மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு பாஸ்!

அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு பாஸ்!

கொரோனா எதிரொலி காரணமாக, அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து, பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காகக்கூட வெளியில் செல்ல முடியவில்லை; போலீசார் கடுமையாக நடந்துகொள்கின்றனர் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்வோர் பாஸ் வாங்கிக் கொள்ளலாம் என்று மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் நேற்று (மார்ச் 28) வெளியிட்டுள்ள அறிவிப்பில், வணிகம், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்றும் பொதுப் பயன்பாடுகள், ஊடக சேவை, சுகாதார மருத்துவ சேவைகளில் ஈடுபடுபவர்களும் பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றும் இதைச் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்திலோ அல்லது அதன் நான்கு மண்டலங்களிலோ பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று சென்னை காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொதுமக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் இறப்பு, திருமணம் அல்லது மருத்துவ அவசர காரணங்களுக்காகப் பெருநகர சென்னைக்குள்ளேயோ அல்லது தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கிடையே அல்லது வெளி மாநிலங்களுக்கோ பயணிக்க விரும்பினால், அவர்கள் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை எண் 75300 01100ஐ தொடர்பு கொண்டோ / குறுஞ்செய்தி மூலமாகவோ / வாட்ஸ்அப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

மேற்கூறப்பட்ட காரணங்களுக்காக பாஸ் கோருபவர்கள் கோரிக்கை கடிதத்துடன் தேவையான அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவிபிரியா

ஞாயிறு, 29 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon