மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

ஊரடங்கு உத்தரவு மூன்று மாதம் நீடிக்கும்? ரிசர்வ் வங்கி சூசகம்!

ஊரடங்கு உத்தரவு மூன்று மாதம் நீடிக்கும்?  ரிசர்வ் வங்கி சூசகம்!

-மணியன் கலியமூர்த்தி

2008ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை அளவில் ஏற்படுத்தப்பட்ட சில மாற்றங்களால், அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரித்தன. மேலும் வங்கிகள் சார்ந்த முதலீடுகளுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எதிர்பாராத விதமாக மிக வலுவானதாக மாறியது. கடந்த ஓரிரு வருடங்களாகவே இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் இந்தியப் பொருளாதாரத்தின் மேல் மேலும் ஓங்கியடித்திருக்கிறது.

கொரோனா , இன்று உலகில் உள்ள அனைத்து மக்களும் அச்சத்துடன் உச்சரிக்கும் ஆட்கொள்ளி நோய். இந்த நோயின் பிடியில் சிக்கிய மனிதர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதன் பொருளாதாரங்களையும் நிலைகுலைய வைத்துள்ளது இந்த தொற்று நோய்.

கடந்த காலங்களில் மனிதர்களை மட்டுமே தாக்கி வந்த பல கொள்ளை நோய்களைக் காட்டிலும், இந்த வைரஸ் தாக்குதலால் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, ஏற்றுமதி இறக்குமதி என்று மனித நாகரீகத்தின் தொட்டில் எனக் கருதப்பட்ட அத்தனையும் துவம்சம் செய்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இந்தியாவிற்குள் கண்டறியப்பட்ட இந்த கோரோனா வைரஸ் தாக்குதல், நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் வரை பரந்து விரிந்துள்ளது. ஏற்கனவே. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மேலும் ஆட்டோமொபைல், ஜவுளி, மென்பொருள், மருத்துவம், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி என நாட்டின் ஜிடிபி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து துறைகளும் எதிர்பாராத அளவிற்கு திவால் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில். கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 ஊரடங்கு உத்தரவினால் அனைத்து தொழில் துறையும் முடங்கிப் போயுள்ளது. மேலும் அதிகப்படியான வேலையிழப்பை தேசம் கண்டு வரும் இந்த சூழலில் பொதுமக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதை அறிந்த மத்திய அரசு , கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு சுமார் 1.70 லட்சம் கோடி அளவிற்கு சலுகைகளை அறிவித்தது.

மேலும் இந்தியாவின் நிதியாண்டில் மிக முக்கியமான மாதம் இது என்பதால், வருமான வரித்துறை மற்றும் நிர்வாகத்துறையில் உள்ள ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க இந்த நிதியாண்டின் வருமான வரி தாக்கலுக்கான கடைசி தேதியை வரும் ஜீன் இறுதி வரை நீடிப்பு செய்வதாக அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில் கடந்த 26ம் தேதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் சோனியா காந்தி ரிசர்வ் வங்கி கவர்னருக்கு எழுதியுள்ள கடிதத்தில். வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கான தவணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள்

இந்தப் பின்னணியில் இன்று (மார்ச் 27) வெள்ளிக்கிழமை காலை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி கந்த தாஸ், நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதங்களை 4 சதவிதமாக குறைப்பதாகவும், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மைக்ரோ நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் கடன் வாங்கியவர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கான தவணையை வசூலிக்க வேண்டாம் என்று அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி வங்கிகளில் பணம் எடுக்க எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட வில்லை எனவும், கொரோனாவால் ஏற்பட்டு வரும் பொருளாதார தேக்க நிலையை தீவிரமாக கவனித்து வருவதாகவும். சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையால். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் நாடு பெரும் கவலையில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் கடுமையாக சரிந்து வந்த பணவீக்கம் தற்போது கட்டுக்குள் உள்ளதாக கூறியுள்ளார் ரிசர்வ் வங்கி கவர்னர்.

ஏற்கனவே வரும் ஏப்ரல் 14 தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள இந்த வேளையில். நிதியமைச்சரும் ரிசர்வ் வங்கியின் கவர்னரும் அறிவித்துள்ள இந்த சலுகைகள் மக்களுக்கு சற்று ஆறுதல் தரும் படியான செய்தியாக இருந்தாலும். இந்த தொடர் சலுகை அறிவிப்புகளைக் காணும் போது. இந்த ஊரடங்கு உத்தரவு மீண்டும் நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாகவே தோன்றுகிறது.

சீனாவும் இந்தியாவும்

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரிக்க தொடங்கியபோது. முதன் முதலாக இந்த வைரஸ் பரவியதாக கண்டறியப்படும் வூஹான் மட்டுமின்றி ஒட்டுமொத்த சீனாவும் ஊரடங்கில் முடங்கியது. இதன் காரணமாக சீனாவில் உற்பத்தியான பொருட்கள் வேறு எந்த நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவில்லை. மேலும் உள்நாடு வெளிநாடு விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதற்கு பிறகு இந்த வைரஸ் ஒவ்வொரு நாடுகளாக பரவி வரும் இந்த சூழலில் தற்போது தான் சீனாவில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டு வருகிறது. கிட்டதட்ட 3 மாதங்கள் அந்த நாட்டு மக்கள் வீட்டிற்குள்ளேயே அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்தியாவில் தற்போது தான் இந்த வைரஸ் தாக்குதல் தீவிரமாகியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மதியம் வரை இந்தியாவில் சுமார் 725 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 17 பேர் இதுவரை மரணமடைந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் இதற்கு மேல் தான் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் மே அல்லது ஜூன் மாதம் வரையிலும் நீடிக்கப்பட வாய்ப்புள்ளதை அறிய முடிகிறது. மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இந்த சலுகைகளை சற்று ஆராய்ந்து பார்த்தால் நாடு கடும் அபாய கட்டத்தில் பயணிப்பதைக் காண முடிகிறது .

மூன்று மாதங்கள்

மருத்துவம், சுகாதாரம் , சமூக விலகலில் முன்மாதிரியாக உள்ள சீனாவிலேயே இந்த வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த சுமார் 3 மாத காலங்கள் தேவைப்படும்போது. இந்தியாவிற்கும் அதுபோல சுமார் 3 மாதங்கள் தேவைப்படும் என்று தெரிவிக்கின்றனர் மருத்துவ வட்டாரங்கள் கடும் பொருளாதார மந்தநிலை மற்றும் வளர்ந்து வரும் நிலையில் உள்ள மருத்துவ துறையில் ஆயிரத்திற்கு 200 பேருக்கு மட்டுமே வெண்டிலேட்டர் வசதி உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இதன் தாக்கம் அதிகரிக்கும் போது இந்தியா அதிகப்படியான உயிரிழப்புகளை சந்திக்கும் என்று எச்சரிக்கை செய்துள்ளது உலக சுகாதார நிறுவனம். உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் கடந்த சில நாட்களில் மட்டும் 85 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 1500 பேருக்கு மேல் மரணமடைந்துள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்தியாவில் இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த இன்னும் சில மாதங்கள் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படும் என்று வந்துள்ள தகவலை அடுத்து. இந்தியாவில் உள்ள பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியதாக கருதப்படும் சுமார் 80 கோடி பேரின் வாழ்வாதாரம், அரசு அளிக்கும் சிறிய அளவிலான சலுகைகளால் காப்பாற்றப்படுமா என்ற கேள்விக்குறி பெரிதாக எழுந்து நிற்கிறது.

வெள்ளி, 27 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon