கொரோனா: அமெரிக்காவிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

public

நியூயார்க்கில் இருந்து சுசித்ரா விஜயன் பேட்டி!

அமெரிக்காவின் நியூயார்க்கில் வசித்து வரும் வழக்கறிஞர் சுசித்ரா விஜயன், ஐக்கிய நாடுகள் போர்க்குற்ற தீர்ப்பாயத்தில் பணிபுரிந்தவர். ஓர் எழுத்தாளராகவும் போர், அரசியல் இலக்கியம் வெளியுறவு கொள்கைகள் தொடர்பாக தொடர்ந்து எழுதி வருபவர். புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்கும் சுசித்ரா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லைகளுக்கு இடையே இருந்த பிரச்சனைகளை ஆராய்ந்தும் அவற்றை ஆவணப்படுத்தியும் வந்தவர். புகைப்பட கலைஞராகவும் தன்னை நிரூபித்துள்ள சுசித்ராவின் புகைப்படங்கள் மற்றும் கட்டுரைகள் Boston review, Washington, Foreign policy, NPR, Huffington Post, NBC, The guardian உள்ளிட்ட பல முன்னணி செய்தி நிறுவனங்களில் பிரசுரமாகியுள்ளது. அவர் தற்போது அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரசின் தாக்கம் குறித்து மின்னம்பலத்துடன் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

** அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஏன் நியூயார்க் இவ்வளவு அதிகமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது?**

வைரஸ் தாக்குதலின் பாதிப்பு அமெரிக்காவில் தற்போது மோசமான நிலையில் உள்ளது. ஒவ்வொரு நாளும் வைரசால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது இருக்கும் நிலையில் நாட்கள் செல்ல செல்ல இந்த பாதிப்பு இன்னும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். அமெரிக்கா வெள்ளை மாளிகையில் இருந்து வரும் தகவல்களின்படி இன்னும் மூன்று வாரங்களில் இதன் பாதிப்பு உச்ச நிலையை அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது அதனால் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவதற்குள் இதுபோன்ற மோசமான செய்திகளை கடந்து தான் ஆக வேண்டும்.

இந்த கொரோனா வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியாக நியூயார்க் மாறி உள்ளது. இதற்கான காரணத்தை தெளிவாக சொல்வதற்கு நான் தொற்றுநோய் நிபுணர் கிடையாது, ஆனால் மேலோட்டமான காரணங்கள் எனப் பார்க்கும்போது, மக்களுக்கு தெளிவான தகவல்கள் போய்ச் சேரவில்லை. இந்தியாவும் அமெரிக்காவும் நோயின் ஆரம்பகட்டத்தில் நோயைப் பற்றிய முழுமையான தகவல்களை மக்களுக்கு போய் சேர்க்கத் தவறிவிட்டது. மார்ச் முதல் வாரம் வரை மக்களுக்கு சரியான தகவல்கள் கொடுக்காமல் விட்டதுதான், இந்நோய் மக்களிடையே அதிகம் பரவுவதற்கு காரணமாகி இருக்கிறது. நியூயார்க் நகரம் என்பது மும்பை, டெல்லி போன்ற மக்கள் அடர்த்தி அதிகம் இருக்கிற இடம். பல்வேறு நாடுகளிலிருந்து மக்கள் விமானங்கள் மூலமாக வந்து சேரும் இடம் நியூயார்க். எனவே இங்கு நோய் பரவுவது ரொம்ப ஒரு எளிதான விஷயம் ஆகிடுச்சு. நான் ஒரு தொற்று நோய் நிபுணராக இல்லாவிட்டாலும் இது போன்ற அடிப்படை விஷயங்கள் மூலமாதான் கொரோனா வைரஸ் அதிகமாக பாதித்திருக்கும் என்று கருதுகிறேன்

**இப்போ அமெரிக்கா இருக்கிற நிலையில் இருந்து இந்தியா கத்துக்க வேண்டிய பாடங்கள் என்னென்ன?**

அமெரிக்காவின் இந்த நிலைமையிலிருந்து இந்தியா கத்துக்க வேண்டிய முக்கியமான விஷயம், யாருக்கு ஓட்டு போடணும் என்பதுதான். அது ரொம்ப முக்கியம். ஒரு நல்ல தலைவன் மூலமாக ஒரு மிகப்பெரிய பிரச்சினையை ஈசியா சமாளிக்க முடியும். இல்லைன்னா அதை இன்னும் பெருசா மாற்றவும் முடியும். மார்ச் முதல் வாரம் வரை வைரஸ் தாக்குதல் பிரச்சனையை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு சின்ன பிரச்சினையாக கூட மக்களிடையே பேசல. இது மிகப்பெரிய விவகாரம் ஆயிடுச்சின்னா வர தேர்தலில் வெற்றிபெற முடியாமல் போய்விடுமோ என்கிற எண்ணத்தில் இந்த விஷயத்தை வெளியே விடாமல் தடுக்கப் பார்த்ததாக சமீபத்திய தகவல்கள் வெளியாகி இருக்கு அதுதான் மிகப்பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. அதனால மக்களுக்கு சரியான தகவல்களை கொண்டு போய் சேர்கிறதுல தான் ரொம்ப அதிகமாக கவனம் செலுத்தனும்.

இந்திய பிரதமர் மோடியும் இந்த விஷயத்தில் தப்பு பண்ணிட்டாரு. இதுவரை சில முறை தான் கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி மக்கள்கிட்ட பேசி இருக்காரு. அதிலும் சரியான இன்ஃபர்மேஷன் அவர் மக்கள்கிட்ட போய் சேர்க்கல. நாலு மணி நேரம் வீட்டில் இருந்த பிறகு, வெளியே போய் கை தட்டுங்கள் என்று சொல்றது எந்த விதத்திலயும் நோயை கட்டுப்படுத்த உதவாதுன்னு நாம தெரிஞ்சுக்கணும், இரண்டாவது விஷயம், இந்தியால பலபேர் கிட்ட இன்டர்நெட்டும், மற்ற செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்ளும் வசதிகளோ இல்லை, பலர் செய்திகளை பார்க்கிறது இல்லை. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் வேறு மாநிலங்களிலிருந்து பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு, அவங்க ஊருக்கு எப்படி போய் சேரனும், தங்களை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்னும் தகவல்கள் முழுமையாக போய் சேராமல் 200, 250 கிலோமீட்டர்கள் நடந்தே தங்கள் வீட்டுக்கு பயணிக்கிறது குறித்த செய்திகளை பார்த்தோம். இதுபோன்ற அடித்தட்டு மக்களுக்கு முழுமையான தகவல்களை கொண்டு போய் சேர்க்க தவறிட்டோம். அடுத்த முக்கியமான விஷயம் சோதனைகள் செய்வது. இந்தியாவில் போதுமான அளவு மக்களை நாம இன்னும் வைரஸ் பாதிப்பு சோதனைக்கு உள்ளாக்கவில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேரையும் சோதனைக்கு உள்ளாக்கி, பாதிப்பு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டியது மிக முக்கியமான விஷயம்.

அடுத்து ட்ரம்ப் அதிபரா தேர்வான பிறகு அமெரிக்காவில் ’சென்டர் ஃபார் டிசீஸ் கன்ட்ரோல்’ என்ற அமைப்பை அகற்றிவிட்டார். இது போன்ற அமைப்புகள் தான், இது மாதிரியான இக்கட்டான காலகட்டத்தில் மக்களுக்கு உதவி செய்திருக்க வேண்டும். அதே போல இந்தியாவிலும் பல அமைப்புகள் மோடி பிரதமர் ஆன பிறகு அகற்றப்பட்டது. இதை முதலில் சரிசெய்ய வேண்டும்.

அடுத்து மக்களை காப்பாற்ற வேண்டிய பணியில் இருக்குறவங்க எதிர்கொள்ளும் கஷ்டங்கள். அமெரிக்காவில் தற்போது தகுந்த ஆவணங்கள் இன்றி நாட்டில் இருக்குறவங்கள தொடர்ந்து கைது செய்யும் சம்பவம் நடந்து கொண்டிருக்கு. அதே போல இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மருந்து வாங்க போறவங்க, ஏன், உங்களுக்கு மருத்துவம் பார்க்க போகும் மருத்துவர்களை கூட போலீசார் தாக்கிய சம்பவம் தொடர்ந்து நடந்து வருது. இது எல்லாம் தவிர்க்கப்பட வேண்டிய செயல்கள். இதுபோன்ற செய்திகளிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியா போன்ற பெரிய நாடுகளில் நாம் இன்னும் செய்ய வேண்டியது நிறைய விஷயங்கள் இருக்கு.

**அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கொரோனா வைரஸ் ”சைனீஸ் வைரஸ்” அப்படின்னு சொல்லிட்டு வர்றார். இதை அமெரிக்க மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?**

அமெரிக்க அதிபர் டிரம்ப் இனப்பாகுபாடு குறிக்கும் வகையில் பேசுவது இது முதல் தடவை இல்லை. இதுபோல பேசும் ஒரு வரலாறே அவருக்கு இருக்கு . அதிபர் தேர்தலின் போது கூட மெக்சிகோவில் இருந்து வந்தவங்கள கற்பழிப்பு குற்றவாளிகள்ன்னும் திருடர்கள் எனவும் சொன்னத நாம யாரும் மறந்திருக்க மாட்டோம். இதுபோல பல இன வேறுபாட்டை அதிகரிக்கும் விஷயங்களை சொல்லி இருக்கிறதால தற்போது சொல்லி இருக்கிறது பலவற்றோடு இதுவும் ஒன்று அப்படின்னு தான் இருக்கு.

ஆனால் இதுபோல இந்தியாவிலும் நடக்குது. உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட பெங்காலி முஸ்லிம்களை புலம்பெயர்ந்த கரப்பான் பூச்சிகள் அப்படின்னு சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோல இன வேறுபாட்டை அதிகரிக்க வைக்கும் பேச்சுகள் இந்தியா மற்றும் அமெரிக்கா மட்டுமல்ல பல நாடுகளில் இருக்கு. தற்போது ட்ரம்ப் மட்டும் சைனீஸ் வைரஸ் என்று சொல்லல. இந்தியாவோட சமூக வலைதள பக்கங்களில் பெரும்பாலான பாஜக ஆதரவாளர்கள் அதை சைனீஸ் வைரஸ் அப்படின்னு சொல்லி பல கருத்துகளை பதிவிட்டு வருவதையும் பார்த்துக்கொண்டு வருகிறோம். சீனாவின் கொள்கைகளை நாம விமர்சனம் பண்ணக் கூடாதுன்னு சொல்ல வரல. கண்டிப்பா நாம அவங்க இந்த விஷயத்தை எப்படி எடுத்துட்டு போனாங்கனு விமர்சனம் பண்ணியே ஆகணும். ஆனால் அதற்காக வைரஸை சைனீஸ் வைரஸ் அப்படின்னு சொல்றது முற்றிலும் மாறுபட்டது, மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

குறிப்பா இந்தியாவில் காலரா பாதிப்புகள் ஏற்பட்ட போது அது இந்திய நோய் என்றோ H1N1 பாதிப்பு ஏற்பட்டபோது அதை அமெரிக்க நோய் எனவோ சொல்லவில்லை. இந்தியாவில் தற்போதுவடகிழக்கு மாநிலங்களிலிருந்து வந்து கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை இதுபோன்ற இனப்பாகுபாடு காரணமா வன்முறைக்கு ஆளாக்கும் சம்பவம் நடந்து கொண்டு இருக்கிறது. தற்போது பெங்களூரில் கூட ஒரு சம்பவம் நடந்ததாக கேள்விப்பட்டேன், ஒரு ஷாப்பிங் மாலுக்கு உள்ளே வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களை விட மறுத்ததாக செய்தி. இதுபோல இந்தியாவிலும் அதிகமான இடங்களில் இன வேறுபாடு காரணமாக தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கு.

**சைனீஸ் வைரஸ் என்று தொடர்ந்து கூறி வரதால அங்க இருக்கிற சீன மக்கள் இனப்பாகுபாடுக்கு ஆளாவதாக கேள்விப்படறோம். இது எந்த அளவுக்கு உண்மை?**

ஆமா… சைனீஸ் வைரஸ் என்று ட்ரம்ப் மறுபடியும் அழைத்துக்கொண்டே இருப்பதனால், அமெரிக்காவில் பல பகுதிகளில் ஆசிய, அமெரிக்க மக்கள் மீது பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்து வந்துகொண்டு தான் இருக்கிறது. அது உண்மைதான்.

**தற்போதைக்கு அமெரிக்காவில் இருக்கிற ஊரடங்கு உத்தரவின் நிலை என்ன ? ஊரடங்கு உத்தரவால் வைரஸ் பரவுதல் கட்டுக்குள் வந்திருக்கா?**

நாங்க ஊரடங்கு உத்தரவின்பேரில் மூன்று வாரங்கள் வீட்டுக்குள்ள கட்டுப்பட்டு இருக்கோம். முதல்ல இந்த அறிவிப்பு உத்தரவு வந்தபோது மக்களை நான் பார்க் போன்ற இடங்களில் பார்த்தேன். அப்போ அவங்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரியல. ஆனால் தற்போது பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மக்களுக்கு அதிக விழிப்புணர்வு கிடைத்தது. வீட்டுக்குள்ளே அதிகமா இருக்காங்க. வீட்டுக்குள் இருக்கிறதுனால நன்மைகள் கிடைக்குமா என்றால், கண்டிப்பாக கிடைக்கும். சமூக பரவல் மிக அதிகமான அளவு குறையும்போது மருத்துவர்களுக்கும் அதனை குணப்படுத்துவதற்கான நேரம் கிடைக்கும். அதனால ஊரடங்கு உத்தரவு தேவையானது தான் . மக்கள் அதற்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்களா என்பது பற்றி எனக்கு தெரியல. ஆனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டுக்குள்ள பெரும்பாலான மக்கள் இருக்கின்றனர் என உறுதியாக சொல்ல முடியும்

**அமெரிக்கா பொதுவாகவே ஒரு வலிமையான மருத்துவ அமைப்புக்காக பெயர் பெற்ற நாடு. அந்த நாட்டில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் இறப்புகளுக்கு மேல் நடக்கும்னு சொல்லிருக்காங்க ஏன் இந்த நிலைமை?**

ஆமா அமெரிக்கால மிகச்சிறந்த டாக்டர்கள் பலர் இருக்காங்க. அதேபோல மருத்துவ அமைப்புகளும் அமெரிக்காவில் இருக்கு. இந்தியாவிலும் மிகவும் சிறந்த மருத்துவமனைகளும் மருத்துவர்களும் இருக்காங்க என்பது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம். ஆனால் நல்ல மருத்துவர்கள் நிறைய பேர் இருக்காங்க என்ற ஒரே ஒரு காரணத்தை வைத்து அனைவருக்கும் நல்ல விதமான சிகிச்சைகள் கிடைக்குதா அப்படிங்கறது ஒரு மிகப்பெரிய கேள்விக்குரிய விஷயம்.

அமெரிக்காவில் சிறந்த மருத்துவர்கள் பலர் இருந்தாலும் ஏழை பணக்காரர் வேறுபாடு அதிகமாவே இருக்கு. பணக்காரர்கள் மிகச் சிறந்த மருத்துவத்தை அவங்க கிட்ட இருக்கும் காசு மூலம் எளிமையாக எடுத்துக்கொள்ள முடியும் . ஆனால் ஏழைகள் அவர்களுக்கு தேவையான இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளாமல் இருக்கும் ஒரே காரணத்தினால் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் கிடைக்காமல் போவது நிறைய நடக்குது. தற்போது நடக்க இருக்கிற 2020 – க்கான தேர்தலிலும் இந்த இன்ஷூரன்ஸ் ஒரு பெரிய முக்கியத்துவத்தை பெற்று இருக்கு. அனைவருக்கும் ஒரே வகையான பணத்தை பெற்றுக்கொண்டு அனைவருக்கும் ஒரே வகையான சிகிச்சை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யக் கூறி பலரும் கோரிக்கை வச்சிருக்காங்க. இதன் மூலமா யாரு எந்த இன்ஷூரன்ஸ் வச்சிருக்காங்கன்னு பார்க்கப்படாமல் அனைவருக்கும் தேவையான சிகிச்சை பெறுவதற்கு வழிவகை செய்யப்படலாம். இது போலவே இந்தியாவிலும் பல பிரச்சினைகள் நடந்துட்டு தான் இருக்கு. அரசாங்க மருத்துவர்களையோ அல்லது செவிலியர்களையோ நான் குறைசொல்லல. ஆனா தனியார் மருத்துவமனைகளில் இருக்கிற வசதிகளை ஒப்பிடும்பொழுது அரசாங்க மருத்துவமனைகளில் வசதிகள் மிகக் குறைவா இருக்கு. தனியார் மருத்துவமனைகளும் பணத்துக்காக பல விஷயங்கள் செய்வதால் உண்மையான தரமான மருத்துவ சேவைகள் பலருக்கும் கிடைப்பதில்லை. இந்த இரண்டு நாடுகளுக்கும் பொதுவாக இருக்கிற பிரச்சனை இது.

**சீனாவில் பரவத் துவங்கிய போதே, ஒரு கொடூரமான வைரஸ் உலகமெங்கும் பரவ உள்ளது என தெரியும். ஆனா அப்படி இருந்தும் ஏன் எந்த நாடுகளும் உலகத்துல இதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கல?**

உலகத்தில் பல நாடுகளில் சுகாதாரத் துறைக்கு மக்களுக்காக செலவிட வேண்டிய பணத்தை எடுத்து வேறு ஏதாவது துறைகளில் செலவிடுவது கடந்த சில வருடங்களாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கு. அதனால சிறப்பான மருத்துவ அமைப்புகள் என்பது நிறைய இடங்கள்ல குறைஞ்சிக்கிட்டே வருதுன்னு சொல்லலாம் .அப்படி ஒருவேளை சிறப்பான மருத்துவ அமைப்பு இருந்தாலும் மக்களுக்கு முழு தகவல்கள் போய் சேரும் போது மட்டும் தான் அவங்க பாதுகாப்பா தங்களை காத்துகொள்ள முடியும். ஆனால் அப்படியான முழு தகவல்களும் மக்களுக்கு கிடைக்கல. அப்படி தகவல்கள் தெரிந்தாலும் அதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க விடாமல் அரசியல்வாதிகள் பார்த்துக் கொண்டார்கள். இன்னும் இந்தியா போன்ற நாடுகளில் 1.3 க்கும் குறைவான ஜிடிபி மட்டும்தான் சுகாதாரத் துறைக்கு சென்று சேருகிறது. சாதாரண மருத்துவ செலவுகளுக்கு இது குறைவாக இருக்கிற நிலையில் இது போன்ற தொற்று நோய்கள் எல்லாம் சூழ்நிலையை இன்னும் மோசமாக மட்டுமே ஆக்கும். இந்தியா மட்டும் இல்ல அமெரிக்கால இங்கிலாந்துல கூட இதே நிலைமை தான் இருக்கு

** உங்களின் அனுபவத்தின் மூலமாக இந்தியாவுக்கு குறிப்பா தமிழ்நாட்டுக்கு நீங்கள் சொல்லக்கூடிய அட்வைஸ் ஏதாவது இருக்கா?**

உலகளாவிய தோற்று நோய் ஒன்ற நாம் இப்போ சமாளிச்சுக்கிட்டு இருக்கோம். குறிப்பா தமிழர்களுக்கு மட்டும் அப்படின்னு சொல்றதுக்கு எந்தவிதமான ஒரு அறிவுரையும் இல்லை. ஆனா பொதுவா நான் என்ன சொல்லனும்னு விரும்புறேனா தமிழ்நாட்டுல நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு. மற்ற மாநிலங்களை விட கொஞ்சம் சிறந்த சுகாதாரத் துறையும் சிறந்த கல்வி நிறுவனங்களும் இருக்கு. அதேபோல நம்மகிட்ட பல குறைகளும் இருக்கு. முதல் குறையா என்ன நான் சொல்ல போறேன்னா சாதி மற்றும் அந்தஸ்து. 69 சதவிகித இட ஒதுக்கீடு இருந்தும், இன்னிக்கும் பெரும்பாலான வளங்கள் உயர்சாதியினர் என்று சொல்லப்படுபவர்களால் தான் அனுபவிக்கப்பட்டு வருது. உங்களுக்கு ஒரு வீடு இருந்து மாசா மாசம் சம்பளம் வரும் ஒரு வேலை இருந்தனால் நீங்க ஒரு அதிர்ஷ்டசாலி. ஆனா உங்கள போல இருக்கிறவங்க ஒரு சின்ன சதவீதம் மட்டும்தான். உங்களைப் போன்றவங்கதான் மற்றவர்களுக்கு உதவணும்.

நீங்க செய்யவேண்டிய சின்னச்சின்ன விஷயங்களா நான் எதும் சொல்லுவேன்னா,உங்க வீட்டில் வீட்டுவேலை செய்பவர்களுக்கு இந்த மாதிரியான ஒரு தொற்றுநோய் சமயத்தில் விடுமுறை கொடுங்க. அதுமட்டுமில்லாம அவங்களுக்கு மாத ஊதியமும் கொடுங்க. சைவம் சாப்பிடுறவங்களுக்கு தான் வீடு வாடகை கொடுப்போம்னு சொல்லும் பலரை நானே நிறைய கேள்விப்பட்டிருக்கேன். என்னதான் உணவுமுறையை பத்தி சொல்ற மாதிரி இருந்தாலும் இது முழுக்க முழுக்க ஒரு சாதியை அடிப்படையா வச்சு சொல்ற ஒரு விஷயம் தான். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுக்கிற மருத்துவர்களையும் செவிலியர்களையும் வீட்டை காலி பண்ணிட்டு வெளியே போக சொல்ற செய்திகளை நிறைய கேள்விப் பட்டேன். அதுபோல சொல்லாதீங்க. உங்கள் சக்திக்கு முடிஞ்ச அளவு உதவிகளை அவர்களுக்கு செய்யுங்க. சாயந்திரம் அஞ்சு மணிக்கு வெளியே வந்து தட்டுகளை தட்டுவது மூலமாக இந்த வைரஸ் முடிவுக்கு வராது. அதனால உங்களால முடிஞ்ச உதவிய அத்தனை பேருக்கும் செய்யுங்கள்.

அடுத்து ரொம்ப முக்கியமான மூன்றாவது விஷயம் உங்களுடைய ஓட்டு. ஓட்டு போடுவது மிகப்பெரிய பொறுப்பு. நீங்க ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தவங்க எல்லாருமே மக்களுக்கு வேலை செய்றவங்க தான், அது மேயராக இருக்கலாம் முதலமைச்சரா இருக்கலாம், பிரதமரா இருக்கலாம். அவங்க மக்களுக்கு வேலை செய்ற பொறுப்புணர்வோடு இருக்காங்களா அப்படிங்கறத யோசிங்க. அதனால ஓட்டு போடும்போது அதை மனசுல வச்சுக்கோங்க. தமிழ் நாட்டில் வெள்ளம் வந்தபோது எல்லாரும் சேர்ந்து உதவி பண்ண மாதிரி இந்த சூழ்நிலையில் இருந்து மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளிய வருவதற்கு அனைவரும் சேர்ந்து முயற்சி செய்யணும்” என்று முடித்தார் சுசித்ரா விஜயன்,

**-பவித்ரா குமரேசன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *