மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

திருப்பதி சொத்துகளை ஏலம் விடுவதை நிறுத்தி வைக்க உத்தரவு!

திருப்பதி சொத்துகளை ஏலம் விடுவதை நிறுத்தி வைக்க உத்தரவு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் சொத்துகளை விற்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, சொத்துகளை ஏலம் விடும் முடிவை நிறுத்தி வைக்கத் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் பணக்கார கோயில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோயில். இக்கோயிலுக்கு, தங்கம், வெள்ளி, லட்சக்கணக்கில் பணம், நிலம் ஆகியவற்றைப் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்துவர். இதன் காரணமாகத் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோயிலுக்குச் சொந்தமாக ஏராளமான சொத்துக்கள் உள்ளன.

எனினும் கொரோனா பாதிப்பு காரணமாகத் திருப்பதி தேவஸ்தானத்திற்கு 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் கோயில் பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாகத் தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்திருந்தார்.

எனவே தமிழ்நாடு, ஆந்திரா, ரிஷிகேஷ் ஆகிய பகுதிகளில் இருக்கும் கோயிலுக்குச் சொந்தமான 50 சதவிகித அசையா சொத்துகளை விற்கக் கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்குப் பக்தர்கள், இந்து மத தலைவர்கள், பாஜகவினர் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில். கோயில் சொத்தை ஏலம் விடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆந்திர அரசு கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

மாநில முதன்மை செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "பக்தர்களின் உணர்வுகளைக் கருத்தில்.கொண்டு திருப்பதி தேவஸ்தான பக்தர்கள் குழுவினர் போன்ற பல்வேறு பங்குதாரர்களிடம் கருத்துகளைக் கேட்டு சொத்துகளை விற்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விற்க முடிவு செய்த நிலங்களில் கோயில் கட்டலாமா அல்லது மதம் தொடர்பான விஷயங்களை மேற்கொள்ளலாமா எனப் பரிசீலிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுவரை திருப்பதிக்குச் சொந்தமான அசையா சொத்துக்களை விற்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுப்பா ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 311/1990ன் படி திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான அசையா சொத்துக்களை விற்கவோ அல்லது அடகு வைக்கவோ உரிமை உண்டு. ஆனால் சில ஊடகங்கள் மூலம் எதிர்க்கட்சியினர் தேவஸ்தானத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர். 1974 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பராமரிக்க முடியாத மற்றும் பயன்படுத்தாத சொத்துக்கள் என 129 அசையா சொத்துகள் ஏலம் விடப்பட்டு விற்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

-கவிபிரியா

செவ்வாய், 26 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon