qமன்னிப்பு கேட்டால் மக்களின் அவலம் தீருமா?

public

தன்னுடைய “மன் கி பாத்” நிகழ்ச்சியில் மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கோரினார். தேசத்தின் நலன் கருதி, மக்கள் ஊரடங்கு உத்தரவை மதித்து வீட்டிற்கு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். பிரதமரின் உரையை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

தேசத்தின் நலனுக்காக நீங்கள் சில நாட்கள் கஷ்டங்களைப் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று மக்களிடம் சொல்வது பிரதமருக்கு ஒன்றும் புதிதல்ல. அதேபோல், எவ்வகைத் திட்டமிடலும் இல்லாமல் அதிரடியான முடிவுகளை எடுத்து கோடிக்கணக்கான மக்களை அல்லல்பட வைப்பதும் மோடி அரசுக்கு புதிதல்ல. இதை மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பே பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது நாம் ஒருமுறை அனுபவித்துவிட்டோம். அந்த நடவடிக்கை எதிர்பார்த்த எந்த பலனையும் தரவில்லை; பெரியளவில் வேலையிழப்பும், பொருளாதார வேகமிழப்பும்தான் மிஞ்சியது.

இப்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கால் புலம்பெயர்ந்து பணிபுரியும் கோடிக்கணக்கான உழைப்பாளி மக்கள் வேலையை இழந்து, தங்க இடமில்லாமல், தங்கள் ஊருக்கும் திரும்பமுடியாமல் நிர்கதியாய் நிற்கும் அவலத்தை ஊடகங்களில் காணமுடிகிறது. நூறு மைல்கள் நடந்தே போகவும் தயாராக இருக்கும் இந்த உழைப்பாளி மக்கள், உண்ண உணவில்லாமல் அல்லாடிக்கொண்டிருக்க, அவர்களிடம் மன்னிப்பு கேட்டால் நிலைமை சரியாகிவிடும் என்று நம்புகிறாரா பிரதமர்?

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதைத் தடுக்க போடப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவால் பொருளாதாரம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்படப்போகும் ஏழை எளிய மக்களுக்கும், விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கும் ரூ. 1.7 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார நிவாரணங்கள் கொண்ட தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முதற்கட்ட நடவடிக்கையாகக்கூட இது போதுமானதாக இல்லை என்பதும், அந்த நிவாரணங்கள் மக்களுக்கு போய் சேர்வதில் என்னென்ன சிக்கல்கள் உள்ளன என்பதையும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசு அவர்கள் சொன்னதுக்கு செவிசாய்த்ததாகத் தெரியவில்லை.

இந்திய உணவுக் கழகத்திடம் (Food Corporation of India) இருக்கும் 60 மில்லியன் டன் உணவு தானியங்களை உடனடியாகப் பயன்படுத்தி, புலம்பெயர்ந்து பணிபுரியும் தொழிலாளர்கள் போன்ற ரேஷன்கார்டு இல்லாதவர்களுக்கும் உணவு வழங்க வேண்டும் என்று இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பு பற்றி பல ஆய்வுகளை மேற்கொண்ட ஜான் திரேஸ் எழுதியுள்ளார். சிக்கனம் பார்க்கும் நேரம் இதுவல்ல என்பதை பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

“உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டின் முன்பும் லஷ்மணன் கோட்டை வரைய வேண்டும்” என்றும் பேசியுள்ளார் பிரதமர் மோடி. அதுசரி, வீட்டிற்குள் இராமாயணம் ஒளிபரப்பாகும் போது வீட்டுக்கு வெளியே லஷ்மணன் கோட்டைத்தானே வரைய வேண்டும்! வீடு இல்லாதவர்கள், வீட்டுக்கு திரும்பமுடியாதவர்கள் என்ன செய்வது என்பதை மட்டும் அவர் சொல்ல மறந்துவிட்டார்.

கோடிக்கணக்கில் செலவுசெய்து தேர்தல்களை நடத்தி நம்முடைய பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்புகிறோம். அவர்களுக்கு நாட்டின் நலன்மீது எவ்வளவு அக்கறை இருக்கிறதோ, அதே அளவிற்கு அக்கறை இந்நாட்டின் குடிகளுக்கும் இருக்கிறது. அரசின் நடவடிக்கைகள் பற்றிய விமர்சனங்கள் அந்த அக்கறையில்தான் வைக்கப்படுகின்றன. நல்ல நோக்கத்தோடு வழங்கப்படும் ஆலோசனைகள், வைக்கப்படும் விமர்சனங்களுக்கு அரசு செவிசாய்த்து தீர்க்கமான முடிவுகள் எடுத்தால் மட்டுமே இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீண்டு வரமுடியும்.

**-ரகுநாத்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *