கொரோனா: ஒன்றிய அரசு செய்யத் தவறியதும் செய்ய வேண்டியதும்!

public

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொது சுகாதார அவசரநிலையைச் சமாளிக்க ஒன்றிய அரசைவிட மாநில அரசுகள்தான் துரிதமாகச் செயல்பட்டு குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளன. அதிலும் கேரளம் மற்றும் ஒடிசா மாநில அரசுகள் இதுபோன்ற நெருக்கடி நேரத்தில் அரசு இயந்திரம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளன. ஆனால், இந்த நெருக்கடியின் தீவிரம் தெளிவான பின்பும், எவ்வகைத் திட்டமிடலும் இல்லாமல் ஊரடங்கு உத்தரவு போடுவதும், மக்கள் வீட்டிலிருந்துகொண்டு Physical Distancing-ஐ கடைப்பிடிப்பதோடு மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கைகூப்பி வேண்டிக் கொண்டதையும் தவிர, ஒன்றிய அரசு தன்னுடைய மிகப்பெரிய பொறுப்புகளை உணர்ந்து செயல்படத் தொடங்கவில்லை.

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் ஒரு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியாக விஸ்வரூபம் எடுக்கக் காத்திருக்கிறது. கொரோனா பரவுவதைத் தடுக்க மக்கள் நடமாட்டத்தையும் ஒன்று கூடுவதையும் தடுக்கும் நோக்கத்தோடு போடப்பட்டுள்ள 21 நாட்களுக்கான ஊரடங்கு உத்தரவு, இந்தியப் பொருளாதாரத்தை அசைத்துப்பார்க்கப் போகிறது. இந்த நெருக்கடியை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று பலதரப்பட்ட நிபுணர்கள் ஆலோசனைகள் வழங்கி வந்தனர். 21 நாட்கள் பொருளாதாரத்தின் பெரும்பகுதிகள் இயங்குவதை நிறுத்தினால் எவ்வகைப் பாதுகாப்பும் இல்லாத 45 கோடி முறைசாராத் தொழிலாளர்கள் நிச்சயமாக பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு அரசு எப்படி பொருளாதார நிவாரணம் வழங்கும் என்ற எந்த அறிவிப்பும் இன்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மார்ச் 26 மதியம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய அரசு தயார் செய்துள்ள பொருளாதார நிவாரணத் தொகுப்பு ஒன்றை அறிவித்தார். [அதன் விவரங்களை மின்னம்பலம் வாசகர்கள் இங்கே படிக்கலாம்:](https://minnambalam.com/public/2020/03/26/56/corona-virus-lockdown-people-get-benifits-Rs1.7-lakh-crore-fm-Nirmala-Sitharaman.)

தாமதமாக வந்துள்ள இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை. 80 கோடி இந்தியர்கள் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக அடுத்த மூன்று மாதங்களுக்கு இருமடங்கு கூடுதலாகப் பயன்பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில மாநில அரசுகள் இதுபோன்ற அறிவிப்புகள் விடுத்துள்ள நிலையில் ஒன்றிய அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கதுதான். ஆனால், புலம்பெயர்ந்து வேலை செய்யும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வேலை இழந்து, ஊர்களுக்கும் திரும்ப முடியாமல் வேறு மாநிலங்களில் சிக்கிக்கொண்டுள்ளனர். இவர்கள் இந்த பயன்களை எப்படிப் பெறுவார்கள் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. தன்னுடைய ரேஷன்கார்டை வைத்துக்கொண்டு இந்தியாவில் எந்த ரேஷன் கடையிலும் அரிசி, கோதுமை, பருப்பு போன்ற உணவுப்பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்ற Portable PDS ஏற்பாடு இங்கில்லை. இவர்களுக்குத் தமிழகத்தில் இருக்கும் அம்மா உணவகம் போன்ற Community Kitchen களைப் பயன்படுத்தி, இதுபோன்ற அமைப்புகள் இல்லாத மாநிலங்களில் அவற்றை உடனடியாக உருவாக்கி, மூன்று வேளை உணவு சமைத்து வழங்க மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும்.

PM-KISAN திட்டத்தில் பதிவு செய்துள்ள 8.7 கோடி விவசாயிகளுக்கு மாதம் ரூ.2,000, ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் 20.40 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.500 என அடுத்த மூன்று மாதங்களுக்கு அவர்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக, ஊரகப் பகுதிகளில் வங்கிகளின் என்ணிக்கை குறைவு. மேலும் இந்த நேரத்தில் பணத்தை எடுக்க மக்கள் கூட்டம்கூட்டமாக வங்கிகளுக்குச் செல்வதென்பது ஆபத்தானது. இரண்டாவதாக, பொருளாதாரம் முடங்குவதால், அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும்பட்சத்தில் வாங்கும் திறன் அதிகமாக இருப்பவர்கள் பொருட்களை வாங்கிப் பதுக்க தொடங்குவார்கள். இதன் விளைவாகத் தட்டுப்பாடு அதிகரித்து, பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது. அப்படியொரு நிலை ஏற்பட்டால், அத்தியாவசியப் பொருட்களை நேரடியாக மக்களுக்குக் கொண்டுசேர்க்க அரசு இப்போதே திட்டமிடத் தொடங்க வேண்டும்.

தூய்மை, சுகாதார மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்குத் தாராளமான சிறப்புக் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுடைய உடனடித் தேவை பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உயர்த்தப்பட்ட சம்பளம். அவற்றை வழங்க அரசு பெரிய அளவுக்கு ஒதுக்கீடு செய்து, அவர்களுக்கு அவை விரைவாகச் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூலி நிலுவையில் இருந்தால் அந்தத் தொகையைப் பணமாக நேரடியாகவே அவர்கள் கையில் வழங்க வேண்டும். சிறுபிள்ளைகளுக்கு அங்கன்வாடியில் கிடைக்கும் உணவு அவர்கள் வீட்டுக்கே கொண்டு சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் வேண்டும்.

**-ரகுநாத்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *