மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 15 ஜூலை 2020

ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல: முதல்வர் அறிவுரை!

ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல: முதல்வர் அறிவுரை!

கொரோனாவை தடுக்க யாரும் வீட்டை வீட்டு வெளியே வர வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23ஆக உள்ள நிலையில், மதுரையைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் தமிழகத்தில் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்புப் பணிகளுக்கு 4 ஆயிரம் கோடி நிதி வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் தொலைக்காட்சியில் இன்று மாலை 7 மணிக்கு தோன்றி தமிழக மக்களிடம் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "இந்த சமயத்தில் உங்களில் ஒருவனாக, உங்களது குடும்பத்தில் ஒருவனாகப் பேசுகிறேன். உலகத்தை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் துவங்கி காட்டுத் தீ போல பரவி வருவதை நாம் பார்க்கிறோம். மத்திய அரசின் உத்தரவுப்படி 21 நாட்கள் ஊரடங்கை நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

இந்த வைரஸ் எவ்வாறு பரவுகிறது, இதனை தடுக்க வேண்டியது எப்படி என ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருப்பது காலத்தின் கட்டாயம். கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதற்காக 3,780 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10,158 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.

அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பற்றி பேசிய முதல்வர், “அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது, அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நோயின் தீவிரத்தை உணர்ந்து யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்கள் அவர்களாகவே முன்வந்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் யார் வேண்டுமானாலும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். உங்கள் குடும்பம் எப்படி உங்களுக்கு முக்கியமோ அதுபோலத்தான் ஒவ்வொருவரின் குடும்பமும் அரசுக்கு முக்கியம். இதனை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். 21 நாட்கள் ஊரடங்கு என்பது விடுமுறைக்காலம் அல்ல. உங்களையும் உங்களது குடும்பத்தினரையும் பாதுகாப்பதற்கான உத்தரவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, “பொதுமக்கள் வெளியூர் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொறுப்பான குடிமக்களாக இருந்தும் நம்மையும் சமுதாயத்தையும் காப்போம். அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் 3 அடி இடைவெளி விட்டு சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். கடுமையான சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல் இருந்தால் மருத்துவமனைகளை அணுகவும். மருத்துவர்களின் ஆலோசனையின்றி சுய மருத்துவம் செய்யாதீர்கள்” என்று ஆலோசனைகள் வழங்கிய முதல்வர்,

“கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், அடிக்கடி கைகளை கழுவவும், இருமும்போதும் தும்மும்போதும் கைக்குட்டையால் மூடிக்கொள்ளவும். அரசு பிறப்பிக்கும் உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றுபட்டு கொரோனாவிலிருந்து தமிழகத்தைக் காப்போம். கொரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு... விலகி இரு... வீட்டில் இரு..” என்றும் குறிப்பிட்டார்.

எழில்

புதன், 25 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon