மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

போலீசார் தாக்கியதில் இறைச்சி கடைக்காரர் உயிரிழப்பு?

போலீசார் தாக்கியதில் இறைச்சி கடைக்காரர் உயிரிழப்பு?

மதுரை அருகே கோழிக்கறிக் கடை நடத்தி வந்த முதியவரை போலீசார் தாக்கியதில், காயமடைந்து உயிரிழந்ததாகப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி கடைவீதியில் பல ஆண்டுகளாகக் கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தவர் அப்துல்ரஹீம் (70). மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கறிக்கடைகளை மூட அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், அதனையும் மீறி அப்துல் ரஹீம் கடையைத் திறந்து வைத்திருந்ததாகவும், இதனால் கடைக்கு வெளியே மக்கள் கூட்டம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த மூன்று போலீசார் கடையை மூட சொல்லி அங்கிருந்தவர்களையும் களைய செய்துள்ளனர். அப்போது அப்துல் ரஹீம் உறவினர் ஒருவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். வாக்குவாதம் முற்றவே அவரை தடுக்க சென்றிருக்கிறார் அப்துல் ரஹீம். இதில் போலீசார் தாக்கியதில் அப்துல் ரஹீமுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரது இறப்புக்கு போலீசார்தான் காரணம் என்று கூறி அப்துல் ரஹீம் உடலுடன் இன்று காலை கருப்பாயூரணி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் பலர் ஒன்று கூடியது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்தபோலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி அப்துல் ரஹீமைத் தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். எனவே போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

-கவிபிரியா

திங்கள், 6 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon