மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

கொரோனா : பாசிட்டிவ் ரிப்போர்ட்களை ரகசியமாக வைக்க உத்தரவு?

கொரோனா : பாசிட்டிவ் ரிப்போர்ட்களை ரகசியமாக வைக்க உத்தரவு?

கொரோனா வைரஸ் பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்தவர்கள், மாவட்டம் ரீதியாக சிகிச்சை பெறக்கூடிய, அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் பட்டியல்களை வெளியிட்டுள்ள சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், இனிவரும் பாசிட்டிவ் ரிப்போர்ட்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 4ஆம் தேதி நிலவரப்படி கொரோனா பாசிட்டிவ் உள்ளவர்கள் மொத்தம் 485 பேர். அதில் பலர் டெல்லி மாநாட்டுக்குத் தொடர்பு உள்ளவர்கள் என அறிவித்துள்ளார் பீலா ராஜேஷ். கொரோனா வைரஸ் தொற்றுகளைப் பரவாமலிருக்கவும், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் சந்தேகத்துக்குரியவர்கள் அரசு மருத்துவமனை அல்லது அரசு பரிந்துரை செய்துள்ள மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு ரத்த மாதிரி மற்றும் மூக்கிலும் தொண்டையிலும் ஸ்வெப் (swap) எடுத்து டெஸ்ட்டுக்கு அனுப்பி, பாசிட்டிவ் ரிசல்ட் வந்த பிறகு அவர்களை, சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, கோவை, விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கரூர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்சி மகாத்மா காந்தி மெமோரியல் அரசு மருத்துவமனை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிவகங்கை, மதுரை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் 21 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையிலும், மேலும் 16 மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ட்ரீட்மென்ட் எடுத்துக்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையிலிருந்த மூவருக்கு பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்ததும் அவர்கள் நேற்று முன்தினம் ஏப்ரல் 3ஆம் தேதி, காலை ஆம்புலன்ஸ் மூலமாகச் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர், நேற்று( ஏப்ரல் 4), விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலிருந்தவர்களில் நான்கு பேருக்கு பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்துள்ளது. அதுபோன்று கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்தவர்களில் ஒருவருக்கு பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்துள்ளது, இந்த5 கொரோனா பாசிட்டிவ் நோயாளிகளை, சுகாதாரத் துறை செயலாளர் ஆணைப்படி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்காமல், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஒரு சிறப்பு வார்டு ஏற்படுத்தித் தங்க வைப்பதால் அங்குள்ள டாக்டர்களும் செவிலியர்களும் இதுகுறித்து உயரதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு உயரதிகாரிகள் சொன்ன பதில் டாக்டர்களையும் செவிலியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. காரணம், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த பிஜி படிக்கும் கோவை மாணவிக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பதாகவும் அவருக்கு வைரஸ் பாதிப்பு குணமடையும் வரையில் சிதம்பரத்திற்கு கொரோனா நோயாளிகளை அனுப்பவேண்டாம் எனக் கூறியதால், கலெக்டர் அன்புச்செல்வன், கடலூர் மருத்துவமனையிலேயே தனி வார்டில் தங்க வைக்க உத்தரவு கொடுத்ததால் தங்கவைக்கிறோம் எனப் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

கொரோனா நோயாளிகளுக்குச் சிறப்புச் சிகிச்சையும் வசதியும், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கும் மருத்துவமனையைத் தேர்வு செய்துதான் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் குறிப்பிட்ட மருத்துவமனையைத் தேர்வு செய்து உத்தரவு போட்டுள்ளார்

ஆனால், ஐந்து கொரோனா பாசிட்டிவ் நோயாளிகளைக் கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் வைத்திருப்பது விஷபரீட்சை என்கிறார்கள் செவிலியர் சங்கத்தின் நிர்வாகிகள். கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் யாருக்கும் தெரியக்கூடாது மாவட்ட ஹெல்த் இன்ஸ்பெக்டருக்குகூட தெரியாத அளவுக்கு ரகசியத்தை வைத்திருக்க வேண்டும் என்பது சரியானதல்ல என்று அரசு மருத்துவர்கள் வட்டாரத்தில் கவலை தெரிவிக்கின்றனர்.

-வணங்காமுடி

ஞாயிறு, 5 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon