மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 21 ஜன 2021

ஸ்பெயின்: படுக்கையிலேயே உயிரிழந்து கிடந்த 12 முதியவர்கள்!

ஸ்பெயின்: படுக்கையிலேயே உயிரிழந்து கிடந்த 12 முதியவர்கள்!வெற்றிநடை போடும் தமிழகம்

கொரோனா வேகமாக பரவி வரும் ஸ்பெயின் நாட்டில் கைவிடப்பட்ட முதியோர் 12 பேர் படுக்கையிலேயே உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கொரோனா வைரசால் இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். வைரஸ் பரவலைத் தடுக்க அந்த நாட்டு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் முதியோருக்கு கொரோனா வைரஸ் எளிதாக தொற்றிக்கொள்ளும் என்பதால் ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் முதியவர்களின் நிலை குறித்து கண்டறிய அந்த நாட்டு ராணுவ வீரர்களை பல்வேறு இடங்களுக்குக் குழுவாக அரசு அனுப்பியது.

மேலும், முதியோர் இல்லங்களில் கிருமி நாசினிகளைத் தெளிக்கவும் ராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி தலைநகர் மாட்ரிட்டில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள முதியோர் இல்லங்களைச் சுற்றி கிருமி நாசினி தெளித்தனர். அதனைத் தொடர்ந்து முதியோர் இல்லத்தின் உள்ளே கிருமி நாசினி தெளிக்க சென்றவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.

காரணம், பல இல்லங்களில் முதியவர்கள் கவனிக்க ஆளில்லாமல் முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்தனர். அதிலும் ஒரு சில இல்லங்களில் முதியவர்கள் படுக்கையிலேயே இறந்து கிடந்தனர். கொரோனா வைரஸ் பரவி வருவதால் முதியோர் இல்லங்களில் இருந்த பராமரிப்பாளர்கள் தங்களுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கொஞ்சமும் மனிதாபம் இன்றி முதியவர்களை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

இதன் காரணமாக நோய்வாய்ப்பட்டு படுத்து கிடந்த 12 முதியவர்கள் எவ்வித சிகிச்சையும் கிடைக்காமல் படுக்கையிலேயே தங்கள் உயிரை விட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கைவிடப்பட்ட நிலையில் இருந்த முதியவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து ஸ்பெயின் ராணுவ மந்திரி மரியா லூயிசா கார்சிடோ கூறுகையில், “இந்த மாதிரியான மனிதாபிமானமற்ற செயல்களை அரசு சகித்துக்கொள்ளப்போவதில்லை. தங்கள் கடமைகளைப் புறக்கணிக்கும் எவரும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள். வைரஸ் தொற்று அதிகரிக்கும் சூழ்நிலையில் முதியோர்கள் நடத்தப்படும் விதம் குறித்து இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கான பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்” எனக் கூறினார்.

ராஜ்

புதன், 25 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon