மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

கொரோனா: 13.6 கோடி பேரின் வேலைக்கு ஆபத்து!

கொரோனா: 13.6 கோடி பேரின் வேலைக்கு ஆபத்து!

கொரோனா பாதிப்பால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு பல்வேறு தளங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கொரோனா தாக்கத்தால் பல லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்பு (மார்ச் 23) ஒரு பிற்பகல் வேளையில், ஆக்ரா சுற்றுப் பயண ஏற்பாட்டாளரும், டிராவல் பீரோவின் நிர்வாக இயக்குனருமான சுனில் குப்தா, ஃபதேஹாபாத் சாலையில் உள்ள தனது அலுவலகத்தில் தனியாக அமர்ந்திருந்தார். குப்தாவிடம் பணியாற்றிய 145 ஊழியர்களும் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். அவரது நிறுவனத்தின் 80 கார்களும், 36 சுற்றுலாப் பேருந்துகளும் தூசி படிந்து கிடக்கின்றன.

2019 ஆம் ஆண்டில் 1 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹாலை பார்வையிட்டனர். ஆனால், பிப்ரவரி மாதம் முதல் சுற்றுலாப் பயணிகள் வருகை பெரும் பின்னடைவை சந்தித்தது.

செப்டம்பர் வரை தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க சுற்றுலாப் பயணிகள் யாரும் வரமாட்டார்கள் என்று அமைதியாக அதிருப்தியை வெளிப்படுத்திய குப்தா, “நான் ஆறு மாதங்களுக்கு வருமானம் இல்லாமல் சம்பளம் அளிக்க வேண்டும்” என்று கூறுகிறார். டிராவல் பீரோ என்பது இந்தியாவின் மிகப்பெரிய டிராவல் ஏஜென்சிகளில் ஒன்று. அவர் தன்னால் ஊழியர்களுக்கு 6 மாத சம்பளத்தை கொடுக்க முடியும் என்று சொன்னாலும், பல நிறுவனங்கள் தங்களால் முடியாது எனக் கைவிரிக்கின்றன.

ஏற்கனவே ஆக்ராவில் உள்ள சுற்றுலா டிராவல் ஏஜென்சிகள் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துகொண்டிருந்தன. இந்த நிலையில் இது சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் ஓட்டுனர்களுக்கு ஒரு மோசமான செய்தியாகும். குறைந்தபட்ச ஊதியமாவது கிடைக்கும் என்ற அவர்களின் எண்ணம் இதன்மூலம் துண்டு துண்டாக சிதறியுள்ளது.

மாதச் சம்பளம் இல்லாத ஊழியர்களின் நிலை இதுபோன்றே இருக்கிறது. உதாரணமாக சுற்றுலாத் துறையில் குறுகிய கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிலர் பணிபுரிகிறார்கள். சிலர் அதுகூட இல்லாமலும் பணிபுரிகிறார்கள். சுற்றுலா வழிகாட்டிகள் மட்டுமல்லாமல், பார்க்கிங் ஒப்பந்ததாரர்களிடம் பணிபுரிபவர்கள், கடைகள், உணவகங்களில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்ட அனைவரின் நிலையும் இதுதான். கொரோனா வைரஸ் பாதிப்பு, இதுபோன்ற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இழக்கச் செய்துள்ளது.

வேலையிழக்கும் அபாயம்

இந்திய தொழில் துறை கூட்டமைப்பு கூறுகையில், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையை சார்ந்த நிறுவனங்கள் வீழ்ச்சி அடையத் தொடங்கி இருக்கிறது. வரும் அக்டோபர் மாதத்திற்குள் அது மீளவில்லை எனில், 2 கோடி பேர் வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடும் என எச்சரிக்கிறது. இந்த வார்த்தைகள் உற்பத்தி துறை மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட உற்பத்தி சாராத துறைகளுக்கும் பொருந்தும்.

ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட தேவைக் குறைவு மற்றும் விநியோகம் செய்வதில் உள்ள தடைகள் காரணமாக பொருளாதார வளர்ச்சி குறைவதால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது கடினமாவதோடு மட்டுமல்லாமல், தற்போது பணிபுரியும் நபர்களையும் அது பாதிக்கிறது. ஒட்டுமொத்தமாக, வேளாண் சாராத 13.6 கோடி வேலைவாய்ப்புகள் உடனடி ஆபத்தில் இருப்பதாக தேசிய மாதிரி கணக்கெடுப்பு மற்றும் பீரியாடிக் லேபர் போர்ஸ் சர்வே ஆகியவற்றின் தரவுகள் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் இல்லாமல் பணிபுரிபவர்கள், சாதாரண தொழிலாளர்கள், பதிவு செய்யப்படாத சிறிய வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், பதிவு செய்யப்பட்ட சிறு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், சுய தொழில் செய்பவர்கள் இந்த வேலையிழப்பினால் பாதிக்கப்படலாம். முதல்கட்ட பணிநீக்கம் என்பது தினசரி தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும். அடுத்து தொழில் நிறுவனங்கள், குறுகிய காலத்துடன் பணிநீக்க ஊழியர்களுக்கு பிங்க் நோட்டீஸ் (குறிப்பிட்ட காலத்திற்குள் வேலையைவிட்டுச் செல்வது) அனுப்பலாம். தற்போது, 50 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள், ஒரு வருடத்திற்கு குறைவான ஒப்பந்தங்களின்படி பணியாற்றி வருகிறார்கள்.

பொருளாதாரத்தில் இந்தியா கடினமான காலத்தில் இருக்கும் சூழலில் கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இது வேலைவாய்ப்பில் நெருக்கடியை அதிகரிக்கும். இளைஞர்கள் வரவு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். எனினும், அவ்வாறு உருவாக்க முடிவதில்லை.

பணியாளர் நிறுவனமான அடெக்கோ குரூப் ஆப் இந்தியா, கொரோனா வைரஸ் பாதிப்பால் சில தொழில் துறைகளின் வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்குகிறது. ஜவுளி, மூலதன பொருட்கள், சிமெண்ட், உணவுப் பொருட்கள், உலோகம், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட உற்பத்திப் பிரிவுகளில் சுமார் 90 லட்சம் வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடலாம் என்று கூறுகிறது.

விற்பனை வீழ்ச்சியின் காரணமாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கடந்த காலாண்டிலிருந்து ஆட்குறைப்பு செய்து வருகின்றன. கொரோனா வைரஸின் நிலை வேலைவாய்ப்பின்மையை இன்னும் அதிகப்படுத்தும். டீலர்களின் சூழல் அமைப்பு, முன்னணி நிறுவனங்களுடனான போட்டி, திறமையின்மை, ஆகியவற்றின் காரணமாக ஆட்டோமொபைல் துறை ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகளை இழக்கக்கூடும் என்று அடெக்கோ மதிப்பிட்டுள்ளது. விமானத் துறையில் 60,000 பேர் வேலையிழப்பை சந்திக்கக்கூடும்.

பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம், பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளவர்களை பாதிக்கும் என்று ஜஸ்ட் ஜாப் நெட்வர்க்கின் தலைவர் சபினா திவான் தெரிவிக்கிறார். “இந்த ஊரடங்கு நெருக்கடியின் தாக்கங்கள் மிகவும் மோசமானதாக இருக்கும். கல்வி, திறன்கள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, உட்கட்டமைப்பு ஆகிய அவசியமான முதலீடுகள் செய்ய வேண்டிய இடங்களில், நாம் குறைந்த அளவிலான நிதியைக் கொண்டிருப்போம். இது முன்னோக்கிச் செல்வதை தடுப்பதோடு, நம்மை பின்னுக்குள் தள்ளிவிடும்” என்று அவர் கூறுகிறார்.

பேராசிரியரும், மனிதவள மேம்பாட்டு பொருளாதார நிபுணருமான சந்தோஷ் மெஹ்ரோத்ரா, இந்தியா 49.5 கோடி தொழிலாளர்களைக் கொண்டுள்ளதாகவும், 2017-18 ஆம் ஆண்டில், சுமார் 3 கோடி பேர் வேலையில்லாமல் இருந்தனர் என்றும் கூறுகிறார். இது தற்போது 46.5 கோடி பேர் வேலை செய்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது. ஏற்கனவே பணிபுரிந்தவர்களில் யார் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்ற கேள்விக்கு, வேலைவாய்ப்பு என்பது பாதுகாப்பு இல்லாதது என்பதே பதிலாக இருக்கும். எந்த வகை சமூகப் பாதுகாப்பும் இல்லாதவர்கள் இந்த வகையில் வரலாம். அவர்களை முறைசாரா தொழிலாளர்கள் என்ற வகைமைக்குள் நாம் கொண்டு வரலாம்.

பஞ்சாப் மத்திய பல்கலைக் கழகத்தில் பொருளாதார ஆய்வுகள் துறையின் ஜஜாதி கே.பரிடாவுடன் இணைந்து மெஹ்ரோத்ரா எழுதிய ஒரு கட்டுரையில் (இந்தியாவின் வேலைவாய்ப்பு நெருக்கடி: உயரும் கல்வி நிலைகள் மற்றும் வேளாண்மை அல்லாத வேலைவாய்ப்புகளின் வீழ்ச்சி), அமைப்புசாரா துறைகளின் பங்கு மொத்தமாக 90.7 சதவிகிதம். அதில் 83.5% விவசாயம் சாரா துறைகள் என்று குறிப்பிடுகிறார்கள்.கட்டுரையில் உள்ள பெரும்பாலான மதிப்பீடுகள் என்எஸ்எஸ் மற்றும் பிஎல்எஃப்எஸ் தரவை அடிப்படையாகக் கொண்டவை.

இந்தியாவில் 2.6 கோடி பேர் பண்ணை அல்லாத துறைகளில் பணியாற்றி வருகின்றனர் (20.5 கோடி பேர் வேளாண் சார்ந்த துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.)ஆக, சேவைகள், உற்பத்தி மற்றும் உற்பத்தி அல்லாத துறைகளில் முறைசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 21.7 கோடி ஆகும் என்று கட்டுரை சொல்கிறது.

உற்பத்தித் துறைகளில் 2.8 கோடி தொழிலாளர்கள் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் இல்லாமல் பணிபுரிகிறார்கள். 4.9 கோடி பேர் உற்பத்தி சாராத துறைகளில் பணிபுரிகிறார்கள். மற்ற துறைகளில் 5.9 கோடி பேர் வரை 2017-18ஆம் ஆண்டிலிருந்து பணிபுரிகிறார்கள். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் சுமார் 13.6 கோடி தொழிலாளர்கள் அல்லது விவசாயம் சாராதத் துறைகளில் பணியாற்றும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்தம் இல்லாமல் பணியாற்றுகிறார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பும் இவர்களின் வேலைவாய்ப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அவர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வேலையிலிருந்து நீக்கப்படலாம். பெரும்பாலான தினக்கூலி பணியாளர்கள், சாதாரண தொழிலாளர்கள் இந்த வகைக்குள் வருகிறார்கள். இவர்களின் வலியை தொலைக்காட்சி, ட்விட்டர், பேஸ்புக் போன்ற ஊடகங்களில் நாம் பார்த்திருப்போம். நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்கு நடந்தே செல்லும் காட்சிகளை நாம் பார்த்திருப்போம். பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் கட்டிட வேலை செய்கிறவர்கள்தான்.

(தொடரும்)

த.எழிலரசன்

செவ்வாய், 31 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon