மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

சமூக வலைதளங்களில் வைரலான ரயில் அடுக்கு பாத்திரம்!

சமூக வலைதளங்களில் வைரலான ரயில் அடுக்கு பாத்திரம்!

ரயில் அடுக்கு பாத்திரம் என்பது 14 வெவ்வேறு அளவிலான பாத்திரங்கள் ஒன்றினுள் ஒன்றாக மற்றும் ஒன்றன் மேல் ஒன்றாக முறையாக அடுக்கி வைக்கப்பட்டு ஒரு பெரிய பாத்திரத்தினுள் வைக்கப்பட்டு இருக்கும். இந்த ரயில் அடுக்கு பாத்திரம் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் பலர் இப்படி அடுக்கு பாத்திரம் ஒன்று இருப்பதையே மறந்து விட்ட நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் ஒரு வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்படி தமிழகம் மறந்த ஒரு பாத்திரத்தை அனைவருக்கும் நினைவுபடுத்தி இருப்பவர் சிவகங்கையை சேர்ந்த மீரா. இந்த பாத்திரமானது தனது பாட்டியிடமிருந்து அம்மாவுக்கு வழங்கப்பட்டதாகவும் பாட்டியின் பெயரான பத்மாசனி, அந்த பாத்திரத்தில் பொறிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

பாத்திரத்தின் மூடியை திறந்தால் அதனுள் இரண்டு காய்கறிகளைச் சமைப்பதற்கான பாத்திரம், அரிசி நீரை வடிப்பதற்கான துளைகள் கொண்ட தட்டு, வறுவல் செய்வதற்கான சட்டி, ஒரு சொம்பு, தண்ணீர் வைப்பதற்கான சிறிய பாத்திரங்கள் என வேறுபட்ட அளவில் பல பணிகளுக்கான பாத்திரங்கள் உள்ளே சீராக அடுக்கப்பட்டுள்ளன.

“இந்த பாத்திரங்களை கொண்டு ஒரு சிறிய திருமணத்துக்கு சமைத்து விட முடியும்” என்று கூறுகிறார் மீரா. இவை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது அளவில் சிறிதாக இருப்பதற்கு மட்டுமல்ல தூக்கி செல்வதற்கும் எளிதாக உள்ளது என்றும் கூறியுள்ளார். இந்த பாத்திரங்கள் குறித்து அவர் விவரிக்கும் வீடியோ யூடியூபில் அவருடைய ”பாரம்பரிய பொக்கிஷங்கள்” என்னும் சேனலில் நான்கு மாதங்களுக்கு முன்பு வெளியானது. இருந்தாலும் ஊரடங்கு காலத்தில் இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு தற்போது வைரலாகி உள்ளது.

இந்த பாத்திரத்திற்கு பெயர் ரயில் அடுக்கு பாத்திரம், இது குடும்பங்கள் நீண்ட தூரப் பயணங்களை ரயிலில் மேற்கொள்ளும்போது சமையல் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பாத்திரம். எனது பாட்டி ஒரு முறை இதில் உணவு செய்வதற்காக திருப்பதிக்கு பயணிக்கும்போது எடுத்து சென்றதாக கேள்விப்பட்டிருக்கிறேன். நாங்கள் இதை அதிகம் உபயோகப் படுவதில்லை. ஆனால் இதன் எனது குழந்தைகளுக்கு இதன் பயன்களை சொல்லிக் கொடுக்கிறேன். இதுவே நமது பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு முக்கியமான ஒரு வழியாகும் என்று கூறுகிறார் மீரா.

- பவித்ரா குமரேசன்

செவ்வாய், 26 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon