1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. மேலும், உத்தர பிரதேசத்தைப் போல 1 முதல் 9 வரையுள்ள வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சியளிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச் 25) சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்றது. தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி, சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், பள்ளிக் கல்வி துறைச் செயலாளர் தீரஜ் குமார் ஆகியோர் அதில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து முதல்வர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. அது தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று எனது தலைமையில் முகாம் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
நேற்று தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொது தேர்வு நடைபெற்றது. அதில் சில மாணவர்கள் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளால் தங்களால் தேர்வு எழுத செல்ல முடியவில்லை என்ற விவரத்தினை எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதனை கனிவோடு பரிசீலித்து நேற்று தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தவும், இத்தேர்வுக்கான தேதியை பின்னர் அறிவிக்க உத்தரவிட்டேன்.” என்று தெரிவித்தார்.
மேலும், “கொரோனா நோயை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டு இன்று வரை அமலில் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களால் இறுதித் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டேன்” என்றும் அறிவித்துள்ளார்.
எழில்