சிறப்புக் கட்டுரை: கொரோனா – அச்சம் தவிர், ஐயம் களை!

public

-நிலவளம் கு.கதிரவன்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக வதந்திகள், நாளும் சமூக ஊடகங்கள், இணையங்கள் வழியாக வேகமாகப் பரவி வருகின்றன. இப்புனைவிலிருந்து உண்மை பிரித்தறிவது பெரும் சவாலாகவே உள்ளது. ஆனால், இத்தகைய புனைவுகள் உலகெங்கிலும் இவ்வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றும் இதர மக்களிடையேயும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலையில் இப்போக்கு மிகவும் ஆபத்தானது ஆகும்.

முகமூடி அணிந்து கொண்டால் வைரஸின் பாதிப்பிலிருந்து முற்றிலும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது முழுதான உண்மையல்ல. காரணம், அறுவை சிகிச்சை பயன்பாட்டுக்காக தயாரிக்கப்படும் முகமூடிகள் வைரஸ் துகள்களைத் தடுக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை அல்ல. ஆனால் இதன் ஒரே பயன் பாதிக்கப்பட்டவர்களின் வாயிலிருந்து வெளியேற்றப்படக் கூடிய சுவாசக் கிருமிகள், மேலும் பரவாமல் தடுத்துக் கொள்ள பயன்படுகிறது.

அதே போன்று சாதாரண காய்ச்சலைக் காட்டிலும், கொரோனா வைரஸ் நோய்க் கிருமி தொற்றால் ஏற்படும் பாதிப்பு குறைவு என்பதான ஒரு தகவல். ஆனால், சாதாரண சாய்ச்சலால் ஒரு நபர் சராசரியாக 1.3 நபருக்கு தொற்றுக் கிருமிகளைக் கடத்துகிறார் என்றால், கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நபர் சராசரியாக 2.2 நபருக்கு நோய்த் தொற்றை ஏற்படுத்துகிறார். என்றாலும், கொரோனாவைத் தடுக்க எந்த தடுப்பூசியும் இல்லை என்றாலும் பருவ காலங்களில் ஏற்படும் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் இவ் வைரஸை ஒப்பீட்டளவில் நன்றாக தடுப்பதாக நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய ஆராய்ச்சியாளர்கள் (Centers for Disease Control and Prevention – CDC) கூறுகிறார்கள்.

கொரோனா வைரஸ் என்பது பல்வேறு நோய்களை உள்ளடக்கிய வைரஸ்களின் பெரிய குடும்பமாகும். இது சாதாரணமாக நமக்குப் பிடிக்கும் ஜலதோஷத்தின் பிறழ்ந்த வடிவமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் மனிதர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கு முன்பு இடைநிலை விலங்குகள் வழியாக நம்மை வந்தடைந்த வைரஸாகும்.

மேலும் ஒரு வதந்தியாக, இக் கொரோனா வைரஸ் மனிதனால் ஆய்வகங்கள் மூலம் உருவாக்கப்பட்டவை என்பது மேற்குலகத்தால் சொல்லப்படுகிறது. சுமார் பத்தாண்டுகளில் SARS-CoV, MERS-CoV மற்றும் SARS-CoV-2 ஆகியவை வௌவால்களில் இருந்து தோன்றியதாகத்தான் CDC ஆய்வறிஞர்கள் கூறுகிறார்கள்.

அடுத்ததாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால் மரணம் உறுதி என்பதும் கடுமையாகப் பரவும் வதந்தி. சீன நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 81% பேருக்கு லேசான பாதிப்பும், 13.8% பேர் கடுமையான பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளதாக ஆய்வுத் தரவுகள் கூறுகின்றன. கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியோருக்கு மூச்சுத் திணறல் அல்லது கூடுதலான ஆக்சிஜன் தேவை என்ற நிலைமையில் உள்ளதாகவும், 4.7% பேருக்கு மட்டுமே சுவாசக் கோளாறு, உறுப்புகள் செயலிழப்பு போன்றவை ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 2.3% பேர் மட்டுமே உயிரிழப்புக்கு ஆளாவதாகவும், அவ்வாய்வறிக்கை கூறுகிறது. உயிரிழப்புகள்கூட வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், அடிப்படை சுகாதாரத்தைப் பேணத் தவறியவர்கள் போன்றோருக்கே ஏற்படுகிறது.

நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகள் வழியே கொரோனா வைரஸ் பரவும் என்பது அடுத்த வதந்தி. ஆனால், இது உண்மையில்லை. சீனாவில் COVID-19ஆல் பாதிக்கப்பட்ட ஒரு நாயின் உரிமையாளர் வழியாக அவர் வளர்க்கும் நாய்க்குக் குறைந்த அளவிலான தொற்று ஏற்பட்டபோது, பரிசோதனையின் முடிவில் அந்த செல்ல பிராணிக்கு எவ்வித நோயும், பாதிப்பும் இல்லை என ஆய்வக முடிவு இருந்ததாகவும், எனவே செல்லப் பிராணிகள் மூலம் மனிதர்களுக்கு COVID-19 தொற்று ஏற்பட வாய்ப்பில்லையென்றும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் 2003இல் ஏற்பட்ட SARS-CoV வைரஸ் தொற்றால் நாய்களும், பூனைகளும் எவ்வித நோய்த் தொற்றுக்கும் ஆளாகவில்லையென்றும், அந்த பிராணிகள் வழியே மனிதர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூறுகிறது.

கொரோனா வைரஸால் குழந்தைகளுக்கு பாதிப்பில்லை என்பதற்கு இதுவரை நிரூபிக்கப்பட்ட தரவுகள் மருத்துவர்களிடையே இல்லை. இருப்பினும் பெரியவர்களோடு ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவானதே. சீனாவின் ஹுபே மாநிலத்திலிருந்து வந்த ஒரு ஆய்வு முடிவின்படி COVID-19 பாதிப்புக்குள்ளான 44000 நபர்களில், 19 வயதிற்குட்பட்ட பிரிவினரில் 2.2%பேர் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளதாக முடிவு கூறுகிறது. இவ்வகையான கருத்தையே நேச்சர் நியூஸ் இதழும் தெரிவித்துள்ளது.

COVID-19 நோய்த் தொற்றுக்கு வைட்டமின் சி மாத்திரைகளை உட்கொள்வதால் தடுக்கலாம் என்ற தவறான கருத்து பரவி வருகிறது. ஆனால், இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. வைட்டமின் சி என்பது நமது உடலுக்கான நோய் எதிர்ப்பு சக்தி என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இது உடல் ஹார்மோன்களை ஒருங்கிணைக்கவும், நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராடி நம்மை தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் ஒரே நேரத்தில் வைட்டமின் சி உப பொருட்களை எடுத்துக்கொண்டால் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்பது அறியாமையாகும். மாறாக நமது ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க விரும்பினால் வைட்டமின் சி அன்றாட உணவில் சீராக எடுத்துக் கொள்வதுதான் சிறந்த வழிமுறையாகும். எனவே புதிய கொரோனா வைரஸுக்கான சிகிச்சைகள் என விளம்பரப்படுத்தப்படும் தயாரிப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதே போன்று கடித உறைகள், பார்சல்கள் கொடுப்பது அல்லது பெற்றுக் கொள்வதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் என்பதற்கும் எவ்வித ஆதாரமோ, ஆய்வு முடிவுகளோ இல்லை. காரணம் ஒரு வைரஸ் உயிரோடு இருக்க குறிப்பிட்ட வெப்பநிலை, ஈரப்பதம், புற ஊதாக் கதிர்கள் வெளிப்பாடு போன்ற அம்சங்கள் முக்கிய பங்கு வகிப்பதால், தொற்றுக்கான சாத்தியங்கள் இல்லை என்பதை நாம் நம்பலாம்.

மேலும் பள்ளிகளை மூடுவதாலோ, அனைத்து மக்களையும் தனிமைப்படுத்துவதாலோ இந்த வைரஸ் தொற்றை முற்றிலும் ஒழித்துவிட முடியுமா? மக்களை மேலும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் செயலையே மத்திய, மாநில அரசுகள் செய்கின்றன என்பது சிலரின் கருத்தாக உள்ளது. ஆனால் உண்மை நிலவரம் என்னவெனில், பள்ளி, கல்லூரிகள் மூடப்படுதல் என்பது ஒரு பொதுவான வழிமுறையாகும். இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பை முற்றிலும் ஒழித்துவிடலாம் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. ஆனால் வைரஸ் பரவலின் வேகத்தை மட்டுப்படுத்தலாம் அல்லது நிறுத்தலாம். தனிமைப்படுத்துதல் என்பது ஒரு உபாயமாகவே பின்பற்றப்படுகிறது. கொரோனா வைரஸ் ஒரு வித்தியாசமான நோய்ப் பரவல் என்பதால், அவ்வைரஸின் இனப் பெருக்க கால அளவை கணக்கில் கொண்டும், அதன் தீவிரத் தன்மையைப் பொறுத்தும் 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. வளர்ந்த நாடுகள் குறிப்பாக அமெரிக்காவில் பன்றிக் காய்ச்சல் பரவலின்போது சுமார் 1,300 பள்ளிகள் மூடப்பட்டது. நமது நாட்டிலும் அபாயகரமான தொற்று நோய் பரவும் காலங்களில், இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளின், அபாயகரமான தொற்று நோய் பரவல் சட்டம், பொது சுகாதார சட்டங்கள் வழி வகை செய்கிறது.

இன்றைய சூழலில் நிச்சயமற்ற, நம்பகத்தன்மையற்ற வதந்திகளுக்கு இடம் கொடுக்காமல், நம் அளவில் சுகாதாரத்திற்கான தடுப்பு வழிகளைப் பின்பற்றினாலே இவ்வாபத்திலிருந்து தப்பிக்கலாம். பொதுவாக கொரோனா அறிகுறிகளை நம்மாலேயே நன்கு உணர முடியும். காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், அரிதாக தலைச் சுற்றல், குமட்டல், வாந்தி, மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று நம்மை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். தன்னளவில் முன்னெச்சரிக்கையுடனும், விழிப்புடனும் செயல்பட்டால் கொரோனாவை முற்றிலும் ஒழித்துவிடலாம்.

ஆதார சுட்டிகள்:

http://weekly.chinacdc.cn/en/article/id/e53946e2-c6c4-41e9-9a9b-fea8db1a8f51

https://www.scmp.com/news/hong-kong/health-

https://www.cdc.gov/coronavirus/2019-ncov/faq.html#animals

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5595096/

https://www.nature.com/articles/d41586-020-00154-w

https://www.statnews.com/2020/02/20/experts-say-confusion-over-coronavirus-case-coun

**கட்டுரையாளர் குறிப்பு**

கு.கதிரவன், செஞ்சியைச் சேர்ந்த எழுத்தாளர், நாட்டுப்புறக் கலைஞர். செஞ்சி திருக்குறள் பேரவை, தமிழியக்கம் போன்ற அமைப்புகளில் தீவிரமாக இயங்கி வருகிறார். கர்னாடக இசை அடிப்படையிலான தெருக் கூத்து நிகழ்த்துதலில் நான்கு தலைமுறைகளாக ஈடுபட்டு வரும் குழுவின் நிகழ்த்துக் கலைஞர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *