மின்னம்பலம்
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 295 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.
15ஆவது நிதிக் குழு பரிந்துரையின் பேரில் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு தமிழகத்துக்குக் குறைந்த அளவிலான நிதியே ஒதுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு வரி வருவாயை அதிகமாக அளிக்கும் மாநிலமான தமிழகத்துக்குக் குறைந்த நிதி ஒதுக்கப்படுவதாகவும், 15ஆவது நிதிக் குழு பரிந்துரையை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இதனிடையே நேற்று மாநிலங்களுக்கான வரிப் பகிர்வில் 1,928 கோடி ரூபாயைத் தமிழகத்துக்கு ஒதுக்கியது மத்திய நிதியமைச்சகம். இதுவும் குறைவாக இருப்பதாகவே குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை மானிய தொகை 5005.25 கோடியை 28 மாநிலங்களுக்கு மத்திய நிதித் துறை அமைச்சகம் நேற்று (மே 20) விடுவித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டுள்ள இந்த முக்கியமான நேரத்தில் மாநிலங்களின் நிதி ஆதாரத்துக்கு இது உதவியாக இருக்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 15ஆவது நிதிக் குழு பரிந்துரையின் பேரில் இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்துக்கு 816.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்து பிகாருக்கு 502 கோடி ரூபாயும், மத்தியப் பிரதேசம் மாநிலத்துக்கு 330 கோடி ரூபாயும், ராஜஸ்தானுக்கு 324.25 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்துக்கு 321.50 கோடி ரூபாயும், மகாராஷ்டிராவுக்கு 305 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Update:Financial Resources to States
— Office of Mr. Anurag Thakur (@AnuragOffice) May 20, 2020
Rs 5005.25cr
Released by @FinMinIndia as 1st installment of untied basic grants ‘in advance’ fr Non-Million-plus cities to 28 states,pending finalisation of the operational guidelines.
This provides states w/ additional financial resources. pic.twitter.com/m7z6J2KSQH
தமிழகத்துக்கு 295.25 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதுபோலவே நமது அண்டை மாநிலங்களான ஆந்திராவுக்கு 248 கோடியும், கர்நாடகாவுக்கு 247.75 கோடியும், கேரளாவுக்கு 111.25 கோடி ரூபாயும், தெலங்கானாவுக்கு 105.25 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
எழில்