மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

கொரோனா: கிராமங்களில் எடுபடாத 144- தொடரும் விவசாயம்!

கொரோனா: கிராமங்களில் எடுபடாத  144- தொடரும் விவசாயம்!

கொரோனா வைரஸ் அச்சத்தால் தமிழகம் முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது, இந்த நிலையில் நேற்று இரவு டிஜிபி அலுவலகத்திலிருந்து கண்டிஷனான உத்தரவுகள் சில கொடுத்துள்ளார்கள். அதையடுத்து காவல்துறையினர் பம்பரமாகச் சுற்றிவருகிறார்கள். சாலையில் நடமாடுபவர்களை அன்பாகவும் மிரட்டலாகவும் பேசி அப்புறப்படுத்தி வருகிறார்கள். மாநில அரசு ஒரு புறம் என்றால், இன்னொரு புறம் பிரதமர் மோடி இன்று முதல் 21 நாட்களுக்கு இந்தியா முழுதும் முழு ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட எல்லையை முழுமையாக மூடிவிட்டார்கள். காவல்துறையினர், டூ வீலரில் கூட பக்கத்து மாவட்டத்திலிருந்து வருவதற்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவருகிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் இந்த ஊரடங்கு உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்பதே கள எதார்த்தமாக இருக்கிறது. இதற்கு கடலூர் மாவட்டமே ஒரு உதாரணமாக இருக்கிறது.

கடலூர் நகரத்தில் டி.எஸ்.பி.சாந்தி மற்றும் கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் இருவரும்.... சாலைகளில் பயணிப்பவர்களை மறித்து அவர்களுக்கு வகுப்பு எடுத்து அனுப்பி வைக்கிறார்கள். எனவே நகரம் பெருமளவு முடங்கிக் கிடக்கிறது. ஆனால் கடலூர், விழுப்புரம் மாவட்ட கிராமங்களில் மக்கள் கொரோனா பற்றி அறிந்திருந்தாலும் அதற்காக தங்களது தினசரி வேலைகளை இழக்கத் தயாராக இல்லை. நடவு நடுதல், மல்லாக் கொட்டை எடுத்தல் போன்ற வேலைகளுக்கு எவ்வித அச்சமுமின்றி இன்றும் (மார்ச் 25) கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருக்கிறார்கள்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புலவனூர் கிராமத்திலும், அதன் அருகே அமைந்திருக்கும் அமைச்சர் சம்பத்தின் கிராமமான குமாரமங்கலம் , தட்டாம்பாளையம் என பல கிராமங்களில் விவசாயத் தொழிலாளர்கள் வழக்கம்போல தங்கள் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். போட்டோ எடுத்துக் கொண்டு சில தொழிலாளர்களிடம் நாம் பேசியபோது, “ சார் டவுன்ல எல்லா கடையையும் எப்ப வேணும்னாலும் அடைக்கலாம். எப்ப வேணும்னாலும் திறக்கலாம். ஆனா விவசாயத்துல ஒரு நாள் தள்ளி வச்சா கூட ஒண்ணும் பண்ண முடியாது. நாத்து பறிக்காம விட்டா முத்திடும், நாத்து பறிச்சு அப்படியே போட்டா அழுகிடும். உழுத மண்ணை அப்படியே போட்டா மண்ணு இறுகிடும், பறிக்க வேண்டிய கடலைய பறிக்காம விட்டா திரும்ப பறிக்க முடியாது. அதனால எப்பாடு பட்டாலும் எங்க வேலையை செஞ்சுதான் சாமி ஆகணும். இல்லேன்னா எதிர்காலத்துல சோத்துக்கு எங்க போறது?” என்கிறார்கள்.

144 தடை உத்தரவின் போதும் கூட்டம் கூட்டமாக கிராமங்களில் விவசாய வேலை செய்வதை அரசு கவனிக்க வேண்டும். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதே நேரம் விவசாய வேலைகள் தடைபடக் கூடாது என்ற அவர்களின் வாதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். என்ன செய்யப் போகிறது அரசு?

-வணங்காமுடி

புதன், 25 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon