மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

பார்க்கவும் முடியல, பேசவுமில்ல - அமித்ஷா எங்கே?: கபில் சிபல்

பார்க்கவும் முடியல, பேசவுமில்ல - அமித்ஷா எங்கே?: கபில் சிபல்

கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி 906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவால் கேரளாவில் உயிரிழந்த முதல் நபர் இவர் ஆவார்.

கொரோனா வைரசால் உயிரிழப்பு மட்டுமின்றி நாட்டில் பல்வேறு தாக்கங்களும் ஏற்பட்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். குழந்தைகளுடன் பல நூறு கிலோமீட்டரையும் பொருட்படுத்தாமல் சொந்த ஊருக்குக் கிளம்பும் தொழிலாளர்களையும் காண முடிகிறது.

ஊரடங்கு உத்தரவால் ஒரு சில இடங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்பவர்களையும் கூட போலீசார் தாக்கும் வீடியோக்கள் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. மறுபக்கம், தமிழகத்தில் கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கின்றனர்.

இதுமட்டுமின்றி வெளி ஊர்களில் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இதுவொரு பக்கம் என்றால், மறுபக்கம் மருத்துவமனைகளில் போதிய உபகரணங்கள் இல்லை. குறிப்பாக வெண்டிலேட்டர் வசதி இல்லை என்ற தகவலும் வந்து கொண்டிருக்கிறது. ஆக கடந்த 10 நாட்களாக பெரும் பிரச்சினைகளைச் சந்தித்து வரும் நிலையில் இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா எந்தவித பதிலோ அறிவிப்போ வெளியிடாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் அமித்ஷா எங்கே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். #WhereisAmitshah என்ற ஹேஷ்டேக்கை தற்போது இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர்.

உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமித்ஷா மூன்று மாத தனிமைப்படுத்தலில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நிலவும் நிலையில் இதுகுறித்து அமித்ஷா வாயைக் கூட திறக்கவில்லை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில், ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோர் தங்கள் வீட்டுக்கு நடந்தே செல்கின்றனர், சிலர் வீட்டுக்குச் செல்ல முடியாமல் திணறுகின்றனர். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒரு வார்த்தை பேசவுமில்லை, அவரை பார்க்கக் கூட முடியவில்லை. அரசு முடிவுகளின் தற்போதைய நிலையை நாங்கள் உணர்கிறோம்” என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒரு சிலரோ, யாரேனும் அவரை சந்தித்தால் செய்தியாளர்களைச் சந்திக்கச் சொல்லுங்கள் என்றும், ஒருவேளை அவருடைய முகத்தை மறைப்பதற்காக மாஸ்க் தயாரித்துக்கொண்டிருக்கிறாரோ என்னமோ என்று கிண்டலாகப் பதிவு செய்து வருகின்றனர்.

கவிபிரியா

சனி, 28 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon