முஸ்லிம் வியாபாரிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்! -கண்ணீர் கடிதம்!

public

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குக் காரணம் இஸ்லாமியர்களே என்ற வதந்தி சில ஊடகங்களாலும், சமூக தளங்களில் கணிசமானோராலும் முன்னெடுக்கப்பட்டதால், சமுதாயத்தின் கீழ் நிலையில் இருக்கும் முஸ்லிம் வியாபாரிகளின் நிலை சொல்லொணா துயரத்துக்கு உள்ளாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா தொற்றுக்கும் தப்லீக் மாநாட்டுக்கும் தொடர்புபடுத்தி செய்திகள் பரப்பப்படுகின்றன. ஒட்டுமொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 33% மட்டுமே பேர் தப்லிக் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்று மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளார் லவ் அகர்வால் குறிப்பிட்ட பிறகும்.. ஒட்டுமொத்த கொரோனா தொற்றும் முஸ்லிம்களால் ஏற்பட்டது போல ஒரு தோற்றம் கட்டமைக்கப்படுகிறது. அரசுத் துறைகளுக்கும் இஸ்லாமிய தலைவர்களுக்கும் இடையே கலந்துரையாடல்கள் நடந்தும் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது போல தெரியவில்லை.

இந்த நிலையில்தான் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து மனித நேய மக்கள் கட்சி தலைமைக்கு ஓர் முஸ்லிம் வியாபாரி வாட்ஸ் அப்பில் அனுப்பியிருக்கும் கடிதம், அக்கட்சிப் பிரமுகர்கள் மூலமாக நமக்குக் கிடைத்தது. ‘இதை வெளியிட்டு தமிழ் சமூக இணக்கத்தைக் காப்பாற்றுங்கள்’ என்று அவர்கள் வேண்டுகோள் வைத்தனர்.

அந்தக் கடிதம் இதோ…

“அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!

இன்று நிலவிவரும் அசாதாரண சூழலில் நம் சமுதாய மக்களை தனிமைப்படுத்தும் வேலைகள் அதிகமாகி வருகிறது. இதனால் மேல்தட்டு மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு தற்போது மிகப்பெரிய பாதிப்புகள் இல்லையென்றாலும், அடித்தட்டு முஸ்லிம் மக்களுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுகின்றன. முஸ்லிம் சிறு வியாபாரிகளிடம் காய்கறி, பால், மாவு போன்ற அத்யாவசிய பொருட்களை கூட மக்கள் வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். சில பகுதிகளில் முஸ்லிம்கள் சென்று வருவதே தடைசெய்யப் படுகிறது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் பகுதியான- காலனி பகுதிகள்.

எனவே, நம் தலைமை மற்ற அரசியல் கட்சி தலைவர்களை தொடர்பு கொண்டு, சமுதாய மக்கள் படும் சிரமங்களை எடுத்துக்கூறி, அந்த அந்த பகுதிகளில் சமூக ஒற்றுமை ஏற்பட வழிவகை செய்ய அவர்களின் மாவட்ட நகர நிர்வாகிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் – என கோரிக்கை வைத்தால் இங்கு மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது. மேலும், இதை வலியுறுத்தி மாற்று மத தலைவர்களிடம் நேர்காணல் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிரலாம்.

இதற்காக ஆலோசனைகளை தலைமை வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்” என்று விருத்தாசலத்தில் இருந்து முஸ்லிம் வியாபாரி ஒருவர் அக்கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.

சமூக இடைவெளியே கொரோனாவுக்கு தடுப்பு மருந்து என்று மருத்துவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில்… முஸ்லிம் இன ஒதுக்கல் நடைபெறுவதற்கான வெளிப்படையான ஆரம்ப அறிகுறி இது. அந்த வியாபாரி குறிப்பிட்டது போல மாற்று மதத் தலைவர்களிடம் இஸ்லாமிய மதப் பிரமுகர்கள் பேசி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். இல்லையேல் கொரோனா முடிந்தும் இந்த சமூக இடைவெளி நீடிக்கும் அபாயம் உண்டு.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *