மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை! நடந்தது என்ன?

மதத் தலைவர்களுடன்  தலைமைச் செயலாளர்  ஆலோசனை!  நடந்தது என்ன?

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சில நாட்களாக முஸ்லிம் சமூகத்தினரைக் குறிவைத்து சமூக தளங்களில் தொடர் விமர்சனங்கள் வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள், அதே மாநாட்டில் வெளிநாட்டுப் பிரநிதிகளும் கலந்துகொண்டதால் வைரஸ் தொற்றுக்கு ஆளாகினர். ஆயிரக்கணக்கான பேர் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்குத் திரும்பியதால் அவர்கள் மூலம் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் அவர்கள் தானாக முன் வந்து அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று சோதனை செய்துகொள்ள வேண்டும் என்று தமிழக அரசும் முதல்வரும் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில்தான் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் அனைத்து மதத் தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், ஜைனம், சீக்கியம் உள்ளிட்ட பல சமயப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாபித் அமைப்பின் செயலாளர் ஷுகதேவானந்தா, பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைவர் சகோதரி பீமா, தமிழ்நாடு சுன்னத் முஸ்லிம் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் உள்ளிட்ட இஸ்லாமிய தலைவர்கள், சென்னை-மயிலை கத்தோலிக்க திருச்சபை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, ஸ்ரீகுருநானக் சத்சங் சபாவின் பொதுச்செயலாளர் பல்பிர் சிங் உள்பட 45 பேர் பங்கேற்றனர். அவர்களுடன் தலைமைச் செயலாளர் தனித்தனிக் குழுக்களாக ஆலோசனை நடத்தினார்.

ஒவ்வொரு குழுவினரோடும் அரைமணி நேரத்துக்கும் குறையாமல் தனித்தனியாக ஆலோசனை நடத்திய தலைமைச் செயலாளர் இஸ்லாமியப் பிரமுகர்களோடு அதிக நேரம் பேசினார். ஒன்றரை மணி நேரம் நடந்த ஆலோசனையில் இருபது நிமிடம் தலைமைச் செயலாளரே பேசினார். அப்போது அவர் கொரோனா என்றால் இந்தியாவுக்கே புதியது என்றும், அதில் எப்படியெல்லாம் சோதனை நடத்தப்படுகிறது என்பது பற்றியெல்லாம் விளக்கினார். பின் இஸ்லாமிய மதப் பிரமுகர்கள், இந்த வைரஸ் ஏதோ இஸ்லாமியர்களால் பரப்பப்படுகிறது என்று ஊடகங்களில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருவதைக் குறிப்பிட்டனர்.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய உறுப்பினரும், ஐயுஎம் எல் கட்சியை சேர்ந்த பாத்திமா முசாபர்,

”கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தனிமைப்படுத்தப்பட்டவர்களின் குடும்பங்கள் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். அதை அரசு கவனிக்க வேண்டும்.

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் இஸ்லாமியர்களுக்கு சிகிச்சை அளிப்பதில்லை. தனியார் மருத்துவமனைகளுக்கு இப்படி ஒரு வாய்மொழி உத்தரவு வந்திருப்பதாக சொல்கிறார்கள். அரசு அப்படி இல்லை என்று மறுத்தும் கூட பல தனியார் மருத்துவமனைகளில் இதுவே நிலையாக இருக்கிறது. முஸ்லிம் குடியிருக்கும் வாடகை வீடுகளை வெளியேறச் சொல்லி நிர்பந்திக்கப்படுகிறார்கள். அரசாங்கம் இதையெல்லாம் கண்டுகொள்ளவேண்டும். ஏதோ சில நூறு பேர் ஒரு மாநாடுக்கு சென்று வந்ததை வைத்து ஒட்டுமொத்த சமுதாயத்தையும் நோய் பரப்பும் சமுதாயமாக மாற்ற சிலர் துடிப்பதை அரசு அறிந்து நடவடிககை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

அப்போது தலைமைச் செயலாளர், “ வதந்தி பரப்புகிறார்களா தகவல் வெளியிடுகிறார்களா என்று ஊடகங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று கூறினார்.

தமிழ் மாநில ஜமாதுல் உலமா செயலாளர் அன்வர் பாதுஷா, “தமிழகத்தில் பொதுவாக கொரோனா தொற்றினை இஸ்லாமியர்களுடன் சம்பந்தப்படுத்துவது சமூக வெறுப்புணர்வை உண்டாக்கும். அரசு அப்படி நடக்கவில்லை என்று நம்புகிறோம். தனிமைப்படுத்துதலில் பல மூத்த உலமாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்கள் சமுதாயத்தின் சொத்து. நாங்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு குழு அமைத்து அந்தக் குழுவில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், இயக்கத் தோழர்கள் என இடம்பெறச் செய்கிறோம். எங்களின் இந்தக் குழு தனிமைப்படுத்தப்பட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு மன ரீதியான ஆலோசனைகள், உணவு உள்ளிட்ட பிற உதவிகள் செய்ய அனுமதிக்குமாறு வேண்டுகிறோம்” என்று கேட்க.... தலைமைச் செயலாளர் சண்முகம் உடனடியாக, ‘ஏற்கனவே மாவட்ட ரீதியாக அமைக்கப்பட்டிருக்கும் குழுக்களுடன் உங்களது குழுவையும் ஒருங்கிணைந்து செயல்பட ஏற்பாடு செய்கிறேன்” என்று பதிலளித்தார்.

மேலும், “வரக்கூடிய பத்து நாட்கள் மிகவும் முக்கியமானவை. எனவே தனிமைப் படுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து தனிமையில் இருப்பதையும் மற்றவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் சமூக விலகலையும் கடைபிடிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். குறிப்பாக மத வழிபாட்டுத் தலங்கள் இதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு உங்களின் உதவி உறுதியாக வேண்டும்” என்று கோரி, அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் தலைமைச் செயலாளர்.

இஸ்லாமிய மதத் தலைவர்களுடனான கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே கூட்டத்தில் இருந்து சுகாதாரத்துறைச் செயலாளார் பீலா ராஜேஷ் வெளியே புறப்பட்டுச் சென்றார். கூட்ட அரங்குக்கு வெளியே இருந்தவர்கள், ‘ஏன் பீலா ராஜேஷ் பாதியிலேயே வெளியேறிவிட்டார்?” என்று குழம்ப சிலரோ, ‘ கூட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வெளியே சென்றுவிட்டதாகக் கூறினர்.

நாம் விசாரித்ததில், “ஒவ்வொரு நாள் மாலை 4 மணிக்கு டி.எம்.எஸ்,. வளாகத்தில் அன்றைய கொரோனா நிலவரம் பற்றி சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மருத்துவத் துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்குப் பிறகு முதல்வரைத் தொடர்புகொள்ள வேண்டும். அதன் பின் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என அவருக்கு தொடர் பணிகள் இருந்ததால்தான் கூட்டத்தின் இடையே புறப்பட்டுச் சென்றார். வேறு எந்த சர்ச்சையும் இல்லை” என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்மிடம் தெரிவித்தனர்.

-ஆரா

சனி, 4 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon