மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 15 ஜூலை 2020

தமிழகத்துக்கு ரூ. 4000 கோடி ஒதுக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

தமிழகத்துக்கு ரூ. 4000 கோடி ஒதுக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.4000 கோடி ஒதுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ராஜீவ்காந்தி, கேஎம்சி, ஈரோடு, திருப்பூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரையில் ஒருவர் உயிரிழந்தது தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று மேலும் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள். மற்றும் அவர்களுடன் வந்த சென்னையைச் சேர்ந்த பயண வழிகாட்டியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் 22ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த பதிவில், “தமிழகத்தில் மொத்தம் 2,09,276 பேரிடம் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில், 15,492 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். மருத்துவமனையில் 211 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 890 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காகத் தமிழகத்துக்கு ரூ.4000 கோடி ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு வழங்கப்படும் நிதியை 400 கோடி ரூபாயிலிருந்து 500 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக ரூபாய் 500 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் எனவும் மொத்தம் 4 ஆயிரம் கோடி ரூபாய் கொரோனா பாதிப்புக்காக உடனடியாக தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் கொரோனா பாதிப்பு தொடர்பாக இன்று இரவு 7 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிபிரியா

புதன், 25 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon