாள் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று ஆய்வு முடிவில் வந்திருக்கிறது. அவரது மனைவிக்கும் கொரோனா இருக்கிறது. அவரது மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த பெண்ணுக்குச் சொந்த ஊர் சென்னை. சில நாட்களுக்கு முன் அந்தப் பெண் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்துவிட்டார். அந்தப் பெண்ணுக்கும் கொரோனா அறிகுறிகள் இருந்திருக்கின்றன.

சென்னை வடபழனி அருகே இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்ற ஒரு பெண்ணுக்கும் கொரோனா அறிகுறிகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.

சென்னையின் புகழ் பெற்ற தனியார் மருத்துவனையில் பணியாற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணருக்கு கொரோனா அறிகுறிகள் தெரியவந்திருக்கிறது.

சென்னையில் இருக்கும் இரண்டெழுத்து லேடிஸ் ஹாஸ்டலில் ஒரு பெண்ணுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்தவர்கள் அல்லது கேரளாவில் இருந்து வந்தவர்கள் மூலமாகத்தான் கொரோனா தமிழகத்துக்கு வந்திருக்கிறது. ஒருவருக்கு கொரோனா தாக்கம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று சோதனை செய்து, அந்த சோதனை சாம்பிள்கள் சென்னை கிண்டியில் இருக்கும் கிங்ஸ் ஆய்வகத்தில் உறுதி செய்யப்பட்ட பிறகுதான் கொரோனா பாதிக்கப்பட்டவர் என்பது முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் கடந்த வாரத்துக்கு முன்புவரை விமான நிலையங்களில் போதுமான அளவு சோதனைகள் நடத்தப்படவில்லை. இதனால் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் காய்ச்சல், தொடர் இருமல் போன்றவை இருந்தால் அரசு மருத்துவமனைக்கு செல்லாமல் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றிருக்கின்றனர். அங்கே தாங்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதைச் சொல்லாமல் உடல் நிலை சரியில்லை என்று சொல்லி சிகிச்சை பெறுகிறார்கள். அதன் மூலமாகவே கொரோனாவை பரப்பி விடுகிறார்கள்.

கிண்டி கிங்க்ஸ் ஆய்வகத்தில் 69 பேருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்திருக்கிறது. அதேநேரம் தனியார் மருத்துவமனைகளில் இதேபோன்ற அறிகுறிகளோடு ஏராளமானோர் சென்று சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் மூலமாக கொரோனா தமிழகத்தில் பலருக்கும் பரவியிருக்கும் என்ற அச்சம் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மத்தியில் இப்போது நிலவுகிறது. சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் முதியவர் ஒருவர் உட்பட சிலர் கொரோனா அறிகுறிகளுக்குப் பின் இறந்துவிட்டனர்.

ஆனால் இந்தியாவிலேயே கொரோனா இல்லாத மாநிலம் என்ற முழக்கத்தையே அரசு முன் வைத்து வருகிறது. அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் சில முக்கியமான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்கிறார்கள் தனியார் மருத்துவமனை வட்டாரங்களில்.

அரசு என்ன செய்ய வேண்டும்?

“கொரோனா அறிகுறிகள் தங்களுக்கு இருப்பதாகக் கருதுபவர்கள் கூட அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று சோதனை செய்வதற்கு அஞ்சுகிறார்கள். அப்படி அஞ்சுபவர்கள்தான் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுகிறார்கள். இப்போதைய நிலவரப்படி கொரோனா இருப்பதை அறிகுறிகள் மூலம் உறுதி செய்யும் ஆற்றல் தனியார் மருத்துவமனைகளுக்கு இருந்தாலும் அவர்களுக்கு அந்த அதிகாரம் இல்லை. அரசு மருத்துவமனை மூலம் செல்லும் சாம்பிள்கள் மட்டுமே கிங்ஸ் லேபுக்கு செல்கின்றன. எனவே தனியார் மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் உண்மையிலேயே கொரோனா தாக்கப்பட்டிருந்தால் கூட அதை சான்று மூலம் உறுதிப்படுத்தவும் முடியாமல் அதேநேரம் தங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். இதைத் தடுக்க வேண்டுமானால் கொரோனா பரிசோதனை செய்ய தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதியளிக்க வேண்டும். அவ்வாறு அளித்தால்தான் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்ற உண்மையான கணக்கீட்டை அறிய முடியும்.

இல்லையெனில் அரசு மருத்துவமனைகளுக்கு செல்லாதோர் மூலமாக கொரோனா ஒருபக்கம் தீவிரமாகப் பரவ, ‘யாருக்கும் பாதிப்பில்லை’ என்று அரசு அறிவித்துக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் வகையிலேயே இருக்கும். அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?” என்று கூறி முடித்தார்கள்.

கொரோனா இல்லையென்ற தோற்றத்தை உருவாக்குவதில் காட்டும் அக்கறையை, இருக்கும் கொரானோவை அகற்றுவதில் காட்ட வேண்டும் என்பதே பல மருத்துவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

-வணங்காமுடி

செவ்வாய், 17 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon