மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 25 பிப் 2021

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்கள் 3 மடங்கு அதிகரிப்பு!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்கள் 3 மடங்கு அதிகரிப்பு!

மின்னம்பலம்

பத்தாம் வகுப்புத் தேர்வு நடத்துவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்,

ஜூன் 15 முதல் 25ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தலாம் என்று புதிய அட்டவணையைப் பள்ளிக் கல்வித் துறை நேற்று முன் தினம் வெளியிட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு முற்றிலுமாக முடிந்த பிறகு தேர்வை நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதே சமயத்தில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தி அதன் பிறகு தேர்வை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ( மே 21) ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று விவாதித்தது குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியிடப்படும்.

மற்ற மாநிலங்களில் தேர்வுகள் முடிந்து விடைத்தாள் திருத்தும் பணிகளும் நிறைவடைந்துள்ளது. 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களும், 1ஆம் தேதி முதல் ரயில்களும் இயக்கப்படவுள்ளன. இதனை எல்லாம் கருத்தில் கொண்டு தேர்வு பணிகளை அரசு எடுத்திருக்கிறது.

பத்தாம் வகுப்புத் தேர்வு மையங்கள் 3,684 இல் இருந்து, 3 மடங்கு அதிகரித்து 12,674 மையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அச்சமின்றி அந்தந்த பகுதிகளிலேயே தேர்வு எழுதலாம். மலைகிராம மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

-கவிபிரியா

வியாழன், 21 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon