சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள்: சிறகு கொடுக்கும் ஸ்பைஸ்ஜெட்!

public

வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் முன்வந்துள்ளது.

ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் ஏற்கனவே இந்திய அரசுக்காக மருத்துவ உபகரணங்கள் மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நடந்து நடந்தே வீட்டுக்குச் செல்லும் தொழிலாளர்கள் குறித்த கவலை செய்திகளைக் கேட்டதற்குப் பிறகு, மனிதாபிமான அடிப்படையில் தொழிலாளர்களை வீட்டில் சேர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஜய் சிங், மனிதாபிமான அடிப்படையில் இந்த இக்கட்டான நேரத்தில் இந்திய அரசுக்கு எங்களது விமானங்கள் மற்றும் குழுவினர் மூலம் உதவி புரிந்து வருகிறோம். இந்த சூழ்நிலையால் சிக்கலான சூழலில் மாட்டிக் கொண்டுள்ள தொழிலாளர்களுக்கு, குறிப்பாகப் பீகாரிலிருந்து, பிற மாநிலங்களுக்கு வேலைக்குச் சென்றிருக்கும் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் மத்திய அரசுக்கும், இந்தியர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள எங்களால் முடிந்த உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம். ஒரு நோயிலிருந்து நம்மை காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார தொழிலாளர்கள், காவல்துறையினர், தன்னார்வலர்கள் என பலரும் இணைந்து சிறப்பான வேலையைச் செய்து வருகிறார்கள். அதற்கு எங்களால் முடிந்த அளவு சிறு உதவியைச் செய்வதற்கு நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

மார்ச் 27ஆம் தேதி ஸ்பைஸ்ஜெட், இந்திய அரசின் கோரிக்கையின் கீழ் டெல்லியிலிருந்து கோயம்புத்தூருக்கு ஒரு விமானத்தை இயக்கியது. அதில் மருத்துவப் பணியாளர்கள் அணியும் உடைகளை அந்த விமானம் சுமந்து வந்தது.

ஏப்ரல் 14 இரவு வரை அனைத்து விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மட்டுமல்லாமல் கோஏர், இன்டிகோ ஆகிய நிறுவனங்களும் தங்களது விமானங்களை வைத்து அரசுக்கு உதவி புரிய முன்வந்துள்ளன.

குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பலர் பல்வேறு மாநிலங்களிலும், உணவு கூட வாங்க முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

**-பவித்ரா குமரேசன்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *