மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 26 செப் 2020

கொரோனா பாதிப்பும், புலம்பெயரும் தொழிலாளர்களும்!

கொரோனா பாதிப்பும், புலம்பெயரும் தொழிலாளர்களும்!

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பொதுச் சுகாதார அவசர நிலை தீவிரமடைந்து வரும் நிலையில், மார்ச் 25 தொடங்கி அடுத்த மூன்று வாரங்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கும் என்ற நிலையில் இதுவரை கண்டிராத ஒரு சூழலுக்கு நாடே தள்ளப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளின் பட்டியலில் ரயில் சேவை இடம்பெறவில்லை. சொல்லப்போனால், ரயில் சேவை சென்ற வாரமே நிறுத்தப்பட்டுவிட்டது.

இதன் விளைவாக, புலம்பெயர்ந்து வேலைசெய்யும் தொழிலாளர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். வேலைதேடி ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குப் புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கை கடந்த முப்பதாண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்துவரும் போக்கை நாம் பார்க்க முடிகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வழங்கும் தரவுகளின்படி 2001-2011 காலத்தில், புலம்பெயரும் உழைப்பாளி மக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் சராசரியாக 4.5 விழுக்காடு வளர்ந்தது. இது 1991-2001 காலத்தில் கண்ட வளர்ச்சி 2.4 விழுக்காடு மட்டுமே. இந்தியாவின் மொத்த உழைப்புப் படையில் புலம்பெயர்ந்தவர்களின் பங்கு 2011இல் 10.5 விழுக்காடு; இது 1991 மற்றும் 2001 ஆண்டுகளுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வெறும் 8.1 விழுக்காடாக இருந்தது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 2000க்குப்பின், வேலை சார்ந்த புலம்பெயர்வு ஆண்டுக்குச் சராசரியாக 5 கோடி முதல் 9 கோடி வரை இருந்து வந்துள்ளது. இந்த விவரங்களைப் பொருளாதார ஆய்வறிக்கை 2016-17 நமக்கு வழங்குகிறது. வேலை தேடி சொந்த மாநிலத்திற்குள்ளேயே புலம்பெயர்ந்தவர்கள் வெறும் எட்டு விழுக்காடு மட்டுமே. வேலைக்காகப் பிற மாநிலங்களுக்குப் புலம்பெயர்பவர்களில் 47 விழுக்காடு மக்கள் பிகார் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

புலம்பெயர்பவர்களில் பெரும்பகுதியினர் வேலை தேடி சூரத், மும்பை, டெல்லி சுற்றியுள்ள பகுதிகளுக்கும், தென்மாநிலங்களுக்கும் நகர்கின்றனர். புலம்பெயரும் இடத்தில் அவர்களுக்கு பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு பலன்கள் இரண்டுமே இருப்பதில்லை. குறைந்த கூலிக்குக் கடின உழைப்பைச் செலுத்த வேண்டிய பணிகளில் அவர்கள் அமர்த்தப்படுகின்றனர். அரசின் ஊரடங்கு உத்தரவினால் மொத்தப் பொருளாதாரமே ஸ்தம்பித்துப் போகும்போது அவர்களின் நிலை என்னாகும் என்ற கவலை எழுகிறது.

மேலும், கொரோனா வைரஸ் நகரங்களில்தான் வேகமாகப் பரவுவதாகச் சொல்லப்படும் நிலையில், புலம்பெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் நகரங்களிலிருந்து கிளம்பி கூட்டம்கூட்டமாக தங்கள் கிராமங்களுக்குச் செல்லும்போது இந்தத் தொற்று பரவலாகும் அபாயமும் இருக்கிறது. இந்தியாவில் மக்களிடையே கொரோனா வைரஸ் எந்த அளவுக்குப் பரவியுள்ளது என்பதே தெரியாத நிலையில், அடுத்த மூன்று வாரங்கள் இயன்றவரை அனைவரும் வீட்டிலேயே இருந்துகொண்டு Physical Distancing-ஐ கடைப்பிடிக்க வேண்டும் என்பது தவிர்க்கமுடியாத ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் புலம்பெயர்ந்து வேலை செய்பவர்களின் நடமாட்டம் முடங்கினால், அவர்களுக்குத் தங்க இடமும், உண்ண உணவும், மருத்துவப் பாதுகாப்பும் வழங்குவதை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் எப்படி உறுதி செய்யப்போகின்றன என்ற கேள்வி எழுகிறது.

-ரகுநாத்

வியாழன், 26 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon