மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

வீட்டிலேயே இருந்தால் ஃப்ரிட்ஜ், பீரோ பரிசு!

வீட்டிலேயே இருந்தால் ஃப்ரிட்ஜ், பீரோ பரிசு!

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் பொதுமக்களுக்கு, ஃப்ரிட்ஜ், பீரோ, குக்கர் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவையும் மீறி பலர் வெளியில் சென்று கொண்டுதான் இருக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காகச் செல்பவர்கள் கூட சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது இல்லை என்று போலீசார் குமுறுகின்றனர்.

சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்க வில்லை என்றால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. எனினும் சில இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றப் படாததால் போலீசார் பொதுமக்களுடன் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், வீட்டிலிருந்தவாறே முறையாக சமூக இடைவெளியை கடைப்பிடிப்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் உள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழகத்திலேயே திண்டுக்கல் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் 2500 ரூபாய் மதிப்பிலான 39 வகையான மளிகை பொருட்கள் ரூ.2000த்துக்கு வழங்கப்படுகிறது. அதுபோன்று 13 வகையான காய்கறிகள் தொகுப்பு ரூ. 100க்கு வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “வீட்டில் இருந்தவாறே பொதுமக்கள் முறையாக சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் மாநகராட்சி சார்பில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசாக ஃப்ரிட்ஜ், இரண்டாம் பரிசாக 2 பேருக்குப் பீரோ, மூன்றாவது பரிசாக 3 பேருக்குக் குக்கர் மற்றும் பட்டுச்சேலை ஆகியவை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

-கவிபிரியா

சனி, 4 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon