மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

தப்லீக் தலைமையகம் காலி செய்யப்பட்டது! 

தப்லீக் தலைமையகம் காலி செய்யப்பட்டது! 

டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் பங்குபெற்று இந்தியாவின் பல மாநிலங்களில் திரும்பியோரில் கணிசமானோருக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டு வரும் நிலையில், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இருக்கும் தப்லீக் தலைமையகமான மர்கஸ்ஸிலிருந்து அனைவரையும் வெளியேற்றியிருக்கிறது டெல்லி போலீஸ்.

மார்ச் நடுப்பகுதியில் நடைபெற்ற தப்லீக் மாநாட்டில் இருந்து தமிழகத்துக்குத் திரும்பிய 110 பேர் நேற்று கொரோனா பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டனர். கேரளாவிலிருந்து இம்மாநாட்டில் பங்கேற்ற சுமார் 310 பிரதிநிதிகளில், 60 பேர் மட்டுமே மாநிலத்துக்குத் திரும்பியுள்ளனர், மேலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களைக் கண்டறிய முயற்சிகள் நடந்து வருகின்றன. ஹரியானாவிலிருந்து குறைந்தது 500 பங்கேற்பாளர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

இது தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா நேற்று அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் மாநிலங்களுக்குச் சென்றவர்கள் போக தப்லீக் ஜமாஅத்தின் தலைமையகமான மர்கஸ்ஸில் இருப்பவர்களை அங்கிருந்து வெளியேற்றி மருத்துவமனைகளுக்கு அனுப்ப கடந்த மூன்று நாட்களாக டெல்லி சிறப்பு போலீஸார் முயன்று வந்தனர். இந்த நடவடிக்கை இன்று (ஏப்ரல் 2) அதிகாலை வரை தொடர்ந்து நடைபெற்றதன் விளைவாக நிசாமுதீனில் உள்ள தப்லீக் சர்வதேச தலைமையகமாக விளங்கும் மர்கஸ்ஸிலிருந்து மொத்தம் 2,346 பேர் வெளியேற்றப்பட்டனர், அவர்களில் 536 பேர் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர், 1,810 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளுக்கு அனுப்பப்பட்டதாக டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

"இந்த ஆபரேஷன் மூன்றரை நாட்கள் நீடித்தது, டெல்லி அரசு வெளியேற்றப்பட்டவர்களின் பட்டியலை, அவர்களின் தொலைபேசி எண்களுடன் தயார் செய்து, அதை போலீஸார் கவனித்து வருகின்றனர். சைபர் டீம் போலீஸ் மூலம் செல் எண்களை ஆராய்ந்து, அவர்கள் யார் யாரை சந்தித்தார்கள், மீதமுள்ளவர்கள் எங்கே என்று ஆராயும். அவர்களைச் சந்தித்த மக்கள் எங்கே, என்றும் தேடிக் கொண்டிருக்கிறோம்” என்று டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா கூறினார்.

தப்லீக் ஜமாஅத்தின் தலைவர் மௌலானா சாத் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருப்பதாக டெல்லி போலீஸார் தெரிவித்தனர்.

-வேந்தன்

வியாழன், 2 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon