இந்திய வம்சாவளியினருக்கு வெளிநாட்டில் பிறந்து, வெளிநாட்டு உரிமம் உள்ளவர்கள் இந்தியாவில் தங்கி வேலை பார்ப்பதற்காக வழங்கப்படும் சிறப்பு உரிமையான OCI கார்டு வைத்திருப்பவர்கள் நாடு திரும்பலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (மே 22) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த மார்ச் இறுதியில் சர்வதேச விமானச் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் திரும்ப விரும்பிய பலர் நாடு திரும்ப முடியாமல் சிரமப்பட்டனர்.
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் கோரிக்கையை ஏற்று வந்தே பாரத் மிஷன் திட்டத்தில் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
15ஆயிரம் பேர் இதுவரை 64 விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் வெளிநாட்டில் OCI கார்டு வைத்திருப்பவர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
இந்நிலையில், Overseas Citizens of India card holders எனப்படும் இந்திய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் தாயகம் திரும்பலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த கார்டை வைத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் உறவினர்களின் இறப்பு,
அவசர மருத்துவச் சிகிச்சை என அவசர தேவைக்காக இந்தியா வர அனுமதி வழங்கப்படுகிறது
கணவன் - மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் இந்தியராக இருந்து மற்றொருவர் ஓசிஐ கார்டு வைத்திருந்தால் நாடு திரும்பலாம்.
இந்தியர்களுக்குப் பிறந்த OCI கார்டு வைத்திருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் இந்தியாவுக்கு வரலாம். அவர்களது பெற்றோர்கள் கண்டிப்பாக இந்தியாவில் இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-கவிபிரியா