மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 28 மா 2020

மீண்டும் மோடி உரை: முடங்குகிறது இந்தியா

மீண்டும் மோடி உரை: முடங்குகிறது இந்தியா

நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் கடந்த மார்ச் 19 ஆம் தேதி பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், ‘மார்ச் 22 ஆம் தேதி இந்திய மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்நிலையில் பிரதமர் மோடி மீண்டும் இன்று (மார்ச் 24) நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவரது ட்விட்டர் பதிவில், “இன்று மார்ச் 24 இரவு 8 மணிக்கு மீண்டும் உங்களிடம் பேசுகிறேன். கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய சில முக்கிய அம்சங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 19 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பின் பல்வேறு துறை வல்லுநர்களோடு தொடர்ந்து ஆலோசனை நடத்தினார் பிரதமர்,. தொழில் துறையினர், வங்கித் துறையினர், மீடியா துறையினர் என்று பல்வேறு தரப்பினரோடும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்திய மோடி, மாநில முதல்வர்களோடும் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு மோடி நாட்டு மக்களுக்கு என்ன உரையாற்றப் போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஏற்கனவே மக்களை தனித்திருக்குமாறு மாநில அரசுகள் அறிவுறுத்திய நிலையில், பிரதமர் மோடி மீண்டும் சுய ஊரடங்கு நடைமுறையை நாடு முழுதும் நீடித்து உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆற்றிய உரையில், சுய ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு பொருளாதார உதவி செய்ய ஆய்வுக் குழு ஒன்றை அமைத்தார் பிரதமர். அதன் படி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் பற்றிய அறிவிப்பும் வெளிவரக் கூடும் என்கிறார்கள்.

இன்று இரவு 8 மணியை எதிர்பார்த்து மீண்டும் கொஞ்சம் பதற்றத்தோடே காத்திருக்கிறது இந்தியா.

-வேந்தன்

செவ்வாய், 24 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon