மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஜூலை 2020

சிறைச்சாலையில் கொரோனா ஏற்படுத்திய கலவரம்!

சிறைச்சாலையில் கொரோனா ஏற்படுத்திய கலவரம்!

சிறைச்சாலைகளில் கலவரம் ஏற்பட்டு, கைதிகள் தப்பித்து வெளியே செல்வதைப் பல திரைப்படங்களில் பார்த்திருப்போம். அந்தக் கலவரத்தை அடக்க போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்துவதும், அதன்பின் மனித உரிமையை முன்னிறுத்தும் அமைப்புகள் எடுத்த முன்னெடுப்புகள் ஆகியவற்றை புத்தகங்களிலும், ஆவணப்படங்களிலும் பார்த்திருப்போம். ஆனால், இவையெல்லாம் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இதே காலத்தில் நடந்திருக்கின்றன. இதற்கு ஒற்றைக் காரணம் கொரோனா.

கொலம்பியா நாடு எப்போதும் ஒரு பதற்ற நிலையிலேயே இருந்துவரும் நாடு. புரட்சி, கலவரம் என அரசாங்கத்தை ஒரு நிமிடமும் உறங்கவிடாத அந்த நாட்டில் சிறைச்சாலைகள் அதிகம். மிகப்பெரிய சிறைச்சாலைகளைக் கொண்ட நாடு என்ற பெயர் பெற்றிருக்கும் கொலம்பியாவில், அதிக நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனரே தவிர, அவர்களுக்கான அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எப்போதும் இருந்தது. இந்த நிலையில், உலகம் முழுவதும் பரவிய கொரோனா நோய் கொலம்பியாவிலும் வேலையைக் காட்டியது. இருநூறுக்கும் மேற்பட்ட நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். அப்படி மருத்துவமனைக்குச் சென்ற மூவர் இதுவரை உயிரிழந்திருக்கின்றனர். இதனால் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டு மொத்த நாடும் இயங்காமல் இருக்கிறது. இந்த நிலையில்தான் கொலம்பியாவின் பொகோடா மாகாணத்திலுள்ள சிறையில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது.

சிறைக் கைதிகளுக்கிடையே ஏற்பட்டு வந்த சலசலப்பு, மக்களை வீதிகளுக்கு வராமல் பாதுகாக்க களமிறக்கப்பட்ட ராணுவம் சிறைச்சாலைக்குள் நுழைந்ததும் பெரிதாகியிருக்கிறது. சிறைக்குள் போதிய வசதிகள் இல்லையென்ற காரணத்தை முன்னிறுத்தி, சிறைக் கைதிகளில் பலர் சிறைக் காவலர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் ஒன்றுகூடி நின்றிருக்கின்றனர். இதைக் கண்ட வெவ்வேறு பிரிவினர் தனித்தனி அணிகளாக மாறி சிறை நிர்வாகத்தை எதிர்த்துப் போராட்டம் செய்ய, ஒருகட்டத்தில் அவர்களுக்குள்ளாகவே பெரும் சண்டையாக அது மாறியிருக்கிறது. இதன்பின் ஏற்பட்ட கலவரத்தால் சிறைக் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதல் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதில் 23 கைதிகள் கொல்லப்பட்டு நூற்றுக்கும் மேலானவர்களுக்கு காயமும் ஏற்பட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தால் மாஸ்க், சானிடைசர், கிளவுஸ் போன்றவற்றை சிறைக் கைதிகள் கேட்டிருக்கின்றனர். ஏற்கனவே அதிக கைதிகளால் மூச்சுத் திணறிக்கிடந்த மொகோடா சிறைச்சாலை நிர்வாகத்தால் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான உபகரணங்களைக் கொடுக்க முடியவில்லை. எனவே, போராட்டத்தில் இறங்கிய கைதிகளை எதிர் தரப்பினர் தாக்க முற்பட்டிருக்கின்றனர். இதன் விளைவாக ஏற்பட்ட கலவரத்தைப் பயன்படுத்தி சிறைக் கைதிகள் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்ததாக, கொலம்பியா நீதித் துறை அமைச்சர் மர்கரிடா கபெல்லோ தெரிவித்திருக்கிறார்.

கொலம்பியா அரசாங்கத்தின் இந்த விளக்கமும், உயிரிழந்திருக்கும் எண்ணிக்கையும் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்ப, இது குறித்துத் தெளிவான அறிக்கையைக் கேட்டிருக்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். கொலம்பியா அரசு கைதிகள் தப்பிப்பதற்காகவே இப்படிப்பட்ட நாடகத்தை நடத்தினார்கள் என்று கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாத மனித உரிமை ஆர்வலர்கள், சிறையிலிருக்கும் அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்களையும், கர்ப்பமாக இருக்கும் பெண்களையும் விடுதலை செய்வதில் என்ன பிரச்சினை இருக்கிறதெனக் கேட்டதோடு, கிரிமினல் குற்றம் செய்யாத இளைஞர்களை வீட்டுக் காவலில் வைத்தே தண்டனையை நிறைவேற்றலாமே என்றும் கேட்டிருக்கின்றனர். உலகிலேயே அதிக நெருக்கடியான சிறைகளைப் பராமரித்து வந்த கொலம்பியா அரசு இப்போது கொரோனாவால் இந்தச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது.

-சிவா

புதன், 25 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon