மின்னம்பலம்
ஜூன் 1ஆம் தேதியிலிருந்து ஏசி வசதி அல்லாத 200 ரயில்கள் இயங்கும் என இந்திய ரயில்வே நேற்று (மே 20) அறிவித்திருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகிறது
இந்நிலையில் ஜூன் 1 முதல் தொடங்க இருக்கும் 200 ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் பணி இன்றிலிருந்து (21/05/2020) தொடங்கியுள்ளது .
டிக்கெட் முன்பதிவுக்கு வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள்
1)ஆன்லைனில் அல்லது ஐஆர்சிடிசி செயலியின் மூலமாக மட்டும்தான் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவு செய்யும் கவுண்டர்கள் இயங்காது.
2)முன்பதிவு செய்வதற்கான காலகட்டம் 30 நாட்கள்.
3)விதிகளின் படி பயணிகளின் காத்திருப்பு பட்டியல் வெளியிடப்படும். ஆனால் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகள், பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
4)பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் பயணத்தின் போதோ அல்லது அதற்கு முன்னதாகவோ விநியோகிக்க படாது.
5)ரயில்களில் தட்கல் புக்கிங் இல்லை.
6)ரயில்கள் கிளம்புவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு முதல் பயணிகள் அட்டவணையும், இரண்டு மணி நேரத்திற்கு முன்பு இரண்டாவது பயணிகள் அட்டவணையும் வெளியிடப்படும். இரண்டு அட்டவணைகள் வெளியிடுவதற்கு இடையில் ஆன்லைன் மூலமாக மட்டுமே டிக்கெட்டுகளை புக் செய்ய முடியும்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களை தவிர, தற்போது விடப்பட்டிருக்கும் பிற ரயில்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோருக்கு உதவியாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே 200 ரயில்களுக்கான அட்டவணையை இந்திய ரயில்வே வெளியிடப்பட்டுள்ளது. இந்த 200 ரயில்களில் தமிழகத்திற்காக எந்த ரயில் சேவையும் இடம் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் தமிழக பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
- பவித்ரா குமரேசன்