மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

வள்ளலாரின் அணையா அடுப்பு: கொரோனாவிலும் தடையில்லா அன்னதானம்!

வள்ளலாரின் அணையா அடுப்பு: கொரோனாவிலும் தடையில்லா அன்னதானம்!

கொரோனா வைரஸ் தொற்றால் ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் அங்கு அன்ன தானம் வழங்குவதும் நிறுத்தப்பட்டது. அதேபோல் பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டு வந்த அன்னதானங்களும் நிறுத்தப்பட்டன. இந்த நேரத்திலும் வடலூரில் வள்ளலார் இராமலிங்கம் அடிகளார் தோற்றுவித்த அணையா அடுப்பு, அணையாமல் அன்னதானம் வழங்கி வருகிறது. இதுகுறித்து அறிய வடலூர் வள்ளலார் ஆலயத்துக்குச் சென்றோம்.

சென்னை-கும்பகோணம், கடலூர்-திருச்சி சாலைகள் சந்திக்கும் வடலூரில் 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது சத்திய ஞான சபை. நாம் சென்றதும் நம்மை சமையல் அறைக்கு அழைத்துச் சென்றனர். பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்துகொண்டு, சமையல் பணியில் ஈடுபட்டுவந்தனர். பசுமையான காய்கறிகள் அங்கு குவிக்கப்பட்டிருந்தன.

அங்கு சமையல் பணியில் ஈடுபட்டிருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தோம்...“முதல்முதலாக 23.5.1867 அன்று அடுப்பில் கேழ்வரகு கூழ் சமைத்து இங்கு அன்னதானம் வழங்க ஆரம்பித்தோம். அதன்பிறகு 20 அடி நீளத்தில் அடுப்பு அமைத்து, அதில் நெருப்பை எடுத்துப் பற்றவைத்து சமைக்கத் துவங்கினோம். இன்றுவரை அணையாமல் பார்த்துக்கொள்கிறோம். அதேபோல் அணையா விளக்கும் இதுவரையில் அணையாமல்தான் பாதுகாத்துவருகிறார்கள்” என்று நம்மிடம் சொல்லிவிட்டு பணியைத் தொடர்ந்தார்.

காலை 11.00 மணியை நெருங்கியதும் இரண்டு பக்கமும் நீண்ட வரிசையில் நின்றார்கள். வந்தவர்கள் அனைவருக்கும் சுடச் சுடச் சாம்பார் சாதம் பரிமாறப்பட்டது. இன்னொரு பக்கம் பார்சல்கள் கட்டப்பட்டுக்கொண்டிருந்தன. எதற்கு இந்த பார்சல் என வினவியபோது, “வள்ளலார் சித்திபெற்ற இடமான கருங்குழியில் நூறுபேர் இருக்கிறார்கள். அவர்களால் இவ்வளவு தூரம் வந்து சாப்பிட்டுச் செல்ல முடியாது. அதனால் பார்சல் செய்து அனுப்பிவிடுவோம்” என்று பதில் வந்தது.

வழக்கமாக இங்கு உணவு சாப்பிட வரும் முதியவர் ஒருவர், “இங்கே அதிகமாகச் சாப்பிடக்கூடியவர்கள் யாசகர்களும், என்னைப் போன்ற ஆதரவற்றவர்களும்தான். மற்றபடி, சன்னியாசிகள், சாமியார்கள், வழிப்போக்கர்கள் சாப்பிடுவது குறைவுதான். எனது சொந்த ஊர் விழுப்புரம் பக்கம். குடும்பம், பிள்ளைகள் உண்டு, மரியாதை இல்லை. அதனால், நேரடியாக ஐயாவின் மடத்துக்கு கிளம்பி வந்துவிட்டேன். என்னைப் போன்ற ஆதரவற்றவர்கள் நிறைய பேர் இங்கு இருக்கிறார்கள்” என்று கூறினார்.

“காலையில் இட்லி, பொங்கல், அல்லது கஞ்சி கொடுப்பார்கள். மதியம் சாம்பார் சாதம், அல்லது எலுமிச்சை, தயிர் சாதம் கொடுப்பார்கள். இரவு சாப்பாடு கிடைக்கும். புயலாக இருந்தாலும், மழையாக இருந்தாலும் இங்கே மூன்று வேளை உணவு கிடைத்துவிடும். இதனால் நிம்மதியாக உயிர் வாழ்கிறேன். இங்கே யாசகர்கள் மட்டும் சாப்பிடுவதில்லை, காரில் வந்துகூட அனைவரோடும் சமமாக அமர்ந்து சாப்பிட்டு விட்டுதான் போவார்கள்” என்று ஆராயி என்பவர் கூறினார்.

தினமும் பூஜை செய்யும் சேகர் நம்மிடம் பேசும்போது, “எனக்கு சொந்த ஊர் சென்னை. இங்கே சபைக்கு வந்து 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இத்தனை வருடத்தில் காசு, பணத்தை கையால் கூட தொட்டதில்லை” என்று கூறினார்.

மேலும், “பசிப் பிணியைப் போக்கி மனிதர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று சினேகிதர்களுடன் ஆலோசனை செய்து 1865இல் சமரச வேத சன்மார்க்க சங்கத்தைத் துவக்கினார்கள். அது 1867இல் தர்மசாலையாக மாற்றப்பட்டது. அன்னதானம் வழங்க அடுப்பு பற்றவைத்து கூழ் செய்து, வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் 24 மணி நேரமும் உணவு வழங்கிவந்தார்.

வள்ளலாருக்கு உறுதுணையாக தொழுவூர் வேலாயுதம் பிள்ளை, கல்பட்டு இராமலிங்கம் ஐய்யங்கார், இறுக்கல் இரத்தினவேல், கூடலூர் அப்பாசாமி செட்டியார், காரனப்பட்டு கந்தசாமி பிள்ளை போன்றவர்கள் இருந்தார்கள். ஐயா கடைசிக்காலத்தில் கல்பட்டு இராமலிங்கத்திடம் சாவியைக் கொடுத்து நெருப்பு, அரிசி, விறகு விலைக்கு வாங்கி அன்னதானம் செய்யக்கூடாது, தர்மம் பெற்று தர்மம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு சித்தி பெற்றார். கூழ் உணவு காலம் மறைந்தது பிறகு நெல் அரிசிக் கஞ்சி போட்டோம். மக்கள் தாராளமாக தானம் செய்யத் துவங்கியதும் சாம்பார் சாதம், தயிர் சாதம், காய்கறி பிரியாணி என வழங்கிவருகிறோம். சபைக்குச் சொந்தமான மாட்டு வண்டி அக்கம் பக்கத்து கிராமங்களுக்குப் போகும்போது ஐயா வண்டிவருது என்று வீட்டிலிருக்கும் நெல் மூட்டைகள், தானியங்கள், விறகுகளை அள்ளிக் கொடுப்பார்கள்” என்று தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

சபையில் ஊழியராகப் பணியாற்றும் ஞானப் பிரகாசம், அங்குள்ள நடைமுறைகளை விவரித்தார். “நான் 42 வருடங்களாக சபையில் இருந்து வருகிறேன். தற்போது 40 ஊழியர்கள் இருக்கிறார்கள். ரூ. 7,500 முதல் 20,000 வரையில் ஊதியம் பெற்றுவருகிறார்கள். இந்த சபையின் இடம் 70 ஏக்கர். இது இல்லாமல் விளை நிலம் 12 ஏக்கர் 46 சென்ட் உள்ளது. மக்கள் கொடையாகக் கொடுத்தது, உண்டியலில் போட்டதைச் சேர்த்து கூட்டுறவு வங்கி மற்றும் ஐ.ஒ.பியில் 15 கோடி டெபாசிட் செய்துள்ளோம். அதற்கு மாதம் வட்டி பணம் 10 லட்சம் வருகிறது. அதில்தான் காய்கறிகள், மளிகை சாமான்கள் விலைக்கு வாங்குவோம், மற்றபடி அரிசி, விறகு ஆகியவற்றை இதுவரையில் விலைக்கு வாங்கியதில்லை.

நாள்தோறும் 1250 பேருக்கும் குறையாமல் சாப்பிடுவார்கள். தற்போது கொரோனா காலம் என்பதால் அதிகமாக வருகிறார்கள். அனைவருக்கும் உணவு வழங்குகிறோம். அன்றாடம் வருபவர்களுக்கு புதிய தட்டும் வாங்கிக் கொடுத்துள்ளோம்.

தற்போது ஒரு வருடத்திற்கான அரிசி கையிருப்பில் உள்ளது. நான் பார்த்த வகையில் ஒரு உண்மையைச் சொல்கிறேன். ஆயிரம் பேருக்குச் சாப்பாடு போட்டால் அன்றைக்கு 2ஆயிரம் பேர் சாப்பிடும் அளவுக்கு அரிசி, நெல் தானம் செய்வார்கள். 2 ஆயிரம் பேருக்குச் சாப்பாடு போட்டால் 4ஆயிரம் பேருக்கும் தேவையான பொருட்கள் பணம் தானம் செய்வார்கள். தானம் பெற்று அன்னதானம் செய்துவருகிறோம். தானம் செய்யும் மானிடம் உள்ளவரையில் ஐயா தோற்றுவித்த அன்னதானம் அன்றாடம் தடையில்லாமல் நடைபெறும்” என்று சொல்லி பெருமூச்சுடன் விடைபெற்றார்.

எம்பி.காசி

செவ்வாய், 26 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon