மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

கொரோனா நிவாரண நிதி: அரசு ஊழியர்கள் ஊதியத்தில் ரூ.1500 கோடி பிடித்தமா?

கொரோனா நிவாரண நிதி: அரசு ஊழியர்கள் ஊதியத்தில் ரூ.1500 கோடி பிடித்தமா?

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாகத் தமிழக அரசு நிதியுதவி பெற்று வருகிறது. இந்நிலையில், கொரோனா நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள் ஊதியத்தில் எவ்வளவு பணம் பிடித்தம் செய்யலாம் என்று கடந்த ஐந்து நாட்களாக முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகச் செய்திகள் வெளிவருகின்றன.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. நாட்டு மக்களைக் கொரோனாவிலிருந்து காப்பாற்ற மக்கள் பிரதிநிதிகள், முதலாளிகள், நடிகர்கள் என அனைவரும் முன்வந்து தங்களால் ஆன நிதியை வழங்கி வருகின்றனர்.

அதன்படி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.கள் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.கள், எம்.பி.க்கள் ஆகியோர் ஒரு மாதம் ஊதியத்தையும், தொகுதி நிதியிலிருந்து ரூ.25 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை நிதி வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட சுமார் 12 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள், அரசு ஊழியர்கள் அனைவருடைய ஊதியத்திலிருந்து ஒரு நாள் ஊதியத்தை நிவாரண நிதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்தால் சுமார் ரூ.150 கோடி கிடைக்கும். ஆனால் இதுகுறித்து அரசிடமிருந்து இதுவரை எந்தவிதமான பதிலும் வரவில்லை என்கிறார்கள் ஜாக்டோ ஜியோ வட்டாரத்தில்.

அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் சம்பந்தமாகத் தலைமைச் செயலகத்தில் விசாரித்தோம். அப்போது, “அரசு நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளது. இன்னொருபக்கம் மக்களை கொரோனா வைரஸ் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும். அதனால் குறைந்தது அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஊதியத்திலிருந்து ரூ.1000 கோடி முதல் ரூ,1500 கோடி வரையில் பிடித்தம் செய்வதற்கு மூத்த அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளரும், நிதி செயலாளரும் ஆலோசனைகள் செய்து வருவதாகத் தலைமைச் செயலக வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

அப்படியென்றால் குறைந்தது பத்து நாட்கள் ஊதியத்தைப் பிடிப்பார்கள் என தெரிய வருகிறது. அதனால்தான் மாத கடைசியில் வழக்கமாகச் சம்பளம் போடக்கூடிய அரசு, மாதம் பிறந்து இன்று 2 நாள் ஆகியும் சம்பளம் போடவில்லை என்கிறார்கள் அரசு ஊழியர்கள்.

ஊழியர்களின் ஊதியத்தை அவர்களின் விருப்பம் இல்லாமல் பிடிக்க முடியாது என்பதால் அரசு முடிவு செய்துவிட்டு முக்கிய சங்கத்தின் நிர்வாகிகளிடம் ஆலோசனைகள் செய்து, அவர்கள் விருப்பம் தெரிவிப்பதுபோல் ஒரு அறிக்கையை விடச்சொல்லி, கொரோனா நிவாரணம் தொகையைப் பிடித்துக்கொண்டு மீதியை அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் போடுவார்கள் என்கிறார் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர்.

- எம்.பி.காசி

வியாழன், 2 ஏப் 2020

அடுத்ததுchevronRight icon