மின்னம்பலம்
ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்கும் ரெயில் போக்குவரத்துக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கி, இரண்டு மணி நேரத்தில் ஒன்றரை லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. அதேநேரம் தமிழகத்துக்கு ரெயில்கள் இயக்கப்படாததால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஊரடங்கு தொடங்கியவுடன் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல கடந்த 1ஆம் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 12ஆம் தேதி முதல் டெல்லிக்கும், 15 நகரங்களுக்கும் இடையே சிறப்பு ரெயில் போக்குவரத்து தொடங்கியது.
இந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதி முதல் தினமும் 200 ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் அறிவித்தார். அந்த ரெயில்களின் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
17 ஜனசதாப்தி ரெயில்கள், 5 துரந்தோ ரெயில்கள், சம்பர்க் கிராந்தி ரெயில்கள், பூர்வா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகியவையும் அவற்றில் அடங்கும். இவற்றில் ஏ.சி பெட்டிகள், ஏ.சி அல்லாத பெட்டிகள் உள்ளன. இவை, வழக்கமான ரெயில்கள் நேரத்தில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் ஆகும்.
ஆனால், தமிழ்நாட்டுக்கு எந்த ரெயிலும் இல்லை. தமிழகத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். மேலும் தமிழகத்துக்குள்ளயே பலர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் உணவுக்குக்கூட வழியின்றி தினம் தினம் அவதியுற்று வருகின்றனர்.
இதற்கிடையே, நேற்று (மே 21) காலை 10 மணிக்கு இந்த ரெயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் 1,49,025 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. இவை 2,90,510 பயணிகள் பயணிப்பதற்கான டிக்கெட்டுகள் ஆகும்.
-ராஜ்