மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

உலகப் பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கிறது: ஐ.எம்.எஃப் அறிவிப்பு!

உலகப் பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கிறது: ஐ.எம்.எஃப் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா எதையும் எதிர்த்துப் போராடும் என்று கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று இரவு, “மூடப்பட்ட  வென் டிலேட்டர் நிறுவனங்கள் மீண்டும் தங்கள் உற்பத்தியைத்  தொடங்குங்கள்... ம்... வேகமாக’ என்று அவசர ட்விட் செய்துள்ளார். ஏனெனில்  அமெரிக்கா கொரோனாவால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து  வருகிறது.  அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துவிட்டது. இதனால்தான் டிரம்ப் இப்படி வெண்டிலேட்டர் நிறுவனங்களை வேகப்படுத்தியிருக்கிறார்.

இந்நிலையில்,  “நாம் கடுமையான பொருளாதாரப் பின்னடைவுக்குள் நுழைந்துள்ளோம்” என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கூறியுள்ளார்.  நேற்று (மார்ச் 27) ஆன் லைன் மூலம் உரையாற்றிய  சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, “கொரோனா வைரஸ் தொற்று உலகப் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்துள்ளது, இது வளரும் நாடுகளுக்கு மிகப் பெரிய நிதித் தேவையை ஏற்படுத்தும். 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட  உலகளாவிய நிதி நெருக்கடியைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலையை விட   இனி வரும் காலங்கள்  மோசமாக இருக்கும். உலகமே பொருளாதார  மந்தநிலைக்குள் நுழைந்தோம் என்பது தெளிவாகிறது" என்று அவர் ஒரு ஆன்லைன் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேலும் அவர் "வளர்ந்து வரும் சந்தைகளின் ஒட்டுமொத்த நிதித் தேவைகளுக்கான நிதியின் மதிப்பீடு 2.5 டிரில்லியன் டாலர்.  80 க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திடம் அவசர உதவி கோரியுள்ளன” என்றும் தெரிவித்தார்.

-வேந்தன்

சனி, 28 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon