மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

கிருமி ஜிகாத் நடத்துகிறதா தப்லீக் ஜமாத்? - இதோ உண்மை!

கிருமி ஜிகாத் நடத்துகிறதா தப்லீக் ஜமாத்? - இதோ உண்மை!

நாடு முழுதும் இன்று கொரோனாவை விட தப்லீக் ஜமாத் என்ற பெயரையே அதிகமாக சமூக தளங்களில் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மார்ச் 8 ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையிலும், 12 முதல் 15 ஆம் தேதி வரையிலும் டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத்தின் மாநாடு நடந்தது. இதில் தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, காஷ்மீர் என்று இந்திய மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாமல்... வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

கொரோனா நோய்த் தொற்று உலகத்தில் உச்சமாக பரவிக் கொண்டிருந்த நிலையில்தான் வெளிநாடுகளில் இருந்து இவர்கள் டெல்லி வந்துள்ளனர். டெல்லி வந்து மாநாடுகளில் பங்கேற்றது மட்டுமல்லாமல் அதோடு இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் சென்று மசூதிகளில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தான் கொரோனாவின் திடீர் தூதுவர்களாக மாறி இந்தியாவையே அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.

இந்த செய்திகளுக்கு எதிர்வினையாற்றும் சில முஸ்லிம் அமைப்பினர் “முஸ்லிம்கள்தான் கொரோனாவை பரப்புகிறார்கள் என்ற திட்டமிட்ட பரப்புரை செய்யப்படுகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. குறிப்பிட்ட தேதிகளில் மாநாடு நடத்த சில மாதங்களுக்கு முன்பே அரசிடம் அனுமதி பெறப்பட்டு, அதன் பேரிலேயே இந்திய அரசு மூலம் விசா வழங்கப்பட்டு வெளிநாட்டில் இருந்து வந்து கலந்துகொண்டார்கள். அரசு ஆரம்பத்திலேயே முன்னெச்சரிக்கையாக தடுக்காமல் இப்போது முஸ்லிம்கள் தலையில் பழியைத் தூக்கிப் போடுகிறது” என்கிறார்கள். இன்னும் சில வலதுசாரிகளோ இப்போது கிருமி ஜிகாத் நடக்கிறது என்று பரப்புரையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்த பரபரப்புகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன? தப்லீக் ஜமாத் என்றால் என்ன? இவர்கள் செயல்படும் விதம் எப்படி? இவர்களைப் பற்றி வெகுஜன மீடியாக்கள் சொல்வதில் எந்த அளவு உண்மை இருக்கிறது?

இந்தக் கேள்விகளோடு தமிழகத்தில் இருக்கும் இஸ்லாமிய அமைப்பினர் பலரிடமும் விரிவாகப் பேசினோம்.

“தப்லீக் ஜமாத் என்பது சுதந்திரத்துக்கு முன்பே 1926 ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. இஸ்லாமியர்களில் 90 சதவிகிதம் பேர் மதப் பற்றும் இறை அச்சமும் கொண்டிருப்பவர்கள். ஆனால் அவர்களில் மிகக் குறைந்த அளவினர் மதப் பற்று இல்லாமலும், இறை அச்சம் கொள்ளாமலும் மத அனுஷ்டானங்களை கடைபிடிக்காமலும் இருக்கிறார்கள். அவர்களை திருத்தி மதப் பற்றாளர்களாக அல்லாவின் தொண்டர்களாக ஆக்குவதே இந்த அமைப்பின் வேலை. உலகில் பல முஸ்லிம் நாடுகள் இருந்தாலும் இந்த தப்லீக் ஜமாத்தின் தலைமையிடம் டெல்லியில் இருக்கும் நிஜாமுதீனில் அமைந்துள்ளது.

நேரு பிரதமராக இருந்த போது உள்துறை அமைச்சராக இருந்த வல்லபபாய் பட்டேல் ரயில்களில் பயணம் மேற்கொள்ளும்போது... இளம் வயதுடைய ஆனால் இஸ்லாத்தில் பழுத்த வார்த்தைகளைப் பேசும் சிலரைப் பார்த்திருக்கிறார். யார் இவர்கள் என்று அவர் விசாரித்தபோது தப்லீக் ஜமாத் என்று கேள்விப்பட்டிருக்கிறார். இந்தியா முழுதும் இவர்கள் இருக்கிறார்கள் என்றும் இந்தியாவைத் தாண்டி உலகம் முழுதிலும் உள்ள முஸ்லிம்களில் பலர் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்றும் அறிந்திருக்கிறார். தப்லீக் ஜமாத் பற்றி முழுமையாக விசாரித்து அறிக்கை வழங்குமாறு மத்திய உளவுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அப்போது உளவுத்துறை கொடுத்த அறிக்கையில், ‘இவர்கள் எந்த வித அரசியல் நாட்டமும் இல்லாதவர்கள். புற உலகத்தில் நடக்கும் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாதவர்கள். தரைக்குக் கீழேயும், வானத்துக்கு மேலேயும் நடப்பது பற்றித்தான் விவாதிப்பார்களே தவிர, தங்களைச் சுற்றி நடப்பதைப் பற்றிய எந்த பிரக்ஞையும் இவர்களுக்குக் கிடையாது. எல்லாவற்றையும் அல்லா பார்த்துக் கொள்வார் என்பதே இவர்களின் உறுதியான நம்பிக்கை. எனவே இவர்களால் சமூகத்துக்கோ, நாட்டுக்கோ எவ்வித தீமையும் கிடையாது” என்று கூறியிருக்கிறது. இந்த அறிக்கையின் பேரில் பல ஆண்டுகளாக தப்லீக் ஜமாத் நடத்தும் மாநாடுகளுக்கும், கூட்டங்களுக்கும் அரசு எவ்விதத் தடையும் விதிப்பதில்லை. இதுவே கடந்த மார்ச் மாத மாநாட்டுக்கும் நடந்திருக்கிறது. ஆனால் மாநாடு நடக்கும் நேரத்தில் கொரோனா தொற்றுப் பரவல் இருப்பதை உணர்ந்து தடை விதித்திருந்தால் தப்லீக் ஜமாத்தினர் எவ்வித எதிர்ப்பும் தெரிவித்திருக்க மாட்டார்கள். வேறு தேதிகளில் தாராளமாக நடத்தியிருப்பார்கள். அவர்கள் அல்லாவை மட்டுமே அறிந்தவர்கள்” என்கிறார்கள்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பினர் சிலர், “தப்லீக் ஜமாத்தினர் ஊருக்கு சிலர்தான் இருப்பார்கள். ஆனால் உறுதியாக இருப்பார்கள். நகராட்சி, மாநகராட்சிகளில் வழங்கப்படும் மெட்ரோ வாட்டரை அவர்கள் பருகமாட்டார்கள். ஏன் தெரியுமா? இந்த குடிநீர் திட்டங்கள் உலக வங்கியின் கடனில்தான் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. உலக வங்கி நம் அரசுகளுக்குக் கொடுத்த கடனுக்கு வட்டி வசூலிக்கும், வட்டிக்கு கொடுத்த பணத்தால் வந்த இந்த தண்ணீரை குடிக்க அல்லா நம்மை அனுமதிக்கவில்லை. எனவே மெட்ரோ வாட்டர் குடிக்கக் கூடாது என்று சொல்லி கிணறு அல்லது போர் தண்ணீர்தான் பருகுவார்கள்.

அடிப்படையில் தமுமுக, மமக, முஸ்லிம் லீக் தவ்ஹித் ஜமாத் உள்ளிட்ட எந்த அமைப்பினரோடும் தப்லிக் ஜமாத்தினருக்கு உடன்பாடு கிடையாது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பின் நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் தப்லீக் ஜமாத்தினர் மிகப்பெரிய கூட்டத்தை நடத்தினார்கள். லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அதில் கலந்துகொண்டார்கள். அந்தக் கூட்டத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றுமாறு சமுதாய அமைப்பினர் சிலர் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் தப்லீக் ஜமாத்தினரோ, ‘அந்த மசூதி இடிக்கப்பட்டால் அதை அல்லா பார்த்துக் கொள்வார். இருக்கும் மசூதிகளில் நாம் தொழுகை நடத்துவோம்’ என்று பதிலளித்தார்கள். இப்படிப்பட்டவர்களைதான் கிருமி ஜிகாத் நடத்துகிறார்கள் என்றும், வேண்டுமென்றே நோயைப் பரப்புகிறார்கள் என்றும் அடிப்படை ஆதாரம் இல்லாமல் புரிந்துணர்வு இல்லாமல் சிலர் சமூக தளங்களில் குதறுகிறார்கள்.

கொரோனாவை கூட அல்லா பார்த்துக் கொள்வார் என்று கண்டுகொள்ளாமல் விட்ட அவர்களின் அறியாமை நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியது, விமர்சிக்கப்பட வேண்டியதுதான். அதற்காக உலகில் வேறு எந்த மதத்தையும் நிந்தனை செய்யாமல் தானுண்டு அல்லா உண்டு என்று இருப்பவர்கள் மீது வீண் பழி சுமத்திடல் நியாயம் ஆகுமா? டெல்லியில் இருக்கும் தப்லீக் ஜமாத்தின் தலைமையகத்தை அகற்ற ஒரு பெரும் முயற்சி நடக்கிறது இதை தப்லீக் ஜமாத் எப்படி எதிர்கொள்ளப் போகிறதோ?” என்று முடித்தனர்.

தமிழகத்தில் நூற்றுக்கணக்கானோர் டெல்லி மாநாட்டுக்கு சென்று கலந்துகொண்டுவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். அவர்களில் பலர் அல்லாவின் மேல் பாரத்தைப் போட்டு மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டார்கள் என்று ஒரு தகவல் உலவுகிறது. அரசின் வேண்டுகோளுக்கு இணங்க கொஞ்சம் கொஞ்சமாய் சிலர் தாங்களாகவே முன் வந்து சுகாதாரத்துறையினரை இப்போதுதான் அணுகிவருகிறார்கள். உளவுத்துறையினரும் முழு வீச்சில் களமிறங்கி கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட தப்லீக் ஜமாத்தினரை மிக நுட்பமாக கண்காணித்து அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம்... முஸ்லிம் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் தங்கள் நிர்வாகிகளுக்கு, “உங்கள் பகுதியில் உங்கள் மசூதியில் இருக்கும் தப்லீக் ஜமாத் தினரை அரசுக்கு அடையாளப்படுத்துங்கள். அவர்களை அடையாளப்படுத்துவதன் மூலம் அவர்களையும், அவர்களின் குடும்பங்களையும் , மக்களையும் காப்பாற்றுவோம்’ என்று உத்தரவிட்டுள்ளனர். இதன்படியே பலர் இப்போது அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள்.

-வேந்தன்

வியாழன், 2 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon