மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 25 பிப் 2021

ஊரடங்கிலிருந்து பொதுத் தேர்வுக்கு விலக்கு: அமித் ஷா

ஊரடங்கிலிருந்து பொதுத் தேர்வுக்கு விலக்கு: அமித் ஷா

மின்னம்பலம்

10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம் சில விதிமுறைகளையும் வகுத்துள்ளது.

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட 10, 12ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்த மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் 10ஆம் வகுப்புத் தேர்வை நடத்துவதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், “அதிக எண்ணிக்கையிலான மாணவர்களின் கல்வி ஆர்வத்தைக் கருத்தில்கொண்டு, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை நடத்துவதற்காக ஊரடங்கு நடவடிக்கைகளிலிருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார். அதோடு, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா வெளியிட்டுள்ள அறிக்கையைப் பகிர்ந்துள்ளார்.

அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள அந்த அறிக்கையில், “ஊரடங்கு அமலில் இருப்பதால் பள்ளிகள் திறக்க அனுமதி இல்லை. மாநில கல்வி வாரியங்கள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ ஆகியவற்றால் நடத்தப்படும் பள்ளி இறுதித் தேர்வுகள் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பொதுத் தேர்வுகளை நடத்த மாநில அரசுகளும், சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்தவும் கோரிக்கைகள் வந்துள்ளன. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிகளவிலான மாணவர்கள் தேர்வு எழுத ஆர்வமாக இருக்கின்றனர் என்பது தெரியவந்தது. எனவே ஊரடங்கிலிருந்து பொதுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில வழிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. அதில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேர்வு மையம் அமைக்கக் கூடாது.

ஆசியர்கள், மாணவர்கள் உடல் பரிசோதனை செய்ய வேண்டும். அவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும்.

அனைத்து தேர்வு மையங்களிலும் கைகளைச் சுத்தம் செய்யும் கிருமி நாசினி மற்றும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

பல்வேறு வாரியங்களும் தேர்வு நடத்தவுள்ள நிலையில், கால அட்டவணைகளை இடைவெளி விட்டு அமைத்துக்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் தேர்வு மையத்துக்குச் செல்வதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சிறப்புப் பேருந்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-கவிபிரியா

வியாழன், 21 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon