ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதற்கு பிறகு இன்று மூன்றாவது முறையாக செய்தியாளர்களை சந்தித்தார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ். அவர் கூறும் போது, “உலக பொருளாதாரம் மோசமாக உள்ள இந்த நிலையில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியும் 2020-21 ஆவது ஆண்டின் முதல்பாதியில் குறைவாகவும், அடுத்த பாதியில் பழைய நிலைக்கு திரும்புவதற்கான வளர்ச்சியும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் ஆண்டின் இரண்டாவது பாதியில் மீண்டும் பழைய நிலைக்கு வளர்ச்சி திரும்பும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ள அவர், ஆனால் பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்புவது கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வாறு குறைகிறது என்பதை பொருத்தே அமையும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் தேவைகளில் ஏற்பட்டிருக்கும் மந்தநிலை, பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதில் ஏற்பட்டிருக்கும் தொய்வு ஆகியவற்றால் இந்தியா பாதிப்படைந்து உள்ளதாகவும், ஏற்கனவே வளர்ச்சி குறைவு மற்றும் தேவைகள் குறைவு நிலவிய போது வைரஸ் பாதிப்பு வந்து சேர்ந்ததால் அவை மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவின் அந்நியச் செலாவணி மதிப்பு 2020-21 ஆம் ஆண்டின் ஏப்ரல் 1-ல் இருந்து 9.2 பில்லியன் அதிகரித்துள்ளதாகவும் மே 15 வரை கணக்கிடும்போது 487 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அன்னிய செலாவணி மதிப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்
மேலும், “ரெப்போ வட்டி விகிதம் 0.4 புள்ளிகள் குறைக்கப்படுகிறது, அதன்படி வட்டி விகிதம் 4.40 சதவீதத்திலிருந்து 4 சதவிகிதமாக குறைந்துள்ளது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 சதவீதமாக குறைந்துள்ளது. வீடு வாகன கடன்கள் மீதான வட்டி குறைவதற்கு வாய்ப்புள்ளது ஏற்கனவே வங்கிக் கடன் தவணை செலுத்த 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது கடன் தவணை செலுத்த மேலும் மூன்று மாத காலம் கூடுதல் அவகாசம் அளிக்கப்படும்.
பல்வேறு துறைகளுக்கான உள்நாட்டு தேவை கவலையளிக்கும் அளவுக்கு குறைந்துள்ளது. சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூபாய் 15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது, தற்போது மேலும் 3 மாதங்களுக்கு சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறிய சக்திகாந்த தாஸ், அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயரலாம் எனவும் கூறியுள்ளார்.
- பவித்ரா குமரேசன்