மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

ஜூன் 1 முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்!

ஜூன் 1 முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்!

தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியிலுள்ள மீனவர்கள் ஜூன் 1ஆம் தேதியிலிருந்து மீன்பிடிக்கச் செல்லலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் 60 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மீன்பிடி விசைப்படகுகள், இயந்திரம் பொருத்திய மற்றும் பொருத்தாத நாட்டுப் படகுகள் மூலம் மீன்பிடிக்கும் பணி முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனிடையே இந்தியாவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 வரையிலான 61 நாட்களுக்கும், மேற்கு கடற்கரையில் ஜூன் 1 முதல் ஜூலை 31ஆம் தேதி வரையிலான 61 நாட்களுக்கும் விசைப்படகுகள் தனியுரிமை பொருளாதார மண்டலத்தில் மீன் பிடிக்கத் தடை வித்து மத்திய மீன்வளத் துறை ஆணை பிறப்பித்தது.

எனினும், ஊரடங்கின் காரணமாக விசைப்படகுகளின் மீன்பிடிப்பு பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு, ஊரடங்கில் விசைப் படகுகள் தொழிலில் ஈடுபடாத காலத்தை கணக்கிட்டு, மீன்பிடி தடைக்காலத்தை மாற்றி அறிவிக்குமாறு தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.

இந்த நிலையில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று (மே 26) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ஊரடங்கு காலத்தினை கருத்தில் கொண்டு இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் மே 31 வரையிலான 47 நாட்களுக்கும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 15 முதல் ஜூலை 31ஆம் தேதி வரையிலான 47 நாட்களுக்கும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் கொரோனா காரணமாக மீன்பிடிக்கச் செல்லாத தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியிலுள்ள விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1ஆம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம். மேற்கு கடற்கரையிலுள்ள மீனவர்கள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம். இதன்மூலம் விசைப்படகு உரிமையாளர்களும், ஆயிரக்கணக்கான மீன்பிடி தொழிலாளர்களும், அதனை சார்ந்துள்ளவர்களும் பயன்பெறுவர் எனவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

எழில்

செவ்வாய், 26 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon