மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

புதுச்சேரியில் ஒயின் ஷாப் திறப்பதில் தொடரும் சிக்கல்: ஏன்?

புதுச்சேரியில் ஒயின் ஷாப் திறப்பதில் தொடரும் சிக்கல்: ஏன்?

மின்னம்பலம்

ஊரடங்கு உத்தரவு காலத்தில் தளர்வுகளை ஏற்படுத்தி பல மாநிலங்களில் ஒயின் ஷாப்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில் புதுச்சேரியில் ஒயின் ஷாப்களைத் திறப்பதில் சிக்கல்கள் நீடித்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. ஊரடங்கு அமலில் இருக்கும் காலத்தில் அரசுக்கு வருமானத்தை ஈட்டும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒயின் ஷாப்கள் திறக்கப்பட்டு வருகிறது. உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் சென்று போராடி அதன் பிறகு டாஸ்மாக் கடைகளைத் தமிழக அரசு திறந்துள்ளது.

ஆனால், புதுச்சேரியில் மட்டும் ஒயின் ஷாப்களைத் திறக்க முடியாமல் துணைநிலை ஆளுநரிடம் அன்றாடம் போராடி வருகிறார்கள் ஆட்சியாளர்கள். மூன்று நாட்களுக்கு முன்பு முதல்வர் நாராயணசாமி, அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, அதன் பிறகு மது விலையில் 50 சதவிகிதத்தை உயர்த்தினார். இதனால் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி மூலம் அதிகமாக வருமானம் வரும் என்று, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து ஆட்சியாளர்கள் கோப்புகளைச் சமர்ப்பித்தனர்.

அமைச்சர்களைப் பார்த்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, 50 சதவிகிதம் உயர்த்துவதைவிட ஒயின் ஷாப்களுக்கு டெண்டர் வைத்தால் அதிகமாக லாபம் வரும் என ஆலோசனைகள் சொன்னபோது, அமைச்சர்கள் முகத்தில் ஈயாடவில்லையாம். காரணம், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 500 ஒயின் ஷாப்களில் 99 சதவிகிதம் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அவர்களிடம் கிரண்பேடி, கொரோனா காலத்தில் சட்டத்துக்குப் புறம்பாக கள்ளத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்த 86 ஒயின் ஷாப் மற்றும் சாராயக் கடைகள், கள்ளுக்கடைகள் 14 என மொத்தம் 100 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அவற்றை திறக்க முடியாது. அதற்கு சிபிஐ விசாரணை கேட்டுள்ளேன் என்று கூறியிருக்கிறார்.

இதனால் புதுச்சேரியில் ஒயின் ஷாப்கள் திறப்பதில் சிக்கல்கள் நீடித்து வருவதால், தமிழக டாஸ்மாக் சரக்குகளுக்குப் புதுச்சேரியில் மவுசு கூடியிருப்பதாக சொல்கிறார்கள், புதுச்சேரி ஒயின் ஷாப் உரிமையாளர்கள்.

எம்.பி.காசி

வெள்ளி, 22 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon