மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 1 ஏப் 2020

மகனுக்குக் கொரோனா - மறைத்த பெண் அதிகாரி: அதிரடி காட்டிய ரயில்வே!

மகனுக்குக் கொரோனா - மறைத்த பெண் அதிகாரி: அதிரடி காட்டிய ரயில்வே!

இந்தியா முழுக்க ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் நிலையில், தன் மகனுக்குக் கொரோனா பாதிப்பு இருந்ததை மறைத்த ரயில்வே அதிகாரி பெங்களூருவில் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ரயில்வேயில் துணை மேலாளராகப் பணியாற்றும் பெண் அதிகாரியின் மகன் ஒருவர் சமீபத்தில் இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் சென்று விட்டு இந்தியாவுக்கு திரும்பினார். அவரை பெங்களூரு விமான நிலையத்தில் பரிசோதித்த மருத்துவர்கள், வீடு சென்றதும் தனிமையில் இருக்க அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆனால், பெண் அதிகாரி, மகனை தன் வீட்டில் தங்க வைத்தால், மற்றவர்களுக்கும் நோய் பரவும் என்று பயந்து தன் மகனுக்குக் கொரோனா அறிகுறி இருப்பதை மறைத்து ரயில்வே கெஸ்ட் ஹவுஸில் தங்கவைக்க முடிவு செய்துள்ளார்.

தன் மகன் சென்று வந்த இடங்களை மறைத்து, பெங்களூரு ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே காலனிப் பகுதியில் தென்மேற்கு ரயில்வேக்குச் சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் அவரைத் தங்க வைத்துள்ளார். ஐந்து நாள்களுக்குப் பிறகு அந்த இளைஞரிடத்தில் சோதனை நடத்தியபோது, அவரை கொரோனா தாக்கியிருப்பது தெரியவந்தது. கொரோனா அறிகுறியுடன் வந்த மகனை வீட்டில் தனிமைப்படுத்தாமல், ரயில்வே கெஸ்ட் ஹவுஸைப் பயன்படுத்தியதற்காக, அந்தப் பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வேயின் செய்தி தொடர்பாளர் விஜயா கூறுகையில், “ரயில்வே காலனியில் தன் மகனைத் தங்கவைத்து மற்றவர்கள் உயிருடன் அந்த அதிகாரி விளையாடியுள்ளார். இத்தகையை அலட்சியத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரை சஸ்பெண்ட் செய்துள்ளோம்” என்றார்.

-ராஜ்

வியாழன், 26 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon