கொரோனா: முக கவசத்துடன் நடந்த திருமணங்களும் கும்பாபிஷேகமும்!

public

கொரோனா அச்சம் எதிரொலியாக தமிழ்நாட்டில் பல இடங்களில் ஏற்கெனவே முகூர்த்த நாள் குறிக்கப்பட்ட திருமணங்கள் எளிமையாக நடந்தன. இதில் கலந்துகொண்ட மணமக்கள், முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் முக கவசம் அணிந்து பங்கேற்றனர்.

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி வெளியில் செல்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. தேவையின்றி இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை எச்சரித்து போலீஸார் 144 தடை உத்தரவைத் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். இன்னும் சில போலீசார் விதிகளை மீறி வெளியில் சுற்றித்திரிந்த நபர்களைக் கண்டித்து தோப்புக்கரணம் போடச்சொல்லி எச்சரித்து அனுப்புகின்றனர்.

இந்த நிலையில் நேற்று (மார்ச் 26) முகூர்த்த நாள் என்பதால் ஏற்கெனவே திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை எளிமையாக ஏற்பாடு செய்திருந்தனர். தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அரசும், மாவட்ட நிர்வாகமும் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று திருமணங்கள் எளிய முறையில் நடைபெற்றன.

குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பல திருமணங்கள் அவரவர் குடும்பத்தினரை மட்டும் வைத்து நடத்தப்பட்டன. ஒரு சில உறவினர்கள் வந்து கலந்து கொண்டு உடனடியாகத் திரும்பி சென்றனர். ஒருமணி நேரத்திற்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்து கொண்டனர். விழாக்களில் கலந்து கொண்டவர்கள் மணமக்கள் உள்பட முக கவசம் அணிந்து இருந்தனர்.

கும்பாபிஷேகம்

இதேபோல் காரைக்குடி கணேசபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று (மார்ச் 26) நடைபெற்றது. முன்னதாக இந்த கோயிலில் திருப்பணி வேலைகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த பணிகள் நிறைவு பெற்றதும் கும்பாபிஷேக பணிகள் நேற்று நடைபெற்றது.

கும்பாபிஷேகம் தொடர்பாக கோயில் நிர்வாகிகள் காரைக்குடி தெற்கு போலீசாரிடம் அனுமதி கேட்டனர். போலீசார் சார்பில் கும்பாபிஷேகத்தில் அதிக அளவு மக்கள் கூட்டம் கூடக்கூடாது என்றும், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்றும் பல்வேறு நிபந்தனைகளை கூறி கும்பாபிஷேகத்துக்கு அனுமதி வழங்கினர்.

இதையடுத்து கடந்த 23ஆம் தேதி முதல் கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. அதன் பின்னர் நேற்று காலை 5 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு அதன் பின்னர் கடம் புறப்பாடு நடைபெற்று, கும்பாபிஷேகம் நடைபெற்றது

இதில் பிள்ளையார்பட்டி தேனாட்சியம்மன் கோயில் அர்ச்சகர் காளீஸ்வர குருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள், கோயில் நிர்வாகிகள் உள்பட 30 பேர் மட்டும் முககவசம் அணிந்தபடி கலந்து கொண்டனர். மற்ற பக்தர்களை கோயிலுக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை. கோயில் அருகில் உள்ள வீடுகளின் மாடியில் நின்றபடி பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியை தரிசனம் செய்தனர். பின்னர் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் காலை 10 மணிக்கு மீண்டும் கோயில் நடை சாத்தப்பட்டு அங்கிருந்த பக்தர்களை வீடுகளுக்குச் செல்லும்படி போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

**ராஜ்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *